Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி 'அரசியல் கிங்' ரங்கசாமி வீழ்ந்தது எப்படி?

 

ட்சி ஆரம்பித்து இரண்டே மாதங்களில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பலத்துடன் இருந்த புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் புதுச்சேரியில் 17 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ்- திமுக கூட்டணி.  புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களையும், 30 தொகுதிகளையும் கொண்டிருக்கும் இம்மாநிலத்தில் காங்கிரஸ்- திமுக ஒரு அணியாகவும், மக்கள் நலக்கூட்டணியும்,  என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க,   போன்ற  கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன.

மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 9,41,398 வாக்காளர்களில் 7,91,519 பேர் வாக்களித்ததால் 84.08% வாக்குகள் பதிவானது. இதில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 15 இடங்களையும், 9 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 2 இடங்களையும் பிடித்தது. அதேபோல 30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களையும், அ.தி.மு.க 4 இடங்களையும் பெற எஞ்சியிருந்த மாகி தொகுதியில் சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளதோடு அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

காங்கிரஸ் ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தன்னிச்சையாகவும், ஏதேச்சதிகாரத்துடனும் செயல்படுகிறார் என்று கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட நெருக்கடியால் கட்சியில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த இரண்டே மாதங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2011 தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்ற ரங்கசாமி, அதிமுகவை கழற்றிவிட்டு ஒரு சுயேச்சையின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தார். அப்போது ரங்கசாமி 31.75% வாக்கு வங்கியை பெற்று பிரதான கட்சியான காங்கிரசை 25.06% வாக்கு வங்கியோடு இரண்டாம் இடத்திற்கு தள்ளினார். அடுத்து வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இவர் நிறுத்திய வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற முன்னான் மத்திய அமைச்சர் நாராயணசாமி படுதோல்வி அடைந்தார்.

அந்த அளவிற்கு அசுர பலத்தோடு இருந்த ரங்கசாமி, அவரின் கோட்டை என்று சொல்லக்கூடிய இந்திராநகரில் 15,463 வாக்குகள் வாங்கியிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட 3,404 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறார் ரங்கசாமி. இதே தொகுதியில் கடந்த தேர்தலில் 16,677 வாக்குகள் வித்தியாசத்திலும், 2006 தேர்தலில் இந்திராநகர், கதிர்காமத்தையும் உள்ளடக்கிய தட்டாஞ்சாவடி தொகுதியில் 24,998 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றவருக்கு இந்தமுறை அவரது சொந்தத் தொகுதியிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள் மக்கள்.

ரங்கசாமிக்கு அடையாளமே அவரது எளிமைதான். அதுதான் அவரை வெற்றி பெறவும் வைத்தது. இன்னொன்று, முதல்வர் பதவியிலிருந்து சொந்த காங்கிரஸ் கட்சிக்காரர்களே இவரை இறக்கியதால் இவர் மீது அப்போது ஏற்பட்ட அனுதாபம். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அந்த வெற்றிக்குக் காரணம் அப்பா பைத்தியம் சாமி மட்டும்தான் என்று அவர் மீது 'பைத்தியமாகி' கூட்டணிக் கட்சிகளைக் கழட்டிவிட்டார். அரசு சம்பந்தப்பட்ட எந்த முக்கிய முடிவுகளையும் அமைச்சர்களுடன் விவாதிக்காமல் சேலம் அப்பா பைத்தியம் சாமி கோயில் அர்ச்சகர்களுடனேயே விவாதித்தார். ஆட்சியில் அமர்ந்தவுடன் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி முந்தைய ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட நான்காயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இவர் தொகுதியைச் சேர்ந்தவர்களை ஆயிரக்கணக்கில் கொல்லைப்புறமாக நியமித்தது வாக்களித்த மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

முதல்வர் வீட்டின் அருகேயே அவர் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை, காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தபோதே ஆயுள் தண்டனைக் கைதி கொலை என சட்டம், ஒழுங்கு தலைவிரித்தாடிய போதும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்பா பைத்தியம் சாமி கோயிலில் அமைதியாக அன்னதானம் செய்து கொண்டிருந்தார். பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு இளைஞர்கள் வேலை இழந்தனர். எஞ்சியிருந்த தொழிற்சாலைகள் தமிழகம் நோக்கி நகர்ந்த போதும் மௌனமாகவே இருந்தார். மத்திய அமைச்சர் நாராயணசாமிதான் புதுச்சேரிக்கு நிதி வராமல் தடுக்கிறார் என்று சொல்லி பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். சட்டம், ஒழுங்குப் பிரச்னை அதிகமானது. புதுச்சேரியின் அப்போதைய ஆளுநர் வீரேந்திரக் கட்டாரியா நேரடியாக களத்தில் இறங்கி அதை சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஆனால் இதை ரங்கசாமி விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ரங்கசாமிக்கும், கட்டாரியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. உடனே மாநில நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்று அப்போது கூட்டணியில் இருந்த மத்திய பாஜகவுடன் சொல்லி கட்டாரியாவை ஆளுநர் பதவியில் இருந்து தூக்கினார். இது புதுச்சேரி மக்களை முகம் சுளிக்க வைத்தது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் அவர்கள் ராஜ்யசபா எம்.பி பதவியை கேட்க, டெல்லிக்கு செல்லும் விமானத்தை தவறவிட்டதோடு அவர்களையும் அதோடு கழட்டி விட்டார். தன்னை அசைக்க முடியாத சக்தி என்று நினைத்துக் கொண்டதால் மத்திய அரசுடனும், அண்டை மாநிலமான தமிழக அரசுடனும் சுமுக உறவுகள் இல்லாமல் தனிமைப்பட்டு நின்றார். இது புதுச்சேரி வளர்ச்சியை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறியது ரங்கசாமி காதில் விழவில்லை.

இதையெல்லாம் விட முக்கியக் காரணம், தன்னை ஒன் மேன் ஆர்மியாக, அசைக்க முடியாத சக்தியாக குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல நினைத்து செயல்பட்டதுதான். அதனால்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்குக் கூட அண்டை மாநில முதல்வர் என்ற முறையில் வாழ்த்து கூட சொல்லாமல் தவிர்த்தார். அவரைச் சுற்றியிருந்த ஆறு துதி பாடும் கவிஞர்கள் அப்படித்தான் அவரை நம்ப வைத்திருந்தனர். விளைவு தேர்தல் நேரத்தில்கூட கட்சியின் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் போன்ற யாருடைய ஆலோசனைகளும் ரங்கசாமியிடம் சென்றடையவில்லை. அப்படி இவர்கள் ஏற்படுத்திய மாயத்தோற்றத்தால் வீழ்ந்தது ரங்கசாமி மட்டுமல்ல, அவரை நம்பி கடைசி நேரம் வரை காத்திருந்த பாஜக, பா.ம.க, மக்கள் நலக்கூட்டணி போன்றவைகளும் தற்போது டெபாசிட்டை இழந்து நிற்கின்றன.

தொகுதி வாரியான கட்சிப் பதவிகளை நிரப்பாமல் விட்டதால் கடைசி நேரத்தில் தேர்தல் பணிகளைக் கூட கவனிக்க ஆள் இல்லாமல் தவித்தார் ரங்கசாமி. நான்கு வருடம் அமைதியாக இருந்துவிட்டு இறுதியாக இலவச அஸ்திரத்தை கையில் எடுத்த ரங்கசாமியை வாக்கு அஸ்திரத்தால் வீழ்த்தியிருக்கின்றனர் மக்கள். மக்களுக்கும், அவருக்கும் ஏற்பட்ட இடைவெளியை உணராத அவர், ஆன்மிகத்தை மட்டும் அதிகமாக நம்ப ஆரம்பித்தார். விளைவு இரவு, பகலாக சாமியார்களை வைத்து யாகங்கள் நடத்த ஆரம்பித்தார். (தேர்தல் தோல்விக்குப் பிறகு அந்த சாமியார்கள் தொண்டர்களால் அடித்து விரட்டப்பட்டனர் என்பது தனிக் கதை)

இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாக்கியது காங்கிரஸ் கட்சி. தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளால்தான் ஆட்சிப் பறிபோனது என்பதை உணர்ந்து வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் மிகுந்த நிதானத்துடன் செயல்பட ஆரம்பித்தது காங்கிரஸ். அனைத்துத் தொகுதிகளிலும் அதிருப்தியில் இருந்த கட்சி நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டு வந்தார் காங்கிரசின் மாநிலத் தலைவர் நமச்சிவாயம். நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களும் ஒருமித்தக் கருத்தோடு களத்தில் இறங்கினர். தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை முறையாக ஆராய்ந்து வேட்பாளர்களை களமிறக்கினார்கள். இருந்தும் கூட்டணிக் கட்சியான திமுகவிற்கு அங்கே வேட்பாளர்கள் இல்லை என்ற போதிலும் அவர்கள் கேட்ட 9 இடங்களை வழங்கினர். அதனால்தான் வேட்புமனுத் தாக்கலின்போது ரங்கசாமி "சி ஃபார்ம்" வைக்காத விஷயத்தில் கூட மீண்டும் ரங்கசாமியின் மீது அனுதாப அலை வந்துவிடக் கூடாது என்று அமைதி காத்தனர். இதுதான் அவர்களது வெற்றிக்கும் ரங்கசாமியின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

யாராக இருந்தாலும் எளிதில் அணுகக் கூடிய அளவுக்கு எளிமையான முதல்வர் என்று அண்டை மாநில மக்களாலும் பாராட்டப்படும் ரங்கசாமி, தன்னை சுற்றி துதி பாடிக் கொண்டிருக்கும் புலவர் கூட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு மக்களை நெருங்கினால் மட்டுமே என்.ஆர்.காங்கிரஸ் மீண்டு(ம்) எழும்.

ஜெ.முருகன்

படங்கள்:
அ.குரூஸ்தனம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close