Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சி மொழிகளாக்க வேண்டும்: ராமதாஸ்!

சென்னை: தமிழ் மொழி உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தின் இணையதளம் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலக இணையதளம் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

இந்தி தவிர்த்த பிற மொழிகளின் முக்கியத்துவத்தை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மாநில மக்களை அவர்களின் தாய்மொழி மூலமே சென்றடைய முடியும் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, எந்த மொழி பேசும் மக்களும் அவர்களின் சொந்த மொழி மூலம் தான் அவர்களின் கருத்துக்களை தங்கு தடையின்றி வெளிப்படுத்த முடியும் என்பதையும் உணர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் 06.12.2006 அன்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அதற்கான அனுமதியை குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் இன்னும் வழங்கவில்லை. தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகள் மற்றும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

அக்கோரிக்கைகளுக்கு பயனில்லாத நிலையில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால், அவ்வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்காமல் தேவையற்ற தாமதம் செய்து வருகிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க இப்போது தேவைப்படுவது மத்திய அரசின் அனுமதி ஒன்று மட்டுமே. மாநில மொழி பேசும் மக்களை அவர்களின் தாய்மொழி மூலமே அணுக முடியும் என்ற அளவுக்கு முதிர்ச்சியான கருத்தை பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் எந்த தடையும் இருக்க முடியாது.

அதுமட்டுமின்றி, 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,‘‘ இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளின் களஞ்சியமாக திகழும் அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close