Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிக்கு தேர்தல் ரத்து..! பின்னணி என்ன?

ஜூன் 13ம் தேதி நடைபெற இருந்த அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை அதிரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  ரத்து செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியை தவிர்த்து 232 தொகுதிகளுக்கு கடந்த 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து மே 23ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் அறிவித்தது. இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக தலைவர் கருணாநிதியோ, இரண்டு தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தாவிட்டால் நானே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்று ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாெடர்ந்தார். இந்த மனு விசாரித்த நீதிமன்றம், மே 27ம் தேதிக்குள் தேர்தல் நடத்த பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ஆணையம், இரண்டு தொகுதிகளுக்கு 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தலை ஜூன் 13ம் தேதிக்கு ஆணையம் தள்ளிவைத்தது.

இதையடுத்து அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டினர். இந்த சூழ்நிலையில், ஆளுநர் ரோசய்யாவுக்கு அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆளுநர் ரோசய்யா கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, டெல்லி சென்று இந்திய தலைமை ஆணையர் நைஜியிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், ஜூன் 13ம் தேதி நடைபெற இருந்த தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ரத்து தொடர்பாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. "தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மே 16ம் தேதி தேர்தல் நடத்துவதாக இருந்தது. இதற்காக எங்களது பார்வையாளர்களை ஒவ்வொரு தொகுதிகளுக்கும் நியமித்தோம். ஒவ்வொரு தொகுதிகளிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக. அப்போது, வாக்காளர்களுக்கு அதிக பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அதோடு வருமான வரித்துறை அதிகாரிகளும் அங்கிருந்தார்கள். இந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் இருந்து அதிக புகார்கள் வந்ததால் மே 23ம் தேதிக்கு தேர்தலை தள்ளி வைத்தோம். அப்படியிருந்தும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பது நிறுத்தப்படவில்லை. அதனால், மே 23ல் இருந்து ஜூன் 13ம் தேதிக்கு தேர்தலை தள்ளி வைத்தோம். ஆனால், தொடர்ந்து இப்படிப்பட்ட நிலையே நீடித்ததால் வாக்காளர்கள் சுயமாக வாக்களிப்பது கடினம். இந்த சூழ்நிலையில் தேர்தலை நியாயமாக நடத்துவது கடினம் என்பதாலேயே தேர்தலையே நாங்கள் ரத்து செய்துள்ளோம். எப்போது தேர்தல் என்று நாங்கள் புதிதாக அறிவிப்போம்" என்று கூறியுள்ளது.

ஆளுநர் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆணையம், "தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக ஆளுநர் எங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியமே இல்லை. நாடாளுமன்றத்துக்கோ, ஆளுநருக்கோ இந்த தேதியில் தேர்தலை முடித்துவிடுங்கள் என்று சொல்ல முடியாது. அதாவது, ஆளுநர் தேர்தலுக்காக அழைப்பு விடுக்கலாம், மக்களை வாக்களிக்க வருமாறு அழைக்கலாமே தவிர, எப்போது தேர்தல் நடத்தலாம் என்று முடிவு செய்வது தேர்தல் ஆணையம்தான். இந்திய அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கென்று ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஆணையத்தின் நடவடிக்கையில் யாரும் தலையிட முடியாது. எப்படியெல்லாம் நடத்தலாம் என்று சட்டத்தை போடலாமே தவிர, என்றைக்கு தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்வது ஆணையம்தான். தேர்தலை தள்ளிவைப்பதற்கு ஆளுநரிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலை தள்ளிவைப்பது, தேர்தலை ரத்து செய்து ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த தேர்தலை நியாயமான நடத்த முடியாது என்று ஆணையம் நினைப்பதால் தேர்தலை ரத்து செய்கிறோம். புதிதாக தேர்தல் தேதியை அறிவிப்போம்" என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

சகாயராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close