Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலில் வாஷ்அவுட்... நிர்வாகிகள் மாற்றமா? - கலக்கத்தில் குமரி அ.தி.மு.க.வினர்!

ட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி  காரணமாக அக்கட்சி நிர்வாகிகள் அதிரடியாக  மாற்றப்படலாம் என்ற அச்சத்தில் அம்மாவட்ட அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில், குமரி மாவட்டத்தின் மொத்த தொகுதிகளையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி அ.தி.மு.க.வை மிரள வைத்தது.  அந்த நேரத்தில், குமரி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக பச்சைமால் இருந்து வந்தார். 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஹெலன் டேவிட்சன் எம்.பி. ஆனார்.

அதன்பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 2 தொகுதிகளை அ.தி.மு.க. கைபற்றியது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மாவட்டச் செயலாளர்  பச்சைமால் வனத்துறை அமைச்சரானார்.

அப்போது மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான சகாயம், குமரி அ.தி.மு.க.வில் கோலோச்சி வந்தார். அதன்பின், பச்சைமாலுக்கு சோதனை காலம் தொடங்கியது. குமரியை பரபரப்பாக்கிய தேரூர் இரட்டைக் கொலையில் பச்சைமாலிடம் நெருக்கமாக இருந்த மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சகாயம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

உடனே ஜெயலலிதா, சகாயத்தை கட்சியில் இருந்து நீக்கினார். மேலும், பச்சைமால் பற்றிய புகார்கள் கார்டனுக்கு பறக்க, மாவட்டச் செயலாளராக நாகர்கோவில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை ஜெயலலிதா நியமித்தார். நாஞ்சில் முருகேசன் மீதும் புகார்கள் பறக்க, அடுத்த ஒரு வாரத்தில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் தூக்கப்பட்டார். மேலும் வனத்துறையில் இருந்து தொழிலாளர் நலத்துறைக்கு பச்சைமாலும் மாற்றப்பட்டார். அதன்பின், வக்ஃபு வாரிய தலைவரான தமிழ்மகன் உசேன் மாவட்ட பொறுப்பாளரானார்.

அதன்பின், ஒருங்கிணைந்த குமரி மாவட்டத்தை கிழக்கு, மேற்காக பிரித்து, கிழக்கிற்கு குருந்தண்கோடு ஒன்றியச் செயலாளரான சிவசெல்வராஜனையும், மேற்கிற்கு மேல்புறம் ஒன்றியச் செயலாளர் ஜான் தங்கத்தையும் மாவட்டச் செயலாளராக்கினார் ஜெயலலிதா. அப்போதும், சகாயத்தின் ஆதிக்கமே குமரி அ.தி.மு.க.வில் நிலவி வந்தது. மாவட்ட அலுவலகத்திற்கு, செயலாளார்கள் வருகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக சகாயத்தை பார்த்து விடுவார்கள்.

 2014 நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜான்தங்கம் போட்டியிட்டார். அந்த தேர்தலில், அ.தி.மு.க. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அப்போது, பா.ஜ.க. வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

நாடாளுமன்ற தேர்தலில் கிள்ளியூர் தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளராக,  ஓரங்கட்டப்பட்டிருந்த தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, பச்சைமால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். சிவசெல்வராஜனும், ஜான் தங்கமும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கப்பட்டனர்.

ஓ.பி.எஸ் ஆதரவோடு தளவாய் சுந்தரம் கிழக்கு மாவட்டத்திற்கும், ஜெங்கின்ஸ் மேற்கு மாவட்டத்திற்கும் செயலாளர் ஆனார்கள். மீண்டும் ஒருங்கிணைந்த குமரி மாவட்டமாக மாற்றி அமைக்கப்பட்டு, தளவாய் சுந்தரத்தை மாவட்டச் செயலாளராக அறிவித்தார் ஜெயலலிதா.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 6 தொகுதிகளையும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியே கைபற்றி, அ.தி.மு.க.வை வாஷ் அவுட் செய்துள்ளது.

குமரியில் அ.தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில், இனி பழையவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான விஜயகுமார் என்பவரை ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளராக அறிவித்து, குமரி அ.தி.மு.க.வினருக்கு மட்டுமல்ல, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் ஜெயலலிதா. இதன்மூலம், இனி குமரியில் நடைபெறும் அரசு விழாக்களில் அ.தி.மு.க. ராஜ்ய சபா எம்.பி.யே முக்கியத்துவம் பெறுவார். இதனால், தற்போது வெற்றி பெற்ற தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதனிடையே சட்டமன்ற தேர்தலில், குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்துள்ளதால், மாவட்ட நிர்வாகிகள் விரைவில் மாற்றப்படுவார்கள் என குமரி அ.தி.மு.க. வட்டாரம் பரபரத்து கிடக்கிறது. தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் மீது அ.தி.மு.க. தலைமை கடும் கோபத்தில் இருப்பதால், மாவட்டச் செயலாளர் மாற்றம் நிச்சயம் உண்டு எனவும் அ.தி.மு.க.வினர் உறுதிபட சொல்கிறார்கள்.

குமரியில் 10 வருடங்களுக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருந்த பச்சைமாலின் மீதும் தலைமை கோபத்தில் இருப்பதால், இந்த முறை மாவட்டச் செயலாளர் வாய்ப்பு  புதியவர்களுக்கே கிடைக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதே நேரம், மாவட்டச் செயலாளர் பதவி தங்களுக்கு கிடைக்குமென மாவட்ட பொருளாளர் ராஜன், சேவியர் மனோகரன், பால்வளத் தலைவர் அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், சந்தையடி பாலகிருஷ்ணன் என பல சீனியர் புள்ளிகளும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஆனால், " இனி பெரியவர்களை நம்பி பயனில்லை. கட்சியில் இளைஞர்களான எங்களுக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பு கொடுத்தால், இளம் ரத்தத்தை பாய்ச்சி கட்சியை வளர்த்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அசுர பலத்தோடு எதிர்க்கட்சியை எதிர் கொள்வோம்" என கார்டனுக்கு கூட்டுறவு ஒன்றிய சேர்மன் பகவதி பெருமாள் என்கிற சந்தோஷ் மற்றும் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்ளிட்டோர் கடிதங்களை தட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

இது ஒருபுறமிருக்க, தற்போது ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகுமாரும் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற லாபி செய்துக் கொண்டிருக்கிறாராம். இப்போது சுணக்கமாக இருக்கும் குமரி அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் வந்த பின்னர்தான் எழுச்சி பெறும் என்று குமரி அ.தி.மு.க.வினர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

-த.ராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close