Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உணவுத் தர நிர்ணய சட்டத்தின் கீழ் டாஸ்மாக்கை வர விடாமல் தடுக்கும் சக்தி எது? - குடிமகன்களின் குமுறல்

டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகளில் 500 கடைகள் மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.பல்வேறு தரப்பினரும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி வரும் நிலையில், "என்னது, படிப்படியாக கடைகளை மூடப் போறாங்களா? வாய்ப்பே இல்லைங்க, இது வெறும் கண்துடைப்பு... உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு கேன்வாஸ்தான் இது" இப்படி கொதிக்கிறார் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவரான  பி. செல்லப் பாண்டியன்.

கத்தரி வெயில் கடந்தும் உஷ்ணம் குறையாதவராக இருந்த  செல்லப் பாண்டியனை  சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது.

சொல்லுங்க சார், எதை ஆதாரமாக வைத்து, அரசு மதுக் கடைகளை மூடாது என்கிறீர்கள் ?

கடையை மூட வாய்ப்பில்லை. 500 கடைகளை மூடுவதென்றால் என்ன? ஒரிஜினல் கடையை மூடப் போகிறார்களா, போலி கடைகளை மூடப் போகிறார்களா? ஒரு கடைக்கான நம்பர் 100 என்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே 100-ஐ நம்பராகக் கொண்ட இன்னொரு கடையும் இருக்கிறதே.. இரண்டில் எந்த 100-ஐ மூடப் போகிறார்கள்?

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் போலியாக குறைந்த பட்சம் 3 ஆயிரம் பார்கள் உள்ளன. வெறும் போர்டு நம்பரை மட்டுமே  அழித்திருப்பார்கள். தேர்தல் தேதிக்கு முன் தேர்தல் ஆணையம் மூடச் சொல்லி அப்படி அரசு  மூடியதும் போலிதான்.

கள்ளச் சாராயத்தை ஒழிக்கத்தானே நல்ல சாராயம் வந்தது என்ற வாதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

டாஸ்மாக் கடைகளிலும், கடைக்கு கொண்டுவரும் வழியிலும் உடைந்து போகும்  மது பாட்டிலுக்கு மட்டுமே இந்த அரசு ஏழரை கோடி ரூபாயை இன்சூரன்ஸ் தொகையாக ஒதுக்கிக் கொடுத்துள்ளது. 
அதுவே, கள்ளச் சாராயம் குடித்து அதன்மூலம் ஏற்படும் உயிரிழப்பு  எனில் அதற்கும் இந்த அரசு 5 கோடி ரூபாய் வரையில் நிவாரணமாக ஒதுக்கீடு செய்துள்ளது.

டாஸ்மாக் சரக்கினை குடித்து ஏற்படும் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டால்,  இறப்பவர் குடும்பத்துக்கு அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குவது குறித்து இந்த அரசிடம்  எந்தவித் திட்டமும் இல்லை.

உணவுப் பொருளான ரொட்டி, நூடுல்ஸ்களில் ஏதேனும் பாதிப்பு என்றதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது இல்லையா? டாஸ்மாக் உணவுப் பொருளில் வருகிறதா, இல்லையா என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் போல் டாஸ்மாக் அடிப்பதால் வரும் தீங்கு என்ன என்று அரசு டாக்டர்களை வைத்து  விழிப்பு உணர்வு பிரசாரத்தை அரசே மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் சங்கத்தின் நிர்வாக முறையை எப்படிக் கொண்டு போகிறீர்கள்?

இப்போதுதான் எங்களுக்கு வேலையே அதிகமாக வந்திருக்கிறது. மாவட்டம் முதல்,  ஒன்றிய செயலாளர் வரை போஸ்டிங்குகளை வேக வேகமாக போட்டுக் கொண்டு வருகிறோம். மதுவை மொத்தமாக ஒழிப்பது குறித்து அவ்வப்போது பல கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறோம். தேர்தலிலும் பாட்டில் சின்னத்தைக் கேட்டு வாங்கி எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

மதுக்கடை விடுமுறை நாளுக்கு முன்னதாக நீண்ட வரிசையில் நின்று சரக்குகளை வாங்கும் ஆட்கள் அதிகம். குறிப்பாக பெண்களும் அந்த வரிசையில்  நிற்கின்றனர். போதைக்கு இவ்வளவு தூரம் ஆட்பட்ட பின்னர், ஒரே நாளில் அவர்களை சட்டம் போட்டு திருத்தி விட முடியுமா?

டாஸ்மாக் சட்டம் 1996-ன் படி, ஒரு குடிமகன் சராசரியாக  5 லிட்டர் வரை மதுபானத்தை கையில் வைத்திருக்கலாம். ஆனால், சரக்குகள் ஒரே பிராண்டில் இருக்கக் கூடாது.  ஒவ்வொரு லிட்டரிலும் வேறு வேறு சரக்கு வைத்துக் கொள்ளலாம்.  500 கடையை மூடி என்ன பெரிதாய் ஆகி விடப் போகிறது?

குடிகாரர்களில் 35 சதவீதம் பேர், ஆண்கள். 8 சதவீதம் பேர் பெண்கள். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றுவோம் என்று வைக்கப்படும் கோஷம் எப்படி எடுபடும்.  இதை அரசியலுக்காக மட்டுமே செய்து வருகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் டாஸ்மாக் வருகிறது என்றால் அதற்கு மதுக்கடைகளில் பில் தருவார்களா?

கண்டிப்பாக தர வேண்டும்... திருவள்ளூர், வேலூர், வாணியம்பாடி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் போலி சரக்குகள் அதிகம். திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, பரமக்குடிகளில்  குடிப்போர் அதிகமென்பதால், அங்கே வருமானமும் பன்மடங்கு அதிகம்.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை 2006-ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. லோக் ஆயுக்தாவை எப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து அதை நடைமுறைக்கு கொண்டு  வரவிடாமல் காலி செய்தனரோ அதுபோல டாஸ்மாக்கை  உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாதபடி முடக்கி வைத்துள்ளனர்.

இந்த சரக்கடித்துதான் அவர் செத்தார் என்றோ, முடமானார் என்றோ தெரிய வந்தாலோ  உணவு பாதுகாப்பு சட்டப்படி, வழக்குப் போட்டு விட முடியுமே. அரை லிட்டர் தேங்காய் எண்ணையை ஒருவன் குடித்தாலே செத்து விடுவான். ஆனால் அதில் என்னென்ன பொருட்கள் கலப்பு உள்ளது  என அதில் எழுதியுள்ளதால் அவனை காப்பாற்ற முடியும்.

டாஸ்மாக்கில் என்னென்ன கலந்துள்ளது என்று  அப்படி சொல்ல முடியுமா ? பாண்டிச்சேரியைப் பொறுத்தவரை கோதுமை, பார்லி போன்ற பொருட்களுடன்  இன்னபிற கலவைகளை சேர்த்து இது இந்த பாட்டிலில் மதுவாக கொடுக்கப் படுகிறது என்று சொல்லப்படுகிற சரக்கு  தர, நிர்ணயம் உள்ளது.

டாஸ்மாக்கை மூடவே முடியாது என்று சொல்ல வருகிறீர்களா?

இந்த அரசிடம் அதற்கான போதுமான திட்டங்கள் இல்லை என்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு. மேலும் இந்த அரசும், மதுக்கடையை  மூடவே மூடாது. மூடுவதாகச் சொல்லியே  ஓராண்டு ஓட்டி விடுவார்கள். உள்ளாட்சி தேர்தல் வரைதான் இதை சொல்லிக் கொண்டு போவார்கள்.

டாஸ்மாக்குக்கு எதிரான எதிர்ப்பு அலை பெரிதாக  இல்லாவிட்டால் டாஸ்மாக் மூடல் என்பதை கைகழுவி  விடுவார்கள். இதுதான் நடக்கப்போகிறது. டாஸ்மாக் மூடுவதற்கு முன்பாக, மது மற்றும்  பொருளாதார ஆளுமை தொடர்பான மிகப்பெரிய வல்லுநர்களை வைத்து அது குறித்து கலந்து பேசித்தான் முடிவே செய்ய முடியும்.

தொடக்கத்தில்  வெறும் 48 ஐட்டம் (மாடல்-கம்பெனிகள்) தான் டாஸ்மாக்  சரக்குகள் இருந்தன. இப்போது 252 ஐட்டம் விற்பனைக்கு உள்ளது.  தென்மாவட்ட ங்களில் 10 ஆயிரத்தில்தான் கடை எண்ணே தொடக்கம் ஆகிறது. ஆனால். அரசு  சொல்வது ஒட்டுமொத்த டாஸ்மாக் கடை 6,820 என்றுதான்... இது ஒன்று போதாதா, போலி கடைகளுக்கு ஆதாரமே இதுதானே.

ஆண்டுக்கு 500 கடை மூடுவதாக முடிவெடுத்தாலும், ஐந்தாண்டு அரசு முடிகிற போதும் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மிச்சமிருக்கும்.  இது போதாது என்று ஒரே நம்பரில் 2 கடைகளை  ஆளுங்கட்சியினர் நடத்தி வருகிறார்கள்...

எண் போலியா, கடைகள் போலியா? போலி கடையை இவர்கள் மூடவுள்ளனரா, ஒரிஜினல் கடையை மூட உள்ளனரா? பல கடைகளில் கடை எண் அழிக்கப்பட்டு மோசடியாக கடைகள் இயக்கத்தில் இருக்கின்றன... என்ன நடக்கிறதோ, என்ன மாயமோ ஒன்றும் தெரியவில்லை.

-ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ