Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை பிரசாரத்தில் ஜெ. ஏமாற்றப்பட்டாரா? மந்திரி கனவில் மா.செ.கள் நகர்த்திய காய்கள்!

சென்னையை தி.மு.க தன்னுடைய கோட்டையாக்கி பழைய வரலாற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றாலும், அதற்கு காரணமாக சொந்தக் கட்சியினரே இருந்துள்ளனர் என்ற தகவலால் அ.தி.மு.க தலைமை வேதனையில் ஆழ்ந்துள்ளது.

இது குறித்த துரித விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் 'நம்ம பெயர்' இருந்து விடக் கூடாதே என்று சென்னையில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் ஆட்டம் கண்டு போயுள்ளனர்.
அ.தி.மு.க தலைமையின் நியாயமான கோபத்துக்கு பின்னணி என்ன? விசாரணையின் இன்னொரு பக்கம் என்ன?

களத்தில் இறங்கி விசாரிக்க, விசாரிக்க அது நீண்ட குழிபறிப்பின் ஆதி அந்தம் வரை கொண்டு போனது. அதன் முக்கிய சாரம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் (2016)-ல் தலைநகர் சென்னையில்தான் ஆளும் அ.தி.மு.க பலத்த அடி வாங்கியது. கொளத்தூர் தொகுதியில் 3 ஆயிரத்து 227 வாக்கு வித்தியாசத்தில் 2011-ல் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த முறை அதே இடத்தில் 37 ஆயிரத்து 850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அ.தி.மு.க தலைமை மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கிறது.

அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் எம்.எல்.ஏ. சீட் வாங்கிய இடங்களில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற கருத்து வலுவாக இருந்தது.

இதனால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அவர்களின் மாவட்டத்தில் 'சீட்' வாங்கியவர்களை 'மேலே' வரவிடாமல் ரகசிய தலையணையால் நசுக்கிக் கொண்டே இருந்தனர்.

அடுத்த தொகுதிக்கு அமைச்சர் பதவி போய்விடக் கூடாதே என்பதற்காக வேலை பார்த்த பலர் சொந்தத் தொகுதியில் கரையேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். சிலர் மயிரிழையில் தப்பி சொற்ப வாக்குகளில் மீண்டுள்ளனர். 

சென்னையின்  இதேகதை தமிழகம் முழுவதும் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதே, வெற்றியைக் கொண்டாட முடியாத அளவிலான  அ.தி.மு.க தலைமையின் லேட்டஸ்ட் கவலை.

தென் சென்னையைப் பொறுத்தவரையில் வி.பி.கலைராஜன்  எம்.எல்.ஏ.வாக இருந்த தியாகராய நகர் தொகுதியும், அவர் தேர்தல் பொறுப்பாளராக இருந்த மயிலாப்பூர் தொகுதியும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கிறது. தென்சென்னை  வடக்கு மாவட்ட செயலாளரான  தியாகராய நகர் சத்யா மட்டும் இதனால் அவர் போட்டியிட்ட  தியாகராய நகரில் சிரமமின்றி  ஜெயித்தார்.

அதே வேளையில் தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் தியாகராய நகர் சத்யாவின் கண்ட்ரோலில் வருகிற சிட்டிங் அமைச்சர்களின் தொகுதிகள் அண்ணா நகர், ஆயிரம் விளக்கு மற்றும் திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் (ஜெயலலிதாவால் முதல் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட வேட்பாளர் நூர்ஜஹான்) தோல்வியைத் தழுவின.

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி. இவருடைய கண்ட்ரோலில் வருகிற மைலாப்பூர் தொகுதிக்கு வி.பி.கலைராஜன் தேர்தல் பொறுப்பாளராக இருந்ததால் மட்டுமே அங்கே ஓய்வு ஐ.பி.எஸ் நடராஜ் வெற்றி பெற முடிந்தது என்கிறார்கள்.

தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் வருகிற சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் தி.மு.க.வுக்குப் போக, சொந்தத் தொகுதியான விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் விருகை ரவி மட்டும் இங்கே  வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார்.

வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் வெற்றிவேல். இவருடைய கண்ட்ரோலில் வருகிற ஆர்.கே.நகர் (முதல்வர் தொகுதி) வெற்றிவேல் போட்டியிட்ட பெரம்பூர் ஆகிய தொகுதிகள் மட்டுமே வெற்றி தொகுதிகளாகி இருக்கிறது.

மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளான, கொளத்தூர் (தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின் வெற்றி) வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியுற்றது.

வடசென்னை தெற்கு மாவட்டக் கதை சோகமும், சுவாரசியமும் நிரம்பியது. வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கு.சீனிவாசன். இவருடைய தொகுதியில் வருகிற துறைமுகம் தொகுதியில் இவரே போட்டியிட்டு இவரே தோற்றுப் போனார்.

சீனிவாசனின் மாவட்ட கண்ட்ரோலில் வருகிற எழும்பூர் தொகுதி (பரிதி), திரு.வி.க.நகர் (சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ நீலகண்டன்) துறைமுகம் ஆகியன தோல்வியை சந்திக்க, ராயபுரத்தில்  போட்டியிட்ட  டி.ஜெயகுமார் (தற்போது  சென்னையில் உள்ள ஒரே அமைச்சர்) மட்டும் வெற்றி பெற்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சென்னையில் ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரத்தின் போது காதும் காதும் வைத்தாற்போல் அவருக்கே, மாவட்ட செயலாளர்கள் ' பிரசார செக்' வைத்து நாடகம் ஆடியுள்ளனர் என்ற தகவலும் அ.தி.மு.க தலைமையை கொதிநிலைக்கு கொண்டு போயுள்ளது.

"அம்மா, இந்தத் தொகுதியில் நீங்க பிரசாரம் பண்ணிட்டால் மத்த மூன்று தொகுதிகளும் கவரேஜ் ஆகிடும், அப்புறம் 'அங்கே' போயி ஒரு பாய்ண்ட்ல  நீங்கள் பேசி விட்டால் மொத்தம் கவரேஜ் ஆகிடும்மா" என்று ரூட்- மேப் போட்டுக் கொடுத்துள்ளனர்.

அந்த 'மேப்'பில் பிடிக்காத வேட்பாளர்களின் தொகுதியை  ஜெயலலிதாவின் பிரசார கவரேஜூக்குள் கொண்டு வராமல் 'பாதுகாப்பாக' கவர் செய்து தங்களை (?!) காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

தொகுதியில் சொந்தக் கட்சி ஜெயிப்பதை விட குறிப்பிட்ட ஆட்கள் ஜெயித்து விட்டால் அமைச்சர் பதவி நமக்குக் கிடைக்காது என்று ரூட்-டை தயாரித்துக் கொடுத்து ரூட்டில் உடன் சென்றவர்கள் மட்டுமல்ல, அதை சொல்லாமல் விட்ட 'முக்கியமான மிஸ்டர் காக்கி'கள் வரை  கார்டனின் கோபம் திரும்பியுள்ளதாம்.

முதல் களையெடுப்பாக 'குரூப்புல டூப்பு' அடித்த டீமை கிள்ளி எறிந்து விட்டு, அடுத்ததாக, தோற்பதற்காகவே  'தீயாய் வேலை செய்த'வர்களையும் நசுக்கவே ஸ்பெஷலாக விசாரணை நடந்து முடிந்திருக்கிறது... இதன் தொடர்ச்சியாக பல பதவி நீக்கங்களும், பல புதிய போஸ்டிங்குகளும் அடுத்தடுத்த நாட்களில் அறிவிப்பாகப் பார்க்கலாம்.

கட்சிக்காரங்க ஆட்டத்துல இது புது ரகமாயில்லே இருக்கு?

-ந.பா.சேதுராமன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ