Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த், பிரேமலதாவுக்கு சோதனை தரும் திருப்பூர்! - அவதூறு வழக்கில் பிடியாணை

கோவை: அவதூறு வழக்கில் தொடர்ச்சியாக ஆஜராகாததால், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தே.மு.தி.க. சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் பிறப்பிக்கும் வகையில் அவதூறாக பேசியதாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 3 விசாரணைகளின்போதும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மட்டும் ஆஜராகி, அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகததற்கு விளக்கம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில், வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவை நேரில் ஆஜராகுமாறு, திருப்பூர் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்து உள்ளது.

சோதனை தரும் திருப்பூர்...

விஜயகாந்த், பிரேமலதா மீது அதிக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது திருப்பூரில்தான். கடந்த 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பூர், காங்கேயம் ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீதும், 2013 ம் ஆண்டு மே மாதம் திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இதேபோல், 2015 ம் ஆண்டு பல்லடம் பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீதும், 2016 ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறாக பேசியதாக பிரேமலதா மீதும் என பல வழக்குகள் விஜயகாந்த், பிரேமலதா மீது திருப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன், திருப்பூரில் போடப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்ற பிரேமலதா, உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- ச.ஜெ.ரவி

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ