Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிங்மேக்கர் காமராஜர்!

திகாரத்திற்கு அடித்துக்கொள்ளும் இன்றைய அரசியல்வாதிகள் இருக்கும் அதே இந்திய தேசத்தில்தான் பதவியாசை இல்லாமல், சொத்துகள் ஏதும் சேர்க்காமல், தம்மை தேடி வந்த பிரதமர் பதவியை  மறுத்து இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் பெருந்தலைவர் காமராஜர்.

படிக்காத மேதை, ஏழைப்பங்காளர் எனத் தமிழக மக்கள் இவருக்கு சூட்டிய பெயர்கள் ஏராளம். அவர் இம்மாநிலத்திற்குச் செய்த எத்தனையோ நல்ல விஷயங்களை அந்தப் பெயர்களே எடுத்துச் சொல்லிவிடும். எத்தனையோ குழந்தைகளின் பசியைப் போக்கும் மதிய உணவுத் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதாகட்டும், முதல்வர் பதவிக்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்ரமணியம், பக்தவச்சலம் ஆகியோருக்கு மந்திரி பதவிகள் கொடுத்தாகட்டும், காமராஜர் ஒரு தனித்துவம் வாய்ந்த மனிதர்.  ஆனால் மொத்த தேசத்தையும் பொருத்தமட்டில், காமராஜர் என்றால் 'கிங் மேக்கர்'.
 

1964 ம் ஆண்டு, அப்போதைய பாரதப் பிரதமர் நேரு,  இயற்கையின் மடியில் தஞ்சம் அடைந்தார். அடிமைப்பட்டுக் கிடந்த ஓர் மாபெரும் தேசத்தை 17 ஆண்டு காலம் அசாத்தியமாக ஆட்சி புரிந்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற ஒரு தலைவரை தேசம் இழந்து நின்றது. அடுத்து நாட்டை ஆளப் போவது யார்? இந்தியா என்னும் மாபெரும் தேசத்திற்கு தலைமையேற்கப் போவது யார்? அன்றைய தினத்தில் காங்கிரஸ் இன்று போல் ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிப் பாதையை சிருஷ்டிக்கும் ஒரு இயக்கமாகவும் பார்க்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த பொறுப்புகள் அந்த இயக்கத்தையே சார்ந்திருந்தது. அந்தக் கட்சியின் தலைவராய் இருந்தவர், தமிழகத்தின் தென்கோடியில் பிறந்த ஒரு இரும்பு மனிதர். ஆம், 1963ல் நேருவால் காங்கிரசின் தேசியத் தலைவராக்கப்பட்ட காமராஜர்தான் பாரதத்தின் அடுத்த பிரதமர் என நாற்பத்தி எட்டுக் கோடி இந்தியனும் எதிர்பார்க்க, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியது அந்தக் கருப்பு வைரம். அச்சமயம் காங்கிரசின் கொள்கைகளை பலமாக எதிர்த்து வந்த மொரார்ஜி தேசாயை எதிர்த்து,  துணிகர முடிவை எடுத்தார் காமராஜர். இன்று உள்ளூர் சேர்மன் பதவிக்கே எத்தனை அக்கப்போர்கள் நடக்கின்றன. ஆனால் அந்த எளிய மனிதர் அந்த உயர்ந்த பதவியை புறந்தள்ளினார்.
   

சரி போகட்டும் என்று நினைத்தால், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் அதே சூழ்நிலை. பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சிண்டிகேட் குழுவின் ஒரே தாரக மந்திரம், 'தேசாய் பிரதமராகக் கூடாது' என்பதுதான். ஆனால் எப்படி? அந்த மாபெரும் அரசியல்வாதியை யாரைக்கொண்டு எதிர்ப்பது? மொத்தக் குழுவும் காமராஜரை முன்னிறுத்தியது. ஆனால் அந்த உன்னதத் தலைவர் என்ன சொன்னார் தெரியுமா? “காங்கிரசின் பலம் சமீப காலமாகக் குறைந்து வருகிறது. தேசிய அளவில் காங்கிரசை ஒருங்கிணைக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி இரண்டும் சரியாகத் தெரியாத நான் அந்தப் பதவியில் அமருவது   சாத்தியமில்லை” என்று  மறுத்து, யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திராவைப் பிரதமராக்கினார்.
 

   

இதைவிட ஆச்சர்யப்படும் வகையில் இன்னொரு காரியத்தை காமராஜர் செய்துள்ளார். காமராஜரை நேரு ஏன் காங்கிரஸ் தலைவராக்கினார் தெரியுமா? அதற்கு ஒரே காரணம் ‘கே-பிளான். 1962ல்,  தமிழகத்தின் முதல்வராக 3வது முறையாகப் பதவியேற்ற காமராசர். காங்கிரசின் வீரியம் குறைந்து வருவதைக் கண்டார். பதவி என்னும் மோகம் மூத்த தலைவர்களை ஆட்கொண்டதை உணர்ந்த காமராசர் தீட்டிய திட்டம்தான் கே-பிளான். அதன்படி மூத்த தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அடிமட்டத்திலிருந்து பாடுபட வேண்டும். இதற்கு முன்னோடியாக தனது முதல்வர் பதவியையே 1963 ம் ஆண்டு,  காந்தி ஜெயந்தி அன்று ராஜினாமா செய்தார் காமராஜர்.

அதைத் தொடர்ந்து சாஸ்திரி, பிஜு பட்னாயக் உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் ராஜினாமா செய்து காங்கிரசை பலப்படுத்த களம் கண்டனர். காமராஜரின் இந்தச் செயல்தான் நேருவை ஈர்த்தது. படிக்காத அம்மேதையின் நிர்வாக திட்டங்கள் அவரை தேசம் போற்றிய தலைவராக உயர்த்தியது.
   

தமிழகத்தில் எந்தக் கட்சியை எடுத்தாலும் அவர்கள் கூறும் வாக்குறுதி, “நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம்” என்பதுதான். அது அவர்களால் முடியாது. அந்த வாக்குறுதிகள் தோற்றாலும், அந்த வாக்குறுதிகள் மூலம் ஒரு தேசத் தலைவனாய் காமராசர் ஒவ்வொரு முறையும் வென்று கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கை,  பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஒரு மிகப்பெரிய பாடம். 

- மு.பிரதீப் கிருஷ்ணா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close