Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிலைக் கடத்தல், வரலாற்று சின்னங்கள் அழிவு:தேவை தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்!

சென்னை: இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் சிலைகள் கடத்தலும் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதும் தொடருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்தியாவின் பாரம்பரியம் – பண்பாடு – நாகரீகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் வரலாற்றுச் சின்னங்கள் யாவும் மெல்ல மெல்ல அழிந்து வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராதான கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், நடுகற்கள் ஆகிவை அழிக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக – தர்மபுரி மாவட்டத்தில் உள்ள - ராயக்கோட்டை – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள – ஒசூர் இலியாட் லாக் – திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள – வந்தவாசி கோட்டை, தண்டராம்பட்டு சிற்ப குளம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள – திருமயம் கோட்டை மற்றும் மதுரை, விழுப்புரம், வேலூர், ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் வரலாற்று சிற்பங்கள் , சின்னங்கள், அழிக்கப்படுகின்றன.

இவைகள் தொல்லியல் துறையின் அலட்சியத்தால் கணக்கிடப்படாமலும் – கண்டுகொள்ளப்படாமலும் அழிந்து வருகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதுபோல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறக்குறைய நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட சாமி சிலைகளும் – சிற்பங்களும் சமூக விரோத கும்பல்களால் திருடப்பட்டு அயல்நாட்டில் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கெனவே தனி சட்டம் 1958 – லும், தமிழகத்தில் 1966 - லும் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் – குகைகள் – பாறைகள் ஆகியவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது.

ஆனாலும், இத்துறை வருடாந்திர அடிப்படையில் புராதான சின்னங்களை கணக்கிட்டிருந்தால், நமது சிலைகளை பாதுகாப்பதுடன் – திருடப்பட்ட சிலைகளை உரிய நேரத்தில் மீட்டிருக்கலாம்.

கடந்த 2009-ம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டிலுள்ள பாரம்பரிய – புராதான சின்னங்களை பாதுகாக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இன்றுவரை நாட்டிலுள்ள எந்த ஒரு புராதான சின்னங்களும் பாதுகாக்கப்படவில்லை என்பதனை உறுதிசெய்வது போல் நடந்துவரும் தொடர்ச்சியான சிலை திருட்டு நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

அதுபோல் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான “கற்திட்டு“ - ஐ பற்றி போதிய விழிப்புணர்வும் அதனை பாதுகாக்கவும் எந்தவித நடவடிக்கையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை. இதற்கு காரணம் வெறும் 100 ஆண்டுகள் பழமையான வரலாற்று சின்னங்களை மட்டுமே பாதுகாத்து வருவதாக அரசிற்கு தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிகின்றது.

பழமையான குகைகள் – கோவில்கள் – அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் திருட்டு போனவற்றில் வெறும் 17 கலைப்பொருட்களை மட்டுமே இந்தியா இதுவரை மீட்டுள்ளது.
பண்டைய காலத்து வரலாற்று சின்னங்கள் – குகைகள் – கல்வெட்டுகளை அடுத்த தலைமுறைக்கு அழியாமல் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

உலகளவில் இத்தாலி – கம்போடியா – எகிப்து போன்ற நாடுகள் எவ்வாறு சட்டதிட்டங்களை கடுமையாக்கி, சமூக குற்றவாளிகளை தண்டித்து, புராதான சின்னங்களை பாதுகாக்கின்றதோ அதுபோல், இந்தியாவிலும் இதுபோன்ற கடுமையான சட்டங்களை இயற்றி, அழிந்து வரும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றேன்." என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ