Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சித் தேர்தலுக்கு வசூலிக்கப்பட்ட பல கோடிகள்...ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி தந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு!

திமுகவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை கலைத்து கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிக்கை வெளியிட்ட அன்றே பலர் கலங்கிப் போய் விட்டனர். அடுத்தடுத்து நாட்களில் அந்த கலக்கம் உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவோடு, மனுக்கள் பரிசீலனைக் குழு மற்றும் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட 234 சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள் பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. தேர்தலுக்காக நியமிக்கப்படும் தற்காலிக பதவிகளான சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள், தொகுதி இணை செயலாளர்கள் பொறுப்புகள் கலைக்கப்படுவது சாதாரணமான ஒன்றுதான், .

தேர்தலுக்குப் பின்னர் எப்போதும் போல ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் ஆக்டிங் மோடுக்கு வந்து விடுவார்கள். இதில், சீரியசாக கவனிக்கப்படுவது  ஒழுங்கு நடவடிக்கை குழுவும், மனுக்கள் பரிசீலனைக் குழுவும்தான்.

" டி.ஆர். அன்பழகன், எஸ். கோகுலஇந்திரா, ஏ.கே. செல்வராஜ், ப. குமார் எம்.பி. ஆகியோரை ஒழுங்கு நடவடிக்கை குழுவினராக நியமித்துள்ளேன். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் 2015-ல் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர். வைத்திலிங்கம், எடப்பாடி கே. பழனிசாமி, பி.பழனியப்பன் ஆகியோரைக் கொண்ட அடுத்த பட்டியல் வெளியானது. முந்தைய பட்டியலில் (2013) இருந்தவர்களின் பெயர்கள் இதில் நீக்கப்படவில்லை.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் (2016) பின்னால், பவர் மந்திரிகளாக உலாவந்த நத்தம் ஆர்.விஸ்வநாதன், பி.பழனியப்பன் ஆகியோர் கைகளில் இருந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு பொறுப்பு பிடுங்கப்பட்டிருக்கிறது. 

அதே வேளையில் ஆர்.வைத்திலிங்கம் அமைப்புச் செயலாளராகவும், எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமை நிலையச்செயலாளராகவும்  தமிழ்மகன் உசேன் முன்பு வகித்து வந்த அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கைக்குழு மற்றும் மனுக்கள் பரிசீலனைக் குழுவின் மீது இந்தளவுக்கு கோபம் வந்த காரணம் என்ன? அதிமுகவின் சீனியர் கட்சிக்காரர்களிடம் விசாரித்தோம்.

"அம்மாவைப் பொறுத்தவரை இது போன்ற குழுக்களை காரணத்தோடுதான் உருவாக்கினார்.  அனைத்துப் பிரச்னைகளையும் நாமே பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அதற்கென தனித்தனியாக நம்பிக்கையான ஆட்களை போட்டு விட்டால் கட்சியில்  பிரச்சினைகள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் என்று நினைத்தார்.

அதன்படி,, உட்கட்சிப் பூசல்களோடு  சொந்த விவகாரங்கள் குறித்த புகார்களையும் 'அதிமுக தலைமைக் கழகம், மனுக்கள் பரிசீலனைக் குழு' என்ற முகவரிக்கு கட்சியினர்   அனுப்பி வந்தனர்.  

அந்தக் குழுவினர் பரிசீலித்து முடித்தவுடன் அவைகள் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. அவர்கள் 'அம்மாவின் ஒப்புதலின் பேரில் இந்த மனு, மேல் நடவடிக்கைக்கு அம்மாவுக்குப் பணிந்து அனுப்பப்படுகிறது' என்று  மேலே ஒரு 'கவரிங்' கொடுத்து கார்டனுக்கு அனுப்புவார்கள்.

 

அடுத்த சில நாட்களில், 'அம்மாவின் ஆணைக்கிணங்க, இந்த மனுமீது மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று பிரச்சினைக்குரிய எதிர் மனுதாரர் வகித்து வந்த கட்சிப் பொறுப்பு காலி செய்யப்பட்டுவிடும். 

கட்சியில் பதவிகள் இருந்தால்தான் சட்டமன்றத்துக்கோ, உள்ளாட்சி மன்றத்துக்கோ போட்டியிட 'சீட்' கேட்க முடியும். அந்த பதவியையே காலி செய்யும் இடத்தில் இருப்பது மனுக்கள் பரிசீலனைக் குழுவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவும்தான்.

இந்த நேரத்தில்தான் அதாவது இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு, மனுக்கள் பரிசீலனைக் குழு போன்றவை தங்கள் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத்துவங்கிய பின்தான், அம்மா வசிக்கும் கார்டனை முற்றுகை, கார்டன் நோக்கி ஆர்ப்பாட்டம் என்று பிரச்சினைகள் அதிகமாகத் தொடங்கின.

ஒருதலைப்பட்சமாக , எந்த விசாரணையும் இல்லாமல், கட்சிப் பொறுப்பில் இருந்து எங்களை நீக்கி விட்டனர் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வர ஆரம்பித்தது. தேர்தல் வரையில் யாரையும் கை வைக்கக் கூடாது என்று பொறுமை காட்டிய அம்மா, தேர்தல் முடிந்ததும் அந்த குழுக்களைக் கலைத்து எங்களை காப்பாற்றி விட்டார்.

மனுக்கள் பரிசீலனைக் குழு, விசாரணைக்குழு, தீர்ப்புக் குழு என்று காலமெல்லாம் பயந்தே வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்தக் குழுவில் ஒருவருக்கு வேண்டியவரைப் பிடித்து 'செய்ய வேண்டியதை செய்து'  நடவடிக்கையில் இருந்து தப்பிப் பிழைத்தோம். 

எங்களில் பலர், அப்போது அந்த 'மீடியேட்' செய்த ஆட்கள் மூலமாக உள்ளாட்சித் தேர்தலில் சீட்டுக்காக லட்சங்களை, கோடிகளை கொட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆனால் குழு கலைத்துவிட்டதால் எங்கள் பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை. இதை நாங்கள் அம்மாவுக்கு புகாராக அனுப்பியுள்ளோம். இதுவரை குழுவில் இருந்துகொண்டு எங்களை நிற்கவைத்து விசாரித்தவர்களை இனி அம்மா விசாரிப்பார்" என்றார் மத்திய சென்னையின் 'முன்னாள்' ஒருவர்.

உள்ளாட்சித் தேர்தல் நெருக்கத்தில் பல குட்டுகள் வெளியில் வரலாம்....

அம்மா என்ன செய்யப்போகிறாரோ...?

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ