Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுநர் உரைக்கு வரவேற்பும் எதிர்ப்பும்: அரசியல் தலைவர்கள் கருத்து!

சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யா  இன்று (வியாழன்) சட்டப்பேரவையில் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.கருணாநிதி:

"தமிழக ஆளுநர் உரை முரண்பாடுகள் நிறைந்த - ஏமாற்றத்தையே தருகிற - கொள்கைக் குறிப்புகள் எதுவுமில்லாத வெற்றறிக்கையாகவே உள்ளது.

ஆளுநர் அவர்கள் இன்று (16-6-2016) படித்த உரை - வெறும் சம்பிரதாய உரையாக - வழக்கம் போல அ.தி.மு.க. ஆட்சியின் "அம்மா" திட்டங்களை பட்டியலிடும் புராணமாக - சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைச் சந்தித்த போது வைத்த கோரிக்கைகளையே மீண்டும் நினைவுபடுத்திச் சொல்லும் உரையாகத் தான் உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்திற்கான அறிவிப்புகள், இந்த உரையில் இடம் பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, தேர்தல் அறிக்கையில் கூறிய அறிவிப்புகளில் முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களே தவிர, புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத உரையாக இருப்பது அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, முல்லைப் பெரியாறு, நதி நீர் இணைப்பு, கச்சத் தீவு போன்ற பிரச்சினைகள் 20-1-2016 அன்று ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்ட உரையில் இடம் பெற்ற பிரச்சினைகளாகும். மின்மிகை மாநிலமாக தமிழகம் ஆகி விட்டதாக ஆளுநர் உரையிலும் கூறப்பட்டுள்ளது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. ஒவ்வொரு நாளும் நாளேடுகளைப் பிரித்தால், மின்தடை காரணமாக பல மணி நேரம் மக்கள் அவதி என்று செய்திகள் வந்து கொண்டே உள்ளன. அது போலவே தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகள் பற்றியும், புதிய வேலை வாய்ப்புகள் பற்றியும் ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஆளுநர் உரை முரண்பாடுகள் நிறைந்த - ஏமாற்றத்தையே தருகிற - கொள்கைக் குறிப்புகள் எதுவுமில்லாத வெற்றறிக்கையாகவே உள்ளது."

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர்:

"தமிழக அரசிற்கு அதிகளவில் வருவாய் தரக்கூடிய தாது மணல் விற்பனையை அரசே நேரடியாக ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காரணம் தமிழக முதல்வர் தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அவ்வாறு நடந்தால் மதுவிலக்கின் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை, இந்த தாது மணல் விற்பனை வருவாயைக் கொண்டு எளிதாக ஈடு செய்துவிட முடியும்.

தமிழகத்திற்கு பொது மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தப்படும் என்ற அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் போன்ற உயர்கல்வி கற்க எளிதாக வழிவகுக்கும்.
அனைத்து ரேஷன் கடைகளையும் கணிணி மயமாக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க வழிவகுப்பதுடன், ரேஷன் பொருட்களின் இருப்பையும் இதன் மூலம் எளிதில் கண்காணிக்க முடியும்.

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பேணிக்காத்திட புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் எனவும், இலங்கை கடற்படையால் அதிக இன்னல்களுக்கும் – தாக்குதலுக்கும் உள்ளாகும் தமிழக மீனவர்களை காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்துவரும் தமிழகத்தில் பல்வேறு போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க புதிய சாலைகள் – மேம்பாலங்கள் – விரைவு சாலைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ள திட்டங்கள் மக்களுக்கு அதிகளவில் பயன்தரும்.

அதுபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கொண்டுவரப்பட்ட முதலீட்டின் அடிப்படையில் தமிழக இளைஞர்களுக்கு ஏறக்குறைய 4 லட்சத்து 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கல்வித் தகுதிக்கு ஏற்ப நேரடியாக எவ்வளவு வேலைவாய்ப்பு…? மறைமுகமாக எவ்வளவு வேலைவாய்ப்பு..? உருவாக்கப்படும் என்பதை தமிழக அரசு விரிவாக தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல் பல்லாயிரக்கணக்கான கிராம – நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் “நோக்கியா“ செல்போன் தொழிற்சாலை மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்."

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

"சட்டப்பேரவைக்கு இது முதல் கூட்டத்தொடர் என்றாலும், தமிழக ஆளுனருக்கு இதுதான் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் புகழுரைகள் நிறைந்துள்ளன. மற்றபடி மக்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் எதுவும்  இடம் பெறவில்லை.  அ.தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்ட இன்னொரு  ஆளுனர் உரை என்பதைத் தவிர இதற்கு வேறு எந்த சிறப்பம்சமும் இல்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுனருக்கு அதிகாரம் கிடையாது என்ற போதிலும் மாநில சட்டப்பேரவைகளில்  ஆளுனர்கள் ஆற்றும்  உரைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதற்குக் காரணம் ஆளுனர் உரைகளின் போது அடுத்த ஓராண்டில் மாநில அரசு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளது என்பதற்கான  முன்னோட்ட அறிவிப்புகள் இடம் பெறும் என்பது தான்.

ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஆளுனர் உரை என்பது கடந்த காலங்க்களில் அதிமுக, மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் செயல்படுத்தப்பட்ட அரைகுறை திட்டங்க்களை பாராட்டுதல், முதலமைச்சருக்கு துதிபாடுதல் உள்ளிட்டவை அடங்கிய சடங்காக   மாறி விட்டது. இந்த ஆண்டிற்கான ஆளுனர் உரையும் இதற்கு விதிவிலக்கல்ல."

 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

தமிழக சட்டமன்றத்தின் 15-ஆவது கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆற்றிய உரை இப்பொழுதுதான் புதிதாக அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டதைப் போல எதிர்காலத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே கடந்த ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்டவைதான்.

சிறு, குறு விவசாயிகள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனைத் தமிழக அரசே செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் பற்றி ஆளுநர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் தருகிறது.

டாஸ்மாக் மதுக் கடைகளை மூட கால நிர்ணயத்தை அறிவித்திருந்தால் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; புதிய கிரானைட் கொள்கை உருவாக்கப்பட்டு அதன் விற்பனை முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியதுதான். ஆனால், தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் திப் சிங் பேடி அரசுக்கு அளித்த அறிக்கையை ஜெயலலிதா அரசு இதுவரை வெளியிடவில்லை.

நாள்தோறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று ஆளுநர் உரை மூலம் ஜெயலலிதா அரசு தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது.
கல்வி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதற்கும், பள்ளி கல்லூரி கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தவும் ஆளுநர் உரையில் தெளிவான அறிவிப்புகள் இல்லை.
மொத்தத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுக் கூறும்படியான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ