Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'த.மா.கா. நிர்வாகிகள் கூட்டத்தில் இதுதான் நடந்தது' ! ஞானதேசிகன் பேட்டி

.மா.கா.வின் மூத்த துணைத் தலைவர்  பி.எஸ். ஞானதேசிகன், கட்சியில் இருந்து விரைவில் வெளியேறுகிறார் என்ற தகவல் பரவலாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற  த.மா.கா. இளைஞரணி நிர்வாகிகள்  கூட்டத்தில் பேசிய சிலர்,  'கட்சியைப் பலப்படுத்த வாசன் சர்வாதிகாரியாக மாறவேண்டும்' என்றனர்.

"ம.ந.கூ.வில், நாம் சேர்ந்திருக்கக் கூடாது, சேரக் கூடாத இடத்தில் போய் நாம் சேர்ந்து விட்டோம். ஒருவேளை ம.ந.கூ.வில் , மதிமுக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம் கரை சேர்ந்திருக்கலாம்.
உண்மையான தொண்டர்களை நம்பி அய்யா மூப்பனார் வழியில் நீங்கள் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அதனால்தான் மக்கள் நலக் கூட்டணியை நோக்கி நீங்கள் போன போது, 'அய்யா, இது வேண்டாம்' என்று கேட்டுப் பார்த்தோம். நீங்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. ஆனாலும் நாங்கள் உங்களை விட்டுப் போகவில்லை.

'இனி த.மா.கா.வில் இருந்தால் ஒரு லாபமும் இல்லை' என்ற முடிவுடன் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தோட்டத்துக்குப் போய் எம்.பி.யும் ஆகி விட்டார். பீட்டர் அல்போன்ஸ், அடுத்த காங்கிரஸ் தலைவராக ஆகியே தீருவது என்று சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் விட்டார். ஆனால், நாங்கள் (தொண்டர்கள்) எப்போதும் உங்களோடுதான் இருப்போம்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேற வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை தலைவர் ஏற்றுக் கொண்டு விட்டார். அதே போல், உள்ளாட்சித் தேர்தலை தனியாக சந்திப்பது தவறு என்ற குற்றச்சாட்டை முன்வைத்துக் கூட சில இரண்டாம் கட்ட லீடர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம் " என்று ஒரே மாதிரியான ஸ்டைலில் பலர் பேசினர்.

பெரம்பலுார் மாவட்டம் சார்பாக பேசுகிறேன் என்று அடுத்ததாக மைக்கைப் பிடித்தவர்தான், த.மா.கா. லீடர்களை கொதிப்பு நிலைக்கு கொண்டு போனார். " மாவட்ட வாரியாக கட்சிப் பொறுப்புக்கு  வேண்டிய ஆட்களை போடும் வேலையில் ஞானதேசிகன், தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அனைத்து மாவட்டத்திலும் அவருடைய ஆட்கள்தான் இப்போது  நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.

அதிமுகவில் இணைய முறைப்படி கடிதம் கொடுத்து விட்டு, முதலமைச்சரின் அப்பாய்ன்ட்  கேட்டு காத்துக் கிடக்கும் சிலர் இந்த கூட்டத்திலும் 'ஒன்றும் தெரியாதது போல்' வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே போனார்.

மேடையில் இருந்த கட்சியின் தலைவர் வாசன், கோவை தங்கம் போன்றோர் கண்ணெதிரேயே இந்த விமர்சனம் வரவே '  கொதிப்பு நிலைக்குப் போன ஞானதேசிகன் மேசையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அந்த நிர்வாகி மீது வீசியடித்து விட்டு மேடையை விட்டு கீழே இறங்கிப் போய் விட்டார்.  நிர்வாகிகள் அவரை சமாதானப் படுத்தி அழைத்து வந்தனர்.  மேடைக்கு  வந்த  ஞானதேசிகன், மைக்கைப் பிடித்து, "அன்னை சோனியாவின் அன்பையும், நம்பிக்கையையும், ராகுலின் மரியாதையையும் மீறி வாசன் ஒருவருக்காகவே நான் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினேன்.

த.மா.கா.வை விட்டு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அதிமுகவுக்கு  போவதற்கு முன்னர் நான்  அங்கு போயிருந்தால் எனக்குத்தான் ஜெயலலிதா எம்.பி. பதவியைக் கொடுத்திருப்பார். என் மீது ஜெயலலிதாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு.பெருந்தலைவர் மீதான ஈர்ப்பால் காங்கிரசுக்கு வந்தேன். மூப்பனாரால் வளர்ந்தேன். மூப்பனார் குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கிறேன். இது தலைவர் வாசனுக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் சொல்லி விட்டுப் போகட்டும்" என்றார்.

த.மா.கா. அலுவலகத்துக்கு போகாமல், தனக்கு நெருக்கமான  பழைய காங்கிரஸ் நண்பர்களை மட்டும் சந்தித்துப் பேசி வரும் ஞானதேசிகன், 'கடும் மன உளைச்சலில்' இருப்பதாக தகவல். இதுகுறித்து அவரிடமே பேசினேன்.

" பெரம்பலூரைச் சேர்ந்தவர் என்று சொல்லப் படும் ஒரு தம்பிதான் அவ்வளவு மோசமாக அன்று பேசினார். நான் கோபத்தில் மேசையில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறியது உண்மைதான். அதன் பின்னர் நான் சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்தேன்.  மன உளைச்சல் காரணமாக அதிக சோர்வாகி விட்டேன். பிரஷ்ஷரும் எகிறி விட்டதால், மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டியதாகி விட்டது.

அன்று கூட்டத்தை நோக்கியோ, அந்த பெரம்பலூர் நிர்வாகியை நோக்கியோ தண்ணீர் பாட்டிலை நான் வீச வில்லை. தலைவர் வாசன், அந்த தம்பியைக் கூப்பிட்டு உடனே என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்.  அதற்குள் யாரோ, நான் அதிமுகவுக்கு போய் விட்டேன், போகவிருக்கிறேன், போயே விட்டேன் என்றெல்லாம் வதந்தியைக்   கிளப்பி விடுகிறார்கள்.

அந்த பெரம்பலூர்க்காரரை அது போல் பேசச் சொன்னது யார் என்று தலைவர் வாசன் கண்டுபிடித்து எனக்குத் தெரிவிக்க  கேட்டிருக்கிறேன்" என்றார்.

' த.மா.கா. அலுவலகத்துக்குப் போகாமல் நீங்கள் இருப்பது அதிமுகவுக்குப் போகத்தான் என்று சொல்கிறார்களே?'  என்றதும், "எனக்கு வருத்தம் இருந்தால் வீட்டிலேயே இருக்கப் போகிறேன்" என்றார் ஞானதேசிகன். ' ஒரு போதும் தலைவர் வாசனை விட்டுப் பிரிய மாட்டீர்கள் என்று சொல்லுங்கள்' என்றதும், தன்னுடைய நீளமான டிரேட் மார்க் சிரிப்புடன் விடை கொடுத்தார்.

 
ந.பா.சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ