Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமா? ஏக்கத்தில் எக்ஸ் தேமுதிக எம்.எல்.ஏக்கள்


அ.தி.மு.க.வில் இணைந்த முன்னாள் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள், வரும் உள்ளாட்சி தேர்தலிலாவது தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

கடந்த 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியது. அப்போது தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 8 பேர், அ.தி.மு.க.வின் ஆதரவாளர்களாகினர். இவர்கள், கடைசி வரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். அவர்கள் மீது தே.மு.தி.க தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தே.மு.தி.க.விலிருந்து விலகிய அவர்கள், அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏக்கள் அருண்பாண்டியன், அருண்சுப்பிரமணியம், பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுந்தரராஜன், சாந்தி, தமிழழகன், சுரேஷ்குமார் ஆகிய எட்டு பேர்களில் பாண்டியராஜனுக்கு மட்டும் ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு முன்பு தே.மு.தி.க.விலிருந்து விலகிய பண்ருட்டி ராமசந்திரனுக்கு, ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் பாண்டியராஜன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி விட்டார். ஆனால் பண்ருட்டி ராமசந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். மற்ற முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்கு அவர்கள் உறுதுணையாக இருந்தனர். இதில் திருத்தணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அருண்சுப்பிரமணியனின் சம்பந்தி பள்ளிப்பட்டு நரசிம்மன், இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட இன்பதுரை வெற்றிக்காக மைக்கேல் ராயப்பன் கடுமையாக உழைத்தார். ஏனெனில் தொகுதி மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு பெற்று இருந்த அப்பாவு, தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் அப்பாவுவை எதிர்த்து இன்பதுரை வெற்றி பெறுவது பெரும் சவாலாக இருந்த போதிலும், மைக்கேல் ராயப்பனால் மட்டுமே அ.தி.மு.க.வின் வெற்றி அங்கு உறுதி செய்யப்பட்டதாக கட்சியில் பேச்சு நிலவுகிறது. இதுபோல பேராவூரணியில் அருண்பாண்டியனால் அங்கு அ.தி.மு.க வெற்றிவாகை சூடியுள்ளது. அதே நேரத்தில் மதுரை மத்தி உள்ளிட்ட சில தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வெற்றி வாய்ப்பை இழந்த பண்ருட்டி ராமசந்திரனுக்கும், பாண்டியராஜன் எம்.எல்.ஏ.வுக்கும் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. அதே நேரத்தில் ஜெயலலிதாவை நம்பி வந்த இவர்களுக்கு எந்த பதவியும், பொறுப்பையும் அ.தி.மு.க வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் அமைதியாக காத்திருக்கின்றனர். கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சி தேர்தலில் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ