Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதிமுக கூட்டம்தான் முக்கியம்... அரசு கோடை விழா அப்புறம்...!'- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சேலம் கலெக்டர்!

ம்மா உத்தரவின் பேரில் சேலத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது’ பேட்டியளித்து 'புகழ்' பெற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், ' ஆளும் அதிமுக அமைச்சர்கள் வருகை தர இயலாது' என்பதால் ஏற்காடு கோடை விழாவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படுகிறார் ஆட்சியர் சம்பத் என்று தி.மு.க., உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்ததை அடுத்து சம்பத் இடமாற்றம் செய்யப்பட்டார்.  ஆனால் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் மீண்டும் சேலம் மாவட்ட ஆட்சியராக சம்பத் பொறுப்பேற்றார். பொறுப்பேற்று ஒரு மாதங்கள் கூட நிறைவேறாத நிலையில், முன்பு போலவே அ.தி.மு.க.,விற்கு ஆதரவாகப்  பேசி அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

மலைவாழ் மக்களையும், நகர்ப்புற மக்களையும் இணைத்து மலைப்  பகுதிகளில் திருவிழாவை நடத்தினால்,  மலை வாழ் மக்கள் முன்னேற்றம் அடைவதோடு அப்பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மேம்படும் என்று தமிழக அரசு தரப்பில் கடந்த 1973 ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, தமிழகத்தில் கோடை விழா அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து கோடை  விழாவிற்கான ஏற்பாடுகளை மாநிலத்தில் உள்ள அந்தந்த மலை சார்ந்த பகுதிகளில் உள்ள தோட்ட அதிபர்கள், சேவைச் சங்கங்கள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள் கொண்ட ஒரு கமிட்டி  உருவாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அமைந்த கமிட்டிக்கு அந்த மலைப்பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செயலாளராகவும், மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும், கோடை விழாவிற்கான நிதியை அப்பகுதியில் உள்ள பிரமுகர்களிடமும், தொழில் அதிபர்களிடமும் திரட்டி  நடத்தவும், விழா முடிந்ததும் கமிட்டியை கூட்டி வரவு செலவு பார்த்து மீதம் உள்ள தொகையை, அந்த கமிட்டியின் பெயரில் வங்கியில் வரவு வைக்க வேண்டும்  என்றும், கோடை விழா ஒவ்வொரு ஆண்டும் மே முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு போன்றவற்றில் கோடை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் ஏற்காட்டில் கோடை விழா நடைபெற்றபோது,  அந்த விழாவிற்கு பல தொழில் அதிபர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டு, அது முறையாக செலவு செய்யாமலும், வரவு செலவு பார்க்காமலும் இருந்தது. அதையடுத்து ஏற்காடு கோடை விழா கமிட்டியின் உறுப்பினர்கள் அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டராக இருந்த மகரபூஷணத்திடம் கணக்கு கேட்க, அவர்  அந்த கமிட்டியையே கலைத்தார்.

ஆனால் இதுநாள் வரை ஏற்காடு கோடை விழாக் கமிட்டியை மீண்டும் உருவாக்காமல்,  நேரடியாக மாவட்ட நிர்வாகமே  கோடை விழாவை நடத்தி வருகிறது. அதன் வரவு செலவுகள் குறித்து யாரும் கேட்பதில்லை என்ற தைரியத்தில் பலரிடமும் நிதி வசூல் செய்து, சரியாக கணக்கு காட்டாமல்  மாவட்ட நிர்வாகம் இருக்கிறது என்று புகார்கள் எழுந்துள்ளன.
 
இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால், மே மாதம் நடத்த வேண்டிய ஏற்காடு கோடை விழாவை நடத்த முடியவில்லை. அதனால் ஜூன் 11, 12 தேதிகளில் மலர்க்  கண்காட்சியாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் பொறுப்பேற்க கால தாமதம் ஏற்பட்டதால்,  ஜூன், 18,19 ஆகிய தேதிகளில் ஏற்காடு கோடை மலர் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து ஏற்காட்டில் உள்ள ஏரிப் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. அழைப்பிதழில் 18, 19 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், நிகழ்ச்சி தொடக்க  விழாவிற்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர்  வெல்லமண்டி  நடராஜன் உட்பட பல எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.களும் கலந்து கொள்வதாக, அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு  பலரிடம் விநியோகிக்கப்பட்டும் விட்டன.

ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை புறக்கணித்து விட்டு, நேரடியாக மாவட்ட நிர்வாகமே வசூல் வேட்டையில்  இறங்கி, சேலத்தில் உள்ள 32 பேரூராட்சிகளுக்கு தலா 30,000 வீதமும், பஞ்சாயத் யூனியன்களுக்கு தலா 50,000 வீ தமும் வசூலித்தததாகவும், ஏற்காடு தோட்ட அதிபர்களிடமும், தனியார் நிறுவனங்களான மால்கோ, ஜின்டால், ராம்கோ மற்றும், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் என வசூல் வேட்டையை தீவிரப்படுத்தி சுமார் 70 லட்சத்திற்கு மேல் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில்," அ.தி.மு.க.,வின் செயல்வீரர்கள் கூட்டம்  வரும் 18,19 தேதிகளில் நடக்கவுள்ளது. அந்தத் நேரத்தில் ஏற்காடு கோடை விழா நடந்தால், விழாவிற்கு அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் நேற்று (செவ்வாய்) சேலம் கலெக்டர் சம்பத்,  மறு தேதி அறிவிக்காமல் ' ஏற்காடு கோடை விழா' ஒத்தி வைக்கப்படுகிறது" என்று அறிவித்தார்.

அரசு விழாவை அதிமுகவிற்காக ஒத்திவைத்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சேலம் ஆட்சியர் சம்பத்.

வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close