Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழனியப்பன் ஜெயிக்க காரணம் முல்லைவேந்தன்?

 

வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் முடியும் வரை தொலைக்காட்சி திரைகளில் கண்களை புதைத்துவிட்டு மனசு படபடத்து கிடந்தவர்களில் முக்கியமானவராக அமைச்சர் பழனியப்பன் இருந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்ட 22 சுற்றுகளில் 16-வது சுற்று வரை பழனியப்பன் பின்தங்கியே இருந்தார்.

11 மணிவாக்கில் ஒரத்தநாட்டில், அமைச்சர் வைத்திலிங்கம் தோற்றுப்போனதாக அறிவுப்பு வெளியானது, அடுத்தடுத்து கோகுல இந்திரா, வளர்மதி என அமைச்சரவையில் இருந்தவர்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தார்கள். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்  பா.ம.க வேட்பாளர் சத்தியமூர்த்தி தொடர்ந்து முன்னிலை. பழனியப்பன் தொடர்ந்து பின்னடைவு என்று டி.வி.யில் செய்தி வெளியாகிக் கொண்டே இருந்த சமயத்தில் பழனியப்பன் முகம் இறுகிபோய்விட்டதாம். இருக்காதா பின்னே, ஜெயலலிதா முதலில் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பழனியப்பன் பெயர் இல்லை.  தம்பிதுரையிடம் கொஞ்சி கூத்தாடி சீட் வாங்க பழனியப்பன் கொடுத்த உறுதிமொழி தன் தொகுதி மட்டுமல்லாது ஒட்டுமொத்த மாவட்டத்தையும் நான் 'கவனித்துக்கொள்கிறேன்' என்பதுதான். கையில் இருந்தெல்லாம் கட்சிக்காக இரைத்துவிட்டு தான் தோற்கப்போகிறோம் என்றால் எப்படியிருக்கும்? 

அம்மா ஜெயிச்சிட்டாங்க ஆட்சியமைக்கப்போறது உறுதியாகி விட்டது. அதுபோதும், 'பழனியப்பன் ஒழியணும்' என்று கட்சிக்காரர்கள் கிசுகிசுத்துக்கொண்டது, எந்த அளவுக்கு   பழனியப்பன் மேல் கட்சிக்காரர்களுக்கு கோபம் இருக்கிறது என்பது கண்கூடாக தெரிந்தது. 17-வது சுற்று எண்ணப்பட்டது. 273 வாக்குகள் பழனியப்பன் முன்னிலைக்கு வந்தார். அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் தொடர்ந்து ஆயிரம்.. இரண்டாயிரம்.. என முன்னுக்கு வந்து 22வது சுற்றின் முடிவில் 12,713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 16வது சுற்றுவரை நொந்துபோயிருந்த பழனியப்பன் ஆழ்மனசில் 'சட்டுனு தோத்துட நான் என்ன வளர்மதியா இல்ல வைத்திலிங்கமா..?, பழ...னியப்பண்டா...' என்று கபாலி பட ரஜினி டயலாக் கட்டாயம் ஒலித்திருக்கும். ஏனென்றால், அவர் வெற்றிபெறுவதற்கு அவர் செய்த காரியம் அப்படி.

கடைசி ஐந்து சுற்றுகளில் பழனியப்பன் எப்படி முன்னுக்கு வந்தார்..? என்ற சூட்சமத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு கடந்த நாடாளுமன்றத்தேர்தல் வரை ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் போய் வந்துவிடலாம். 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றிபெற தருமபுரியில் மட்டும் தோல்வியை தழுவியது. நியாயமாக பார்த்தால் தருமபுரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான பழனியப்பனின் பதவிதான் பறிபோயிருக்க வேண்டும். ஆனால், வெற்றிபெற்ற பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி அமைச்சர் கே.பி.முனுசாமியின் பதவி பறிபோனது. அதுதான், பழனியப்பனின் அரசியல் தந்திரம். இந்த முறை என்ன செய்தார்?

விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். “ஓட்டுக்கு 500 ரூபாய் வரை பணம் கொடுத்தார். ஒருங்கிணைத்தவர்களுக்கு ஆளுக்கு தகுந்தார்போல் தொகை ஒதுக்கினார். பாப்பிரெட்டிப்பட்டிக்கான செலவு மட்டும் பல கோடிகள் என்கிறார்கள் பழனியப்பனின் எதிர்கோஷ்டியினர். இது எங்கும் உள்ளதுதான். ஆனால், பழனியப்பனின் வெற்றிக்கு காரணம் முல்லைவேந்தன். 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த முல்லைவேந்தன் சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் ஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்டார். இதனால், தி.மு.க.விலிருந்து விலகிய முல்லைவேந்தன் தே.மு.திக.வில் இணைந்தார். இணைவு விழாவிற்கு விஜயகாந்தை அழைத்து தருமபுரியில் பொதுக்கூட்டம் நடத்தி, தன்னோடு பதினைந்தாயிரம் உறுப்பினர்களை தே.மு.தி.கவில் இணைத்தார். அடுத்தடுத்து பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று தே.மு.தி.க பக்கம், தி.மு.க தொண்டர்களை கொண்டுவந்தாலும், விஜயகாந்த் ஏனோ முல்லைவேந்தனை கண்டுகொள்ளவில்லை. விரக்தியில் அரசியலிருந்து ஒதுங்கி இருந்த முல்லைவேந்தனிடம் போய்  பழனியப்பன் சரணடைந்துவிட்டார்.

பழனியப்பன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்,  பாப்பிரெட்பட்டியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் சத்தியமூர்த்தியும், பிரபுராஜசேகரும் வன்னியர்கள். இதை வைத்து வெள்ளாள கவுண்டரான முல்லைவேந்தனிடம் மூவ் செய்திருக்கிறார் பழனியப்பன்.  ''அண்ணே கட்சிகளை தாண்டி யோசிங்க. எங்க கட்சியில உள்ளவங்க உட்பட வன்னியருங்க எல்லாம் சேர்ந்து என்னை தோக்கடிக்க திட்டம் போட்ருக்காங்க. இது கட்சிக்கான தோல்வி இல்ல. நம்ம சமுதாயத்திற்கான தோல்வி. நீங்க கண்டிப்பா சப்போர்ட் பண்ணியாகணும்'' என்று முல்லைவேந்தனிடம் கதறி  'கரெக்ட்' செய்திருக்கிறார் பழனியப்பன். விரக்தியில் இருந்த முல்லைவேந்தன் தன் ஆதரவாளர்களிடம், ''என்ன இருந்தாலும் பழனியப்பன் நம்ம பய. கட்சியை பாக்காம ஓட்டுப்போடுங்க'' என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இதனால்தான், துரிஞ்சிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பையர்நத்தம், மோளையானூர், கவுண்டம்பட்டி உள்ளிட்ட வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் பெல்ட்தான் கடைசி ஏழு ரவுண்டுகளில் பழனியப்பனை தூக்கிவிட்டது'' என்கின்றனர்.

-எம்.புண்ணியமூர்த்தி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close