Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..!'- தஞ்சை இடைத்தேர்தலில் வைத்திலிங்கம்

ஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்பதைக் கூடிய விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளோடு தற்போது காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் தேர்தல் நடக்கும் என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் 'குட் புக்'கில் இடம் பிடித்து, நால்வர் அணியில் கால்பதித்து, அமைச்சராக அதிகார பலத்தோடு வலம் வந்த வைத்திலிங்கம், மக்கள் மனதில் இடம்பிடிக்காமல் போனதால் நடந்து முடிந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அவரின் தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 'வைத்திலிங்கம் எனது நம்பிக்கைக்குரியவர்' எனும் விதமாக ராஜ்யசபா எம்.பி பதவியை அவருக்கு கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா.

தற்போது அதே பரபரப்போடு டெல்லிக்கு போய் வந்து கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம். 'இதற்கு முன்பு, ஈரோடு கே.வி. ராமலிங்கமும் ராஜ்யசபா எம்.பி-யாகத்தான் இருந்தார். அவரை ராஜினாமா செய்யச் சொல்லி, எம்.எல்.ஏ. ஆக்கி பவர் ஃபுல்-லான பொதுப்பணித்துறைக்கு அமைச்சராக்கினார் ஜெயலலிதா. அதே பாணியில், தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ள வைத்திலிங்கத்தையும் ராஜினாமா செய்யச் சொல்லி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில் நிறுத்தி, அவரை எம்.எல்.ஏ. ஆக்கி அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் போகிறார்' என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த சம்பவத்தை சொல்கிறார்கள் கட்சியினர்." 13 பேர் அ.தி.மு.க சார்பில் ராஜ்யசபா எம்.பிக்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான நிர்வாக பதவிகளை ஜெயலலிதா அறிவித்தார். அந்த லிஸ்டில் சீனியரான வைத்திலிங்கம் பெயர் இல்லை. வைத்திலிங்கத்தை மாநில அரசியலில் கொண்டு வருவதே ஜெயலலிதாவின் விருப்பம் என இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்"  என்கின்றனர் தஞ்சை அதிமுகவினர்.

தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தை முன்னிறுத்துவதற்கு கட்சிப் பிரமுகர்கள் இரண்டு காரணங்களை சொல்கிறார்கள்.

முதல் காரணம்... ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை திட்டமிட்டு தோற்கடித்த அ.தி.மு.க-வினர் போட்ட கணக்கு, 'சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஜெயித்து ஆட்சியமைக்கும்' என்பதுதான்.  அப்படி தி.மு.க ஜெயித்தால், வைத்திலிங்கத்தின் அரசியலே ஓய்ந்துவிடும் என்று நினைத்தனர். ஆனால், நடந்ததோ வேறு. ஒரத்தநாடு தொகுதியில் தி.மு.கழகம் ஜெயித்தது. ஆட்சியில் அமர்ந்ததோ, அ.தி.மு.க. ஒரத்தநாட்டில் தேர்தலின் போது வைத்திலிங்கத்திற்கு எதிராக சொந்த கட்சியினரே செய்த உள்ளடி வேலைகளை கேள்விப்பட்ட ஜெயலலிதா, வைத்திலிங்கத்தை டெல்லிக்கு அனுப்பினார். கட்சியிலும் முக்கியப் பொறுப்பைத் தந்தார்.

இதைப்பார்த்து மிரண்டுபோன வைத்திலிங்கத்தின் எதிர்கோஷ்டியினர், 'இனி இவரை பகைத்துக்கொண்டு இருக்கமுடியாது' என்பதை உணர்ந்து அவரிடமே சரண்டர் ஆகிவிட்டனர். அவரை தற்போது தஞ்சாவூர் தொகுதியில் நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள், கடந்த தேர்தலில் அவருக்கு எதிராக  'களப்பணியாற்றிய'  அதே புண்ணியவான்கள்தான்.

உள்ளாட்சி தேர்தலுக்காக செயல்வீரர்கள் கூட்டத்தை ஆங்காங்கே நடத்தி வரும் வைத்தலிங்கம், 'துரோகிகளால்தான் நான் தோற்றுப் போனேன்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். தஞ்சையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், 'துரோகிகளெல்லாம் திமுகவிற்கு ஓடிவிடுங்கள்' என்றும் பேசினார். அமைச்சராக இருந்தபோது தன்னோடு இருந்தவர்கள் யாரையும் இப்போது தன் அருகே வைத்துக்கொள்ளவில்லை. அமைச்சர் பதவி வகித்தபோது தனக்கு எடுபிடி வேலை பார்த்தவர் முதல் குறுநில மன்னர்களாக தன்னைச் சுற்றி வலம் வந்தவர்கள் வரை யாரிடமும் அதிகளவு நெருக்கம் காட்டுவதில்லை இப்போதெல்லாம்..

அமைச்சராக இருக்கும்போது யாரும் அவரை எளிதில் சந்திக்க முடியாது. அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தை தாண்டி எந்த கூட்டமும் போய் சந்திக்க முடியாது. ஆனால், இப்போது தஞ்சை தொகுதி நிர்வாகிகளை மட்டும் எப்போது நினைத்தாலும் சந்திக்க அனுமதி தருகிறார். வார்டு செயலாளர் முதல் பகுதிச் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் என்று அனைவரையும் எந்நேரமும் சந்தித்து பேசி வருகிறாராம். மாநில அரசியலில் எப்படியாவது மீண்டும் அதிகார பலத்துடன் வலம் வரவேண்டும், என்பதே அவரின் இப்போதைய ஒரே லட்சியம் என்கிறார்கள். அதன்படிதான் தஞ்சை தொகுதி நிர்வாகிகளிடையே நெருக்கத்தையும், இறுக்கத்தையும் காட்டி வருகிறார் வைத்திலிங்கம் என்கிறார்கள்.

இரண்டாவது காரணம்... பாரம்பர்யமான தஞ்சாவூர் மாவட்டத்தில்,  அதிகார பலமுள்ள ஒருவர் அமைச்சராக வலம் வரவேண்டும் என்ற கட்சியினரின் விருப்பம். தற்போது விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் துரைக்கண்ணு, பாபநாசம் தொகுதியில் நின்று ஜெயித்தவர். அவரின் செயல்பாடு அவ்வளவாக திருப்திகரமாக இல்லை என்று கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் என்ற முறையில் துரைக்கண்ணு தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கட்சியின் சார்பில் நடந்த  உள்ளாட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தூர்வாரும் பணிகளை மட்டும் சென்று பார்வையிட்டார். பட்டுக்கோட்டை, பேராவூரணி எம்எல்ஏக்கள், அதிகாரிகள்கூட அமைச்சர் என்ற முறையில் அழைப்பது இல்லையாம்.

'பாபநாசத்தை தாண்டி, தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு அவர் வருவதில்லை' என்கிற புலம்பல் கட்சிக்காரர்கள் மத்தியில் ஒலிக்கிறது. சென்னைக்கு செல்வதாக இருந்தாலும் பாபநாசத்தில் இருந்து ரயில் ஏறிவிடுகிறார். தேர்தலில் ஜெயித்து பல நாட்கள் ஆகியும், மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் கூட அவர் தங்கியதில்லை. இங்கு தங்கினால், மாவட்டம் முழுக்க உள்ள கட்சிக்காரர்கள், பொதுமக்கள், அதிகாரிகள்...என அனைத்து தரப்பினருக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நிலையில், ராஜ்யசபா எம்.பியாக வைத்திலிங்கம் ஆக்கப்பட்டதும், தஞ்சாவூரில் உள்ள சுற்றுலாமாளிகையில் தங்க ஆரம்பித்தார். இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவும் தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு இப்போதெல்லாம் விசிட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த இரண்டு காரணங்கள் ஒருபக்கமிருக்க... தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் பிஸியாகிவிட்டார் வைத்திலிங்கம். மேயர், நகரச் செயலாளர், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என கோலோச்சி வந்தவர்களை மாற்றுவதற்கு ஆலோசனையும் நடைபெற்று வருவதாகவும் சொல்லுகிறார்கள். 'தஞ்சை நகர் பகுதியில் அதிகாரம் மிக்கவர்களாக வலம் வந்த பலரும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள்' என்ற அதிருப்தி உள்ளூர் கட்சியினர் மத்தியில் இருப்பதால்தான், அத்தகைய ஆட்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கல்தா கொடுத்துவிட்டு, புதியவர்களை நியமிக்க வைத்திலிங்கம் அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதேநேரத்தில், தஞ்சை தொகுதி வேட்பாளராக தாம் அறிவிக்கப்படுவோமா என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி. தஞ்சை தொகுதியில் வைத்திலிங்கம்  நிறுத்தப்பட்டால், ரெங்கசாமிக்கு ராஜ்யசபா எம்பி நிச்சயம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

வைத்திலிங்கமும் டெல்லிக்கு போவதை விட, மீண்டும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவே அதிகம் விரும்புகிறார். ஒழுங்கு நடவடிக்கை குழுவில் அங்கம் வகித்தும், தன்னை தோற்கடித்தவர்களை, துரோகிகள் என்று பொது இடத்ததில் கோபம் காட்டும் அளவுக்கு சென்றாலும், வைத்திலிங்கம் அவர்களை கட்சியில் இருந்து நீக்காததற்கு தஞ்சை தொகுதி இடைத்தேர்தலை மனதில்கொண்டுதான் என்கிறார்கள், அதிமுக வட்டாரத்தில். 

அதிகாரத்தை அடைவதற்காக எதிரிகளை நண்பராக்கிக்கொள்வதும், நண்பர்களை எதிரியாக்கிக்கொள்வதும்தானே அரசியல்!

- ஏ.ராம்
படங்கள்: கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்