Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த என்.ஆர்.காங்கிரஸ்... இது புதுச்சேரி கலாட்டா!

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று கூடிய 14-வது சட்டசபைக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் முக்கிய எதிர்க்கட்சியான என்ஆர். காங்கிரஸ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 தொகுதிகளிலும், என்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு இடத்தையும் பிடித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்குக் கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் 15 எம்.எல்.ஏக்களும், திமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்களும்,  அதிமுகவின் நான்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் மாஹேயைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. பேராசிரியர் ராமச்சந்திரன் ஆகியோரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது. மேலும் அந்த நேரத்தில் கட்சி அலுவலகத்தில் பூஜை செய்துவிட்டு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தினார் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி. பின்னர் பதவியேற்பு விழா முடிந்ததும் ரங்கசாமி உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏக்களும் தற்காலிக சபாநாயகரான வி.பி.சிவக்கொழுந்து அறையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவை புறக்கணித்தது ஏன் என ரங்கசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “எங்களுக்கு உகந்த நேரத்தில்தான் நாங்கள் பதவியேற்க முடியும்” என்றவர் “எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது அப்போது அமரும்போது தெரியும்” என்றார். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நீங்கள் அனுமதி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகிறதே என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'ஆமாம் உண்மைதான்' என்று பதில் அளித்துவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றவுடன் அதிமுகவை கழற்றிவிட்டு சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர் ரங்கசாமி என்பதால் இந்த முறை ஜெயலலிதா கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை. ரங்கசாமியும் ஆட்சியைப் பறிகொடுத்தார். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இவர் முயற்சி செய்வது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் 11 ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும், அன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்  நடக்கும் என்றும் தற்காலிக சபாநாயகர் அறிவித்தார்.

- ஜெ.முருகன்
படங்கள்:அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ