Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கும் கொலை, கொள்ளை... இதுவா தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதற்கு அடையாளம்? -கருணாநிதி

சென்னை: எங்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள், இதுவா தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதற்கு அடையாளம் என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில்...

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா?

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை. தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, 26 ஆயிரம் ரூபாய் கொள்ளை. ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாய், 3 மகள்கள் கொடூரக் கொலை. சென்னை நுங்கம்பாக்கம், ரயில் நிலையத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை. கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை. அம்பத்தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என்று 9 கொலைகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கலில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக அந்தக் கோவில் செயல் அலுவலரை அ.தி.மு.க.வினர் தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். 24-6-2016 தேதிய தினமலர் நாளேட்டில் “கொலையாய் நடக்கிறது; பயமாய் இருக்கிறது -நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கும் கூலிப்படைகள் -நடுக்கத்தோடு வாழும் வட சென்னை மக்கள்” என்ற தலைப்பில் அரை பக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பற்றித்தான் எழுதியுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை மூடி விட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?


மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருகிறார்கள். இந்தச் செய்தியை இன்று வெளியிட்டுள்ள தினமலர் நாளேடு, 'நாடகம்! 500 டாஸ்மாக் கடைகளை மூடியதில் அதிகாரிகள்.... தொடர்ந்து கப்பம் பெற முதல்வரை ஏமாற்றியதாகப் புகார்” என்ற தலைப்பில் “தமிழகம் முழுவதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதில், மக்கள் போராட்டம் நடத்திய பகுதிகளில், 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. கப்பம் கிடைக்காமல் போய்விடும் என்பதால், விற்பனை குறைந்த கடைகளை மூடும் நாடகத்தை நடத்தி, டாஸ்மாக் அதிகாரிகள், முதல்வரை ஏமாற்றி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்று செய்தி தொடருகிறது. இப்படி ஏமாற்றுகிறவர்களுக்குத் தான் இது காலம்.

மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்வதால் தான் தொடர்ந்து மக்கள் என்னை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கி யிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

ஜெயலலிதா எந்தச் சக்தியை மூலதனமாகக் கொண்டு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்று ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய் என்பதை மக்களே உணர்வார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்றால், 98 இடங்களில் அ.தி.மு.க. தோற்றிருக்கிறதே, அங்கெல்லாம் மக்கள் சக்தி அவர்கள் பக்கம் இல்லை என்பது உண்மை தானே?

2015 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் அறிவித்த முதலீடுகள் பற்றியெல்லாம் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கியிருக்கிறாரே?

2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அந்த மாநாட்டில் அறிவித்தார். கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஓடி விட்டன. ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தற்போது பதிலளித்த முதலமைச்சர், 23 ஆயிரத்து 258 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு பலர் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

அதாவது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததில் 9.60 சதவிகித முதலீடுகள்தான் செய்யப்பட்டுள்ளன. மீதி 90 சதவிகித முதலீடுகள் இன்னும் வரவில்லை. ஆளுநர் உரையில் கூறும்போது, முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கக் கூடிய வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட் டிருந்தது. தற்போது முதல்வர் பதில் கூறுகையில், பலர் வேலை வாய்ப்புகள் பெற்றதாகக் கூறி யிருக்கிறாரே தவிர, எத்தனை பேர் என்று அறுதியாகச் சொல்லவில்லை. அந்த முதலீட்டாளர் மாநாட்டினை நடத்தத்தான் தமிழக அரசு 100 கோடி ரூபாய் செலவு செய்ததாக அப்போது ஏடுகளில் செய்தி வந்தது.

ஆளுநர் உரையில் பத்தி 19ல் முதலமைச்சரின் அயராத முயற்சிகளாலும், தனிக் கவனத்தாலும் தமிழகத்தை இன்று மின் மிகை மாநிலமாக உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருப்பதாகவும், 5-6-2015 முதல் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் சொல்லி இருக்கிறார்களே?

ஆளுநர் பேரவையில் உரை யாற்றியது 16-6-2016. அதே நாள் காலையில் வந்த ஒரு செய்தியில், “தமிழகத்தின் தற்போதைய தினசரி மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள் ளது. ஆனால் 13 ஆயிரம் மெகாவாட்தான் மின் உற்பத்தி ஆகிறது. பற்றாக்குறையை சமாளிக்க வழக்கம்போல் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பதில், தமிழக மின் வாரியம் மின் வெட்டு மூலம் நிலைமையை சமாளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், சென்னையில் முக்கிய பகுதிகளான, தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களும் மின் வெட்டில் இருந்து தப்ப முடியாமல், பல்வேறு அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகர் பகுதிகளான ஈஞ்சம்பாக்கம், பெத்தல் நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பம்மல், நாகல் கேணி உட்பட பல பகுதிகளில் மின்வெட்டு என்பது தொடர்கதையாக உள்ளது. கிழக்கு தாம்பரம், வியாசர்பாடி உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் மின்வெட்டைக் கண்டித்து சாலைகளில் இறங்கிப் போராடவும் தொடங்கியுள்ளனர்” என்று அந்தச் செய்தி தொடருகிறது. இது ஒரு நாளில் வந்த செய்தி மட்டுமல்ல; கடந்த சில நாட்களாகவே இப்படிப்பட்ட செய்திகள் தொடருகின்றன. ஆனால் அ.தி.மு.க. அரசு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவ தாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

சாலை விபத்தில் தமிழகம் முதல் இடம் வகிப்பதாகச் செய்தி வந்துள்ளதே?


அப்படித்தான் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த மூத்த பொறியாளர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்தியா முழுவதும் 2015 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 14 சதவிகி தம் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் அதாவது 15,642 பேர் உயிரிழந்ததாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது

இவ்வாறு கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ