Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதி பி.ஏ.!

 

மு.கருணாநிதி 93 - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க.

ந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் என்று  நெடிய பயணத்திற்கு சொந்தக்காரர் கருணாநிதி.

ஓலைச்சுவடி காலத்தில் ஆரம்பித்து இன்றைய ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் யுக இளைஞர்களுக்கும் ஈடு கொடுத்து ஸ்டேட்டஸ் தட்டுகிற அரசியல் தலைவர். இந்த 93 வயதிலும் தமிழக அரசியல் சக்கரம் தன்னைச் சுற்றியே சுழல வைத்துக்கொண்டிருக்கும் அவரது அரசியல் நடவடிக்கைகளில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், அவரது மேடைப்பேச்சு எப்பொழுதுமே நினைத்து நினைத்து ரசிக்க வைப்பவை.

அப்படி நான் திருவாரூரில்,  கால்சட்டை பிராயத்தில் இருந்தபோது கருணாநிதி கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளின் நினைவுக்குறிப்புகள் இங்கே....
                                 
ஒருமுறை  தஞ்சாவூரிலும், மயிலாடுதுறையிலும் இடைத்தேர்தல் நடந்து தஞ்சையில் தி.மு.க தோற்றது, மயிலாடுதுறையில் வென்றது. அப்போது ரயிலில் தஞ்சாவூரில் இறங்கி திருவாரூருக்கு கருணாநிதி வந்தார். அவரது ஆசான் தண்டபாணி தேசிகருக்கு  கருணாநிதி படித்த வடபாதி  மங்கலம் சோமசுந்தரம் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. 

அப்போது பேசிய கருணாநிதி,  " திருவாரூர் மாளவந்தியார் தெருவில்தான் அண்ணாவை முதன்முதலாக சந்தித்தேன். 'இவன்தான் விடுதலை இதழில் சிறுகதை எழுதிய  கருணாநிதி'  என்று மன்னை, என்னை அறிமுகம் செய்தார். 'கருணாநிதி  என்றால் ஏதோ பெரிய ஆள் என்று நினைத்தேன். நீ சிறுவனாக இருக்கிறாயே. முதலில் ஒழுங்காக படி, அப்புறமாய் சிறுகதை எல்லாம் எழுதலாம்' என்று அண்ணா என்னை கண்டித்தார்.  அண்ணா சொன்னா எல்லாவற்றையும் கேட்ட இந்த கருணாநிதி, அது ஒன்றை மட்டும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் இன்றைக்கு கருணாநிதி  உங்கள் முன்னால் ஒரு பட்டதாரியாக நின்று கொண்டிருப்பான்.  சரியாக படிக்கவில்லை என்றால் நாமும் கருணாநிதி மாதிரி முதலைமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள். விதிவிலக்கு என்றைக்கும் வழிகாட்டியாகாது." என்று கூறியவர் தன் ஆசானுக்கு நினைவுப் பரிசாக ஒரு தஞ்சாவூர் தட்டை வழங்கி, " இந்த தட்டில் தோகை விரித்து மயில் ஆடுவதை பார்க்கும்போது மயிலாடுதுறை வெற்றி நினைவு வந்தாலும், தட்டு என்னவோ தஞ்சாவூர் தட்டுதான்" என்று டைமிங்காக பேசினார்.

 

மு.கருணாநிதி 93 - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க.

 

ஒருமுறை நன்னிலத்தில் தி.மு.க பிரமுகர் வீட்டுத் திருமணத்துக்கு கருணாநிதி வந்தார்.  மணமகள் பி.காம் படித்தவர், மணமகனோ ஒன்பதாம் வகுப்பு பெயில்.  திருமண அழைப்பிதழில் மணமகன் பெயருக்கு பக்கத்தில் பி.ஏ என்று போட்டிருந்தனர். இதுகுறித்து கல்யாண மண்டபத்தில் எழுந்த சலசலப்பு, மெல்ல மெல்ல நகர்ந்து கலைஞர் காதுக்குள் புகுந்தது. மணவிழாவை முடித்த கருணாநிதி மைக்கை பிடித்தார். "இந்த மணவிழாவின் மாப்பிள்ளை குறித்து எனக்கொரு தகவல் வந்தது. எனக்கு முன்னால் பேசிய, 'தஞ்சை பெரியார்' என்று நான் அன்போடு அழைக்கும் மன்னையார் ஒரு பி.ஏ, அதன்பின் பேசிய மாவட்டச் செயளாளர் கோ.சி.மணிகூட ஒரு பி.ஏ.,  ஏன் உங்கள் முன்னால் பேசிக்கொண்டு இருக்கும் நான்கூட ஒரு பி.ஏ.தான். ஆமாம் எங்களுக்கு எல்லாம் 'ப்ரதர் ஆப் அண்ணா' என்று சமயோஜிதமாக பேச, கல்யாண வீட்டில்  இருந்த இறுக்கம் தளர்ந்தது, இணக்கம் பிறந்தது.

 

மு.கருணாநிதி 93 - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க.

இன்னொருமுறை மன்னார்குடி பள்ளியில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்ள  வந்தார்.  அழைப்பிதழில் 'சிறப்பு விருந்தினர் கலைஞர் மு. கருணாநிதி' என்று அச்சிட்டு இருந்தனர். இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய சிலர், 'கலைஞர் இலக்கிய விருந்து படைக்க வேண்டும்' என்று பேசினர். இன்னும் சிலர், 'இது இலக்கிய விழா. அதனால் அரசியல் பேசாதீர்கள்' என்று வேண்டுகோள் விடுத்தனர். 

இறுதியாக மைக் பிடித்த கருணாநிதி, " என்னை அழைப்பிதழில் 'சிறப்பு விருந்தினர்' என்று விளித்து இருக்கிறார்கள். ஆனால் பேசிய அனைவரும் விருந்து படையுங்கள் என்று சொன்னீர்கள். தமிழன் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் வீட்டில் உள்ளவன்தான் வந்தவருக்கு விருந்து பரிமாற வேண்டும் அதுதான் தமிழ் பண்பாடு, கலாச்சாரம். சரி போகட்டும், நானே விருந்து பரிமாறுகிறேன். முதலில் இலையைப் போடுகிறேன். அடுத்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாய் வைக்கிறேன். அனைத்தையும் சுவைத்து உண்டு முடித்துவிட்டு,  'இலையை தூக்கி... இலையைத் தூக்கி' தூர எறிந்து விட்டு, இரவு நன்றாக உறங்கி காலையில் உதயசூரியன் முகத்தில் விழியுங்கள் என்று என்னால்  இலக்கிய விழாவில் அரசியலும் பேசமுடியும். அதற்காக நான் இங்கு வரவில்லை" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது

- திருவாரூர் குணா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ