Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயிக்கப் போவது யாரு..? உச்சக்கட்ட உதறலில் தமிழகம்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை (19-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர்த்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றன. வாக்குப்பதிவுக்காக மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு முடிந்தவுடன், மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இதற்கிடையே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா., பா.ஜ.க என பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், வழக்கம்போல் அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

இதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு சமூக அமைப்புகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில், சிலவற்றில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் எனவும், சிலவற்றில் தி.மு.க ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அ.தி.மு.க, தி.மு.க தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய பதற்றம் காணப்படுகிறது.

இந்நிலையில் நாளை (19-ம் தேதி) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 10 மணிக்குள் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதற்கான முன்னணி நிலவரம் தெரிந்து விடும் என்றாலும், அனைத்து முடிவுகளும் மதியத்திற்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ