Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

87 வாக்கு வித்தியாசத்தில் தோற்றது ஏன்? திருமாவளவன் விளக்கம்



காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சட்டவிரோதமான தேர்தல். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கு மாறாக அ.தி.மு.க., தி.மு.க. ஒரு தொகுதிக்கு ரூ.28 கோடி செலவு செய்துள்ளன. இந்தியாவிலேயே வரலாறு காணாத சட்டவிரோதமான தேர்தல் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்கு வித்தியாசத்தில் நான் தோல்வியை சந்தித்தேன். அதிகளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சிலர் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலியமலை வாக்குச்சாவடியில் தேர்தல் அன்று வாக்கு எந்திரம் பழுதானது. 2 மணி நேரம் கழித்துத் தான் வாக்கு எந்திரம் சீரமைக்கப்பட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது, 14 டேபிள்களிலும் முகவர்கள் கையெழுத்திட வேண்டும். ஆனால் 18-வது இறுதி சுற்றின் போது எங்கள் முகவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதற்கு போலீசாரும் உடந்தையாக செயல்பட்டனர். எனவே காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். மேலும் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கலியமலையில்  மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர் மூலம் ஆளுங்கட்சியினருக்கு மறைமுகமாக முழு ஒத்துழைப்பு கொடுத்தது. மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி என்பது ஒரு வழிப்பறி சம்பவம் போன்றது. சட்டமன்ற தேர்தல் தோல்வியால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து எங்கள் கட்சி செயல்படும். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய 2 கட்சிகளை எதிர்த்து, தே.மு.தி.க.- மக்கள்நலக் கூட்டணி, த.மா.கா. ஆகிய எங்கள் அணி போட்டியிடுவதென முடிவு செய்து போட்டியிட்டோம். தேர்தலுக்கு பிறகும் எங்கள் கூட்டணி தொடர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது" என்று கூறினார்.

கட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வைத்த கோரிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close