Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஸ்டாண்ட் - பை 'சி.எம்' அந்தஸ்து..?!’- வைத்திலிங்கத்தை சாய்த்த சூழ்ச்சி

முன்பு பெங்களூருவில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைச்சாலைக்கு போனபோது, தற்காலிக முதல்வராக யார் ஆவார்? என்கிற பேச்சு எழுந்தது. அப்படி பேசப்பட்டவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் சீனியாரிட்டியில் தற்காலிக முதல்வராக ஆனார். அதே சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் க்ளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என்று பி.ஜே.பி-யின் முக்கிய தலைவரான சுப்ரமணியன்சுவாமி சொல்லி வருகிறார். ஆனாலும், ஆளுங்கட்சி அந்தஸ்துடன் அ.தி.மு.க. இருக்கும் சமயம், அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதே சமயம்  ஒருவேளை தீர்ப்பு வேறு மாதிரி வந்தால், யார் தற்காலிக முதல்வர் என்ற பேச்சும் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா அவர் மீது வைத்திருந்த நன்மதிப்பில் இருந்து ஒருபடி இறங்கிவிட்டார். அதனாலோ என்னவோ...பொதுப்பணித்துறை தற்போது அவரிடம் தரப்படவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, தற்போது ஜெயலலிதாவின் 'குட்-புக்'கில் இருக்கும் வைத்திலிங்கத்துக்கு அந்த சான்ஸ் கிடைக்கலாம் என்கிற பேச்சு பரவலாக கட்சிக்காரர்கள் மத்தியில் எழுந்தது. ’அந்தமாதிரி ஒரு சூழ்நிலை வந்துவிடக்கூடாது. வைத்திலிங்கத்துக்கு எந்த முக்கிய பதவியும் கிடைத்துவிடக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தது போல, ஒரத்தநாடு தொகுதியில் நின்ற வைத்திலிங்கத்தை ஸ்கெட்ச் போட்டு தோல்வியடையச் செய்திருக்கின்றனர் தஞ்சாவூர் அ.தி.மு.க-வினர். இதுதான் இப்போது தொகுதிக்குள் பரபர பேச்சு. ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக வைத்திலிங்கத்தை ஜெயலலிதா தற்போது அறிவித்திருப்பதன் பின்னணியில் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் நடந்துள்ளதாக கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள். வைத்திலிங்கத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் குறுகியகாலத்தில் நடந்து முடிந்துவிட்டது.

ஜெயலலிதா வைத்த செக்!

அ.தி.மு.க கட்சியைப் பொறுத்தவரையில், ஜெயலலிதாவுக்கு உதவியாக கட்சி நிர்வாகத்தை கவனிக்க நால்வர் அணி, ஐவர் அணி என்று அவ்வப்போது நியமிப்பார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிகட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் ஐவர் அணியினராக ராஜநடை போட்டு வந்தனர். ஆனால், எடப்பாடி, வைத்திலிங்கம் தவிர மற்ற மூவர் ஜெயலலிதா வைத்த ரகசியப் பொறியில் சிக்கினர். அவர்களின் பினாமிகள், உறவினர்கள், குடும்பத்தினர் வீடுகளில் திடீர் ரெய்டு சம்பவங்கள் அரங்கேறின.

ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன்... மூவரையும் அணியை விட்டு அதிரடியாக நீக்கினார். நத்தம் விஸ்வநாதன் மீது கடுங்கோபத்தில் இருந்த ஜெயலலிதா அவரை தி.மு.க முக்கிய தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியசாமியை எதிர்த்து நிறுத்தினார். எப்படியும் தோற்றுப்போவார் என்று தெரிந்தேதான் ஜெயலலிதா இப்படிச் செய்தாராம். பழனியப்பனுக்கு முதல் லிஸ்டில் பெயர் இல்லை. அடுத்த லிஸ்டில் போராடித்தான் ஸீட் பெற்றார். அதிலும் ஜெயித்துவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் தேர்தலில் ஜெயித்தார். கடந்த ஆட்சியில் அவர் கவனித்த வந்த பவர்ஃபுல் துறையான பொதுப்பணித்துறை அவரிடமிருந்து பிடுங்கிவிட்டார் ஜெயலலிதா. அந்த துறையை எடப்பாடியிடம் இந்த முறை கொடுத்துவிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அ.தி.மு.க ஆட்சியின் 'கஜானா' என்று வர்ணிக்கப்படுகிறவர் எடப்பாடி. அமைச்சர்கள் டெர்மினல்கள் 'டீல்' செய்யும் ரிமோட் என்று கூட சொல்லலாம். நடந்து முடிந்த தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு உதவியாக அனைத்து தேர்தல் ஏற்பாடுகளையும் வைத்திலிங்கம்தான் கவனித்தார். வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வாக்குறுதி தயாரிப்பு, தேர்தல் செலவு.. என்று அனைத்திலும் வைத்திலிங்கத்தின் பங்கு உண்டு. ஜெயலலிதா அடிக்கடி அழைத்துப் பேசுகிறவர் என்பதால், கட்சியில் இரண்டாவது ரேங்கில் வைத்து கட்சிக்காரர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

ஒரு சின்ன பிளாஷ் பேக்...

நால்வர் அணியில் ஒருவர் + வீட்டுவசதித்துறை அமைச்சர்... அ.தி.மு.க-வில் பவர்ஃபுல் பிரமுகராக வைத்திலிங்கம் வலம் வந்த நேரம் அது! பெரம்பலூரைச் சேர்ந்த வயதான கட்சி பிரமுகர் வைத்திலிங்கத்தை நேரில் பார்க்கப் போயிருக்கிறார். அவரின் கோலத்தை பார்த்த செக்யூரிட்டியினர் உள்ளே விடவில்லையாம். ஏதேச்சையாக அவரைப் பார்த்த வைத்திலிங்கம் வாசல்வரை போய் அவரை கையைப்பிடித்து உள்ளே அழைத்துவந்து, நலம் விசாரித்திருக்கிறார். வறுமையில் கஷ்டப்படுவதாக சொல்லி அழுதிருக்கிறார். ''கட்சியை வளர்க்க சிரமப்பட்ட நேரத்துல உங்க சொத்துக்களை முழுக்க விற்று கட்சிக்காக செலவு செஞ்சீங்க! இப்ப நம்ம கட்சி பிரம்மாண்டமாக வளர்ந்திருச்சு. ஆனா..நீங்க கஷ்டப்படுவதாக சொல்லுகிறீரே?.. ஏன் முன்பே வரவில்லை?''என்று கேட்டு ஆறுதல் சொல்லி, மாவட்ட அளவில் முக்கிய பதவியில் உட்காரவைத்தாராம் வைத்திலிங்கம்.  அடுத்தடுத்து முக்கிய பதவிகள் அந்த பிரமுகரை தேடி வந்ததாம். இதேபோல, தமிழகம் முழுக்க கட்சிக்காக கஷ்டப்பட்ட பிரமுகர்களை தேடிப்பிடித்து அவர்களை கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் மரியாதைக்குரிய பதவி கிடைக்க செய்துவந்தாராம். இந்த வகையில், தமிழகம் முழுக்க உள்ள கட்சிக்காரர்களுடன் நல்ல தொடர்பில் இருந்ததால், அ.தி.மு.க-வில் சந்தடியில்லாமல் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து கொண்டிருந்தார் வைத்திலிங்கம். கடந்த எம்.பி. தேர்தலில் பத்து தொகுதிகளுக்கான அனைத்து செலவுகளையும் இவரே கவனித்துக் கொண்டாராம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 'டவுட்' என்று சொல்லப்பட்ட தொகுதிகளில் நின்றவர்களை அழைத்து தனிப்பட்ட முறையில் செலவுக்கு பணம் கொடுத்தாராம்.

அந்த 10 வில்லன்கள்!

வைத்திலிங்கத்தின் நண்பர் ஒருவர் கூறும்போது, ''3,600 ஒட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த ஓட்டுக்களை அவர் ஈஸியாக சமாளித்திருக்கலாம். தொகுதியில் தேர்தல் வேலைகளைக் கவனிக்கும் பணியை நம்பிக்கைக்குரியவர்கள் என தான் நம்பிய 11 பேரிடம் ஒப்படைத்தார் வைத்திலிங்கம். எங்கள் பகுதியில் அம்புநாட்டு கள்ளர்கள் என்கிற பிரிவினர் வசிக்கிறார்கள். சில விஷயங்களில் வைத்திலிங்கம் மீது அவர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களை பேசிச் சமாதானப்படுத்தியிருந்தால், சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்திலேனும் வைத்திலிங்கம் ஜெயித்திருப்பார். நெருக்கமான ஒரு உதவியாளர், தென்னமநாடு, திருக்கானூர், ஆம்லாப்பட்டு, பேரையூர், ஏழுபட்டி, கோனூர்நாடு, வன்னிப்பட்டு ஆகிய ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள், ஒரு போலீஸ் அதிகாரி, இவர்களுடன் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என அந்த 10 பேரைத்தான் வைத்திலிங்கம் அதிகம் நம்பினார். ஆனால், அவர்களின் ஆட்டம் தாங்க முடியாமல் கட்சிக்காரர்களும், பொதுமக்களும் எரிச்சல் அடைந்தனர். இந்த 10 பேர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால், இந்த முறை வைத்திலிங்கம் தோற்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தனர்.

இந்த முடிவை முன்கூட்டியே கேள்விப்பட்ட வைத்திலிங்கத்தின் எதிர்கோஷ்டி, அந்த எண்ணத்துக்குத் தூபம் போட்டு கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து வைத்திலிங்கத்தை தோல்வியடையச் செய்துவிட்டார்கள்!’’ என்றார்.

ஆக, அசந்துமறந்து கூட முதல்வர் நாற்காலியை வைத்திலிங்கம் பிடித்துவிடக் கூடாது என்று செமத்தியாக வேலை பார்த்திருக்கிறார்கள்! 

ஆனால், இதையெல்லாம் மோப்பம் பிடித்துவிட்ட ஜெயலலிதா, முதல் கட்டமாக ராஜ்யசபா எம்பி வேட்பாளராக வைத்திலிங்கத்தை நிறுத்தி இருக்கிறார். அடுத்த கட்டமாக தற்போது, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் கட்சியின் பொருளாளர் பதவியையும் வைத்திலிங்கத்துக்கு விரைவில் வழங்கப்போவதாக தகவல்.

-  ஆர்.பி.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ