Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதாரண டாக்டராக இருந்த ராமதாஸ் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?: பாரிவேந்தர் சரமாரி கேள்வி!

சென்னை: சாதாரண டாக்டராக இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி என்று ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,'வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அதில், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி அனுமதியை ரத்துச் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அதற்குப் பதிலடியாக சாதாரண டாக்டராக இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானது எப்படி என்று பல்வேறு கேள்விகளை அடுக்கியுள்ளார்.

இது தொடர்பாக பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறுபல கல்லூரிகளிலும்  இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்ட மதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும் மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள யாரையாவது எதிரியாக சித்தரித்து, அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது டாக்டர் ராமதாஸ் அவர்களின் அன்றாட வாடிக்கை.

தமிழ்நாடு முழுவதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் -பார்க்கவ குலத்தைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாகப் பழகி வருகிறார்கள். அவர்களிடத்தில் விரோதத்தை வளர்த்து அமைதியைக் கெடுக்க பார்க்கிறார் ராமதாஸ். சமூக நீதிக்காகப்  போராடுகிறேன் என கூறும் ராமதாஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான என்னை தனிப் பட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்..?

“சி.பி.ஐ. விசாரணை வேண்டும்” என்கிறார் ராமதாஸ். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.மேலும் காவல்துறை அதிகாரி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  உள்நோக்கத்தோடு தவறான அறிக்கைகளை விடுவது வழக்கை திசை திருப்பும் முயற்சியல்லவா?

மத்தியிலும், மாநிலத்திலும் கிடைத்த அரசு பதவிகளை பயன்படுத்திக்கொண்டு, கோடிகோடியாய் பணம் சம்பாதித்து வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளோமா…? என்பதை ராமதாஸ்அவர்கள் விளக்கவேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில்  சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ் அவர்கள், இன்று பலஆயிரம் கோடிகளுக்குஅதிபதியாகவும் - பல்வேறு  அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதைக் கூறமுடியுமா..? ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்ட டாக்டர் ராமதாஸ் அவர்கள், 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் துவங்கி படிப்படியாக முன்னேறி உலகத்  தரம் வாய்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னைப் பார்த்து குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற வகையி பெற்றுக்கொண்டு, அந்த 5 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாதா..?

மேலும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் எஸ்.ஆர்.எம். மருத்துவக்  கல்லூரியை விசாரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நிராகரித்துவிட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி அவர்கள் இரண்டு மருத்துவக்கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாகக்  கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது ஊர் அறிந்த உண்மை அல்லவா..?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இணையாகச்  செய்தித்தாள்களில்   கோடி கோடியாகப்  பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதைத் தெரிவிக்க முடியுமா..?

 
தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் – ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா..? அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில் என் மீது நஞ்சை கக்குவது நியாயமா..?

எதிரியின் மீது குற்றம்சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும்போது, மற்ற மூன்று விரல்களும் தன் மார்பை நோக்கித் திரும்புவதை அவர் உணரவேண்டும். யாரோ சில வழிப்போக்கர்கள் பாடும் வஞ்சகப்  பாட்டிற்குப் பின்பாட்டுப்  பாட வேண்டாம் என  டாக்டர் ராமதாஸ் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close