Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவல்துறை என்றாலே லத்தியால் அடிப்பார்கள் எட்டி உதைப்பார்கள்!: கருணாநிதி

சென்னை: காவல்துறை என்றாலே லத்தியால் அடிப்பார்கள் காலால் எட்டி உதைப்பார்கள் என்ற எண்ணம்தான் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி பல்வேறு பிரச்னைகளுக்கும் சமூக அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ள சென்னை பட்டினப்பாக்கம் மதுக்கடையை மூட முன்வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"காவல் துறையினரின் அத்துமீறிய இப்படிப்பட்ட செயல்களால் பொது மக்களுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விட்டது. காவல் துறை என்றாலே லத்தியால் அடிப்பார்கள், காலால் எட்டி உதைப்பார்கள் என்ற எண்ணம் தான் பொது மக்களிடம் ஏற்படுகிறது.

இவற்றின் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேரமும் இல்லை., நினைப்பும் இல்லை.கூலிப் படையினர் செய்கின்ற கொலைகளின் எண்ணிக்கையோ அதிகரித்துக் கொண்டே போகிறது
நான் கடந்த 7ஆம் தேதி விடுத்த அறிக்கையில், தன் கையிலிருந்த தனது சம்பளப் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையனுடன் தைரியமாகப் போராடிய பள்ளி ஆசிரியை தள்ளி விடப்பட்டு செய்யப்பட்ட கொலை பற்றியும், இந்த விபத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தது பற்றியும், ஆசிரியையுடன் வந்த உறவுப் பெண் பலத்த காயமடைந்து மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வருவதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆத்திரமடைந்த பொது மக்கள் காவல் நிலையத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்த இடத்திலே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை தான் இப்படிப்பட்ட வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று கூறி, அந்த மதுக்கடையை மூடக் கோரி தினமும் ஒரு வார காலமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த அரசோ அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மதுக்கடையை மூட வேண்டுமென்று நடைபெற்ற போராட்டத்தில் தான் காந்தியவாதி சசிபெருமாள் இறக்க நேரிட்டது. பட்டினப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மகளிருடன் சேர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினர் டாஸ்மாக் கடைக்கு முன்னால் குவிந்து, அந்தக் கடையைப் பாதுகாக்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. அரசோ இந்தப் பிரச்சினை குறித்து வாயே திறக்கவில்லை. பொதுமக்களின் குரலுக்கு இனியாவது மதிப்பளித்து குறிப்பிட்ட மதுக்கடையை தமிழக அரசு உடனடியாக மூடுவது பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும் தாமதப்படுத்தப்பட்டால், இந்தப் போராட்டத்தின் காரணமாகத் தொடர்ந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படு மானால் அதற்கும் இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். எந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எமக்கென்ன என்று இறுமாந்து இருந்து விடுவார்களானால், எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத்தமாகக் கணக்குத் தீர்த்திட வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு நேர்ந்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

ஊர்ஊராகச் சென்று பாசிகள் விற்பது, கத்தி, அரிவாள்மனைக்கு சாணை பிடிப்பது ஆகிய தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நாகர்கோவில் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் சென்று 63 நாட்களாகச் சித்திரவதை செய்துள்ளார்கள். ஒரு பெண்ணின் சேலையை உருவி ஜாக்கெட்டுடன் நிற்க வைத்து, அவருடைய கணவர், பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் தொல்லைகள் செய்துள்ளார்கள். நகை திருட்டில் ஒப்புக் கொள்ளச் சொல்லி வலியுறுத்தி இப்படியெல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள். இதுபற்றி “ஜுனியர் விகடன்” விரிவாகச் செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கத்தில் நடு ரோட்டில் காவல் துறையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குகின்ற செய்தியைப் புகைப்படத்துடன் “தினமலர்” நாளேடு வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் அவர்கள் தாக்கப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றன.
திருவல்லிக்கேணி அரசு மருத்துவ மனையில் நிறைமாதக் கர்ப்பிணியையும் மற்றும் அவரது கணவரையும் காவல் துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கின்றனர். அதன் விளைவாக, அந்தப் பெண்மணியும், அவரது கணவரும் புறப்பட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அந்தப் பெண்மணியின் பனிக்குடம் உடைந்து, வலியால் துடித்து, பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்மணியை ஆம்புலன்ஸ்சில் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அனுப்பி அங்கே குழந்தை பிறந்துள்ளது. காவல் துறையினரின் அத்துமீறிய இப்படிப்பட்ட செயல்களால் பொது மக்களுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விட்டது.

காவல் துறை என்றாலே லத்தியால் அடிப்பார்கள், காலால் எட்டி உதைப்பார்கள் என்ற எண்ணம் தான் பொது மக்களிடம் ஏற்படுகிறது. இவற்றின் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேரமும் இல்லை., நினைப்பும் இல்லை.கூலிப் படையினர் செய்கின்ற கொலைகளின் எண்ணிக்கையோ அதிகரித்துக் கொண்டே போகிறது. அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரே மணலியில் கொலை செய்யப்பட்டுள்ளார். “டாஸ்மாக்” தொல்லையும், “கஞ்சா சாக்லட்” தொந்தரவும் துரத்திக் கொண்டிருக்கின்றன.

தமிழக அரசின் காவல் துறை இனியாவது விழித்துக் கொண்டு எச்சரிக்கை உணர்வோடும், மனிதாபிமானத் தோடும், நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் ஏற்கனவே கெட்டுப் போய் விட்ட சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மேலும் கெட்டுக் குட்டிச் சுவராகி விடும்; அதை மீட்டுச் சீரமைப்பதென்பது முயல் கொம்பாகி விடும்!" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close