Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க வெற்றிக்கான 6 காரணங்கள்

 

2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது.  எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...


கூட்டணி கணக்கு:

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும்,  2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன.

ஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க,  கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர,  திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால்,  ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி,  அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது,  கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும்,  அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது.

சொன்னாங்க செஞ்சாங்க, செய்வாங்க...

‘மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி, விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...’ - இப்படி 2011-ம் ஆண்டு  அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது.

இதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...'  போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.

தி.மு.க மீதான பொது எதிர்ப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம்,  'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர,  'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக,  மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

ஜெயலலிதா மீதான அபிமானம்

தனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி,  இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள்  ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க,  தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடுபடாத மதுவிலக்கு

தமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து,  மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர்,  மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால்,  மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.

தேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள்,  மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன.

ஒரு ஆண்,  தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

 

அ.தி.மு.கவின் வெற்றிக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது?

மக்களை கவர்ந்த அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை
எதிரணியில் பலமான கூட்டணி அமையாதது
அதிமுகவின் நிலையான வாக்கு வங்கி
தி.மு.க மீதான மக்களின் எதிர்ப்பு மனநிலை
எடுபடாத தி.மு.கவின் மதுவிலக்கு நிலைப்பாடு
ஜெயலலிதாவின் மீதான மக்களின் நம்பிக்கை
Quiz Maker
 
 
 
 
 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close