Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாந்திரீகம்… பரிகாரம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ஆன்மீக அதிரடி!

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தீவிர ஆன்மீகவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரால்தான் சேலத்திலிருக்கும் 'அப்பா பைத்தியம் சாமி கோயில்' பிரபலமானது என்பதை, அந்த அப்பா பைத்தியம் சாமிகளாலேயே கூட மறுக்க முடியாது. அப்படிப்பட்ட அப்பா சாமியே அசந்துபோகும் வகையில் பரபரப்பாக பேசப்படுகிறது தற்போதைய முதல்வர் நாராயணசாமியின் திடீர் பூஜை புனஸ்கார விவகாரம்.

காங்கிரஸ் ஆட்சியில் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்தவர் நாராயணசாமி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவரது பார்வை மாநில அரசியலின் மீது திரும்பியது. அதற்கான களப்பணியில் புதுச்சேரியில் அவர் இறங்கத் தொடங்கியதுமே சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராகப் பலமான எதிர்ப்பு கிளம்பியது.

ஒரு கட்டத்தில் நாராயணசாமி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில், என்.ஆர் காங்கிரஸ் எளிதில் ஆட்சியைப் பிடித்துவிடும் என்றும், காங்கிரஸ் கட்சிக்காரர்களே உள்ளடி வேலை பார்த்து ரங்கசாமியை வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என்ற பேச்சும் காங்கிரஸார் மத்தியில் நிலவியது. விளைவு அப்போதைக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டார் நாராயணசாமி. இதுதான் அவருக்கு ஏற்பட்ட முதல் சிக்கல். அதைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அதற்குப் பிறகு,  முதல்வர் யார் என்பதில் நடந்த போட்டாப் போட்டியில்ம் உடனடியாக முதல்வரை அறிவிக்க முடியாமல் சிக்கித் தவித்தது.

இந்தக் குழப்பத்திற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக முன்னாள் ஐ,பி.எஸ் அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரிக்கு கவர்னராக அறிவித்தது, மத்திய பாஜக அரசு. எப்படியாவது முதல்வர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்று டெல்லிக்கும் புதுவைக்கும் இடையே பறந்து கொண்டிருந்த நாராயணசாமிக்கு இதுவும் கூடுதல் சிக்கலாக அமைந்தது.

பிறகு ஒருவழியாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டெல்லி லாபியை வைத்துத் தன்னை முதல்வராக அறிவிக்க வைத்தார். ஆனால் தலைமையின் இந்த முடிவிற்கு அப்போதே சொந்தக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பு கலவரமாகவே மாறியது. ஆனால் அதையும் சமாளித்து ஒரு வழியாக முதல் அமைச்சராக பதவியேற்றார். தேர்தலில் போட்டியிடாத ஒருவர், முதல் அமைச்சராக பதவியேற்றால் அடுத்த ஆறு மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பது விதி.

இந்தச் சூழலில் இவர் முதல்வராகப் பதவியேற்றதை யாரும் ரசிக்கவில்லை, என்பதால் அவருக்காக தொகுதியை விட்டுத்தர அனைவரும் தயக்கம் காட்ட, நொந்து போனார் நாராயணசாமி. இதற்கிடையில் புதுச்சேரியின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரண்பேடி தினம்தோறும் அதிகாரிகள் கூட்டம், அரசுத் துறைகள் ஆய்வு, அதிரடிச் சட்டங்கள் என களத்தில் இறங்க, பொதுமக்கள் புகார் மனுக்களோடு கவர்னரை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். இது மக்கள் பிரதிநிதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. ஆனாலும் கவர்னரின் வேகத்துக்குத் தடைபோட்டு மக்களின் கோபத்தை சம்பாதிக்க யாரும் விரும்பவில்லை. மாறாக அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதிப் பிரச்சனையைத் தீர்க்க அவரிடமே மனு கொடுக்க ஆரம்பித்தார்கள். அனைத்து ஊடங்கங்களும் அவரை நோக்கித் திரும்ப ஆரம்பித்தன.

உச்சகட்டமாக சபாநாயகரே, தனது தொகுதியில் சாக்கடை பிரச்னையைத் தீர்க்குமாறு கோரிக்கை வைத்த கொடுமையும் அரங்கேறியது. ஆனாலும், தான் தேர்தலில் நின்று வெற்றி பெறும் வரை வாய் திறக்கக் கூடாது என்று மௌனம் காத்த நாராயணசாமியால் அதிகாரிகளும், அதிகாரங்களும் மெல்ல தனது கையை விட்டு நழுவிச் செல்வதை ஏற்க முடியவில்லை. இதற்கிடையில், தன்னைச் சந்திப்பவர்களிடத்தில் “இன்னும் மூன்று மாதத்தில் மீண்டும் நான்தான் முதல்வர்” என்று சொன்ன ரங்கசாமி, அதற்கான பூஜைகளை செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு கதிகலங்கிப் போனாராம் நாராயணசாமி.

மேலும் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கியபோது, " உங்கள் கட்சிக் கொடியின் நடுவில் இருக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பித்தமாவது தெளியும்" என்று சொன்னதோடு, " ரங்கசாமி மாந்திரீகம், பரிகார பூஜை என முழுக்க முழுக்க சாமியார்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். மந்திரத்தால் எல்லாம் ஆட்சிக்கு வர முடியாது. மக்களுக்கு நல்லது செய்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும்” என்று கடுமையாக விமர்சித்தவர் நாராயணசாமி. ஆனால் அவரே தற்போது முழுக்க முழுக்க மாந்திரீகத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.  

"முதல்வர் அலுவலகப் பணியைக் கூட ஒழுங்காக செய்ய முடியாத அளவிற்கு முன்னால் முதல்வர் ரங்கசாமியின் யாகங்களுக்கும் பூஜைகளுக்கு எதிர் யாகங்கள் நடத்த ஆரம்பித்துவிட்டார்” என்று அங்கலாய்க்கின்றனர் காங்கிரஸ் தரப்பில்.

" நாராயணசாமி முதல்வராகப் பதவியேற்றதில் இருந்து, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறும் வழியாகவே உள்ளே சென்று, அதே வழியிலேயே வெளியேறுகிறார். முதல்வர் அறையில் ஏற்கெனவே  ரங்கசாமியால் வைக்கப்பட்டிருந்த 'அப்பா பைத்தியம் போட்டோ' அகற்றப்பட்டு ராமானுஜர் படமும், கொல்லூர் மூகாம்பிகை படமும் வைக்கப்பட்டது. அறையில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன. தரையில் பச்சை நிறம் கலந்த டைல்ஸ் புதியதாக பதிக்கப்பட்டிருக்கிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர், புதுக்கோட்டை புவனேஸ்வரி அதிஷ்டானம், ஆலங்குடி குருபகவான், குறிஞ்சிப்பாடி ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், உளுந்தூர்ப்பேட்டை, திருநள்ளாரு, திருச்செந்தூர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்த்தஜாம பூஜை, என ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள புதுச்சேரிக்கும் கோவில்களுக்குமாக சுற்றி வருகிறார். கையெழுத்துப் போடுவதில் இருந்து, காரில் ஏறுவது வரை அனைத்திலுமே வாஸ்து வாஸ்து வாஸ்துதான். அதையும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் செய்கிறார் நாராயணசாமி." என்கிறார்கள் காங்கிரஸார்.

அதெல்லாம் சரி, முதல்வர் நாராயணசாமிக்கு இந்த ஆன்மீக ஆலோசனைகளை அளிக்கும் அந்த ஜோதிடர் யார் என்பதுதான் இதில் ஹைலைட். அந்த மகா ஜோதிடர் வேறு யாரும் இல்லை, முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்தவரேதான் தற்போது நாராயணசாமிக்கும் ஆலோசகர். அதிகாரம் இல்லாத இடத்தில் ஆன்மீகத்திற்கு என்ன வேலை என்று முடிவெடுத்த ஜோதிடர், இடம் மாறிவிட்டார் போலும். இடைத்தேர்தலுக்கு தொகுதியை தயார் செய்யும் வேலையைப் பார்ப்பதா, ரங்கசாமியின் யாகத்துக்கு எதிர் யாகம் நடத்துவதா, தினம் தோறும் கவர்னர் கிரண்பேடி அடிக்கும் விசிட்டுகளுக்கு எதிர் விசிட் அடிப்பதா என்ற குழப்பத்திலும் பதற்றத்திலுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குருஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ