Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்:தலைமை அதிரடி!

வேலூர்:  தனக்கு 'சீட்' கிடைக்காததால் கூட்டணி வேட்பாளருக்கு நெருக்கடி கொடுத்தார், மற்ற வேட்பாளர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற புகார் அடிப்படையில் வேலூர் தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் க.தேவராஜ் நீக்கப்பட்டு, முத்தமிழ்ச் செல்வி என்பவரை நியமித்து தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கடந்த 2016 தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதத்தில் தோற்று போனது தி.மு.க.
இதற்கு காரணம், பல இடங்களில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பார்த்த உள்ளடி வேலைகள் தான் என்று ஸ்டாலினுக்கு புகார்கள் பறந்தன. அதற்காக விசாரனை கமிட்டி அமைக்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்களை மாற்றும் படலம் அரங்கேறி வருகிறது. முதலில்  நெல்லை, கோவை, நாமக்கல் மா.செக்கள் தூக்கியடிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் தேவராஜ் நீக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம் என்று வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தோம். “தேவராஜ் முதலிலேயே நீக்கப்பட்டிருக்க வேண்டும் இவருக்கு துரைமுருகன் ஆதரவு இருப்பதால் பதவியைத்  தக்க வைத்துக் கொண்டிருந்தார். இவர் தேர்தல் சமயத்தில் செய்த வேலைகளை ஒன்றுவிடாமல் ஆதாரத்தோடு தலைவருக்கும் பொருளாளருக்கும் அனுப்பி வைத்தோம். அதன் பிறகு மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் கண்ணதாசனை விசாரனைக்காக நியமித்தார்கள். அவர்களிடம் வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதி கூட்டணி வேட்பாளரான சையது பாரூக், நசீர், மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் எல்லாரும்  புகாரளித்தனர். இவர் வாணியம்பாடி தொகுதியை தனக்கு ஒதுக்க சொல்லி 'சீட்' கேட்டார். ஆனால் கூட்டணிகாட்சியான  முஸ்லீம் லீக்கிற்கு வாணியம்பாடி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதற்காக அவருக்கு பல விதத்தில் நெருக்கடி கொடுத்தார். கூட்டணி வேட்பாளரை எதிர்த்து இவரின் ஆட்கள் வெளிப்படையாகவே போராட்டம் நடத்தினார்கள்.  வாணியம்பாடி தொகுதியில் இவர்கள் வேலையே செய்யவில்லை. அதனால் அதிமுக வேட்பாளர் நீலோபர் கபில் வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிட்டார்.

மேற்கு மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் இந்த நான்கு தொகுதிகள் வருகின்றன.இதில் திருப்பத்தூர் மட்டுமே திமுக வெற்றி பெற்றது மற்ற மூன்று தொகுதிகளிலும் இருபதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்காததால்
ஏற்பட்ட தோல்வி அது.

இதுபோன்று சுயநலமாகச்  செயல்பட்டதால் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார். எங்கள் புகாருக்கு மதிப்பளித்து மாவட்ட செயலாளர்களை நீக்குவது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது. உள்ளாட்சித்  தேர்தலில் இதன் மூலம் அதிக இடங்களைப்  பெறுவோம்.” என்று கூறுகிறார்கள்.
 
- அ.அச்சணந்தி.

படங்கள்: ச.வெங்கடேசன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ