Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் தான் காரணம்! -சொல்கிறார் ப.சிதம்பரம்

புதுக்கோட்டை: தமிழக சட்டமன்ற தேர்தலில், பல தொகுதிகளில் தி.மு.க. வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ''சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம், காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

தி.மு.க. வலிமையான கட்சி என்கிற போதும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்பதை வெற்றி பெற்ற வேட்பாளர்களே ஒப்புக்கொண்டு உள்ளனர். காங்கிரஸ் வலிமையாக இருப்பதை இது போன்று கூட்டங்கள் நடத்தி நாள்தோறும் நிரூபிக்க வேண்டும்.

அடிமட்ட தொண்டர்களை அங்கீகரிப்பதில்தான் நமது வெற்றி உள்ளது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள், 234 சட்டமன்ற தொகுதிகள் ஆகியவைகளோடு ஜனநாயகத்தின் வழித்தடம் முடிந்து விடவில்லை. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட, ஒன்றிய குழு, ஊராட்சிகளில் நமது வலிமையை வெற்றி மூலம் உணரவைக்க வேண்டும்.

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் உங்களில் பலர் வெற்றி பெறவேண்டும். நம்மால் முடியாது என்பதைவிட, முடியும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும். அடுத்து வருகின்ற 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலில் யார்? யார்? போட்டியிடப் போகிறீர்கள் என்பதை நமக்குள் பேசி முடிவு செய்ய வேண்டும். வெற்றிக்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும், உழைப்பையும் தரத்தயாராக இருக்கிறேன்.

கன்னியாகுமரியிலும், சிவகங்கையிலுமே கட்சி வலிமையாக உள்ளது. மீதமுள்ள 37 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வலிமை இல்லாமல் போனதற்கு கட்சியின் நிர்வாக கோளாறுதான் காரணம். எனவே, அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலிமை மிக்கதாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு தொண்டரின் கடமையாகும்.

தினமும் கட்சி தொண்டர்கள் கூடி விவாதிக்க வேண்டும். தொடர்ந்து விவாதிப்பதுதான் அரசியல். அதை சரியாக செய்தால் நமது வெற்றியை எவரும் தடுக்கவும் முடியாது, நம்மை யாரும் தவிர்க்கவும் முடியாது" என்றார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ