Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விக் கடனை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது:மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடனை வசூலிப்பதில் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்யவேண்டும் என்றும் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  
 
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

" இன்றைய (26-7-2016) மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது (Zero Hour) கல்விக்கடன் கிடைப்பதிலும், கொடுத்த கல்விக்கடனை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதிலும், வங்கிகளின் அணுகுமுறை சீர்கெட்டு இருப்பதைச்  சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் மாநிலங்களவையில் பேசியதாவது:

“கல்விக்கடன் என்பது மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனுடன் ஒப்பிட முடியாது. இது நமது இளைஞர்கள் முன்னேறுவதற்கான முதலீடாக கொள்ள வேண்டும்.”

வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவைகளை விளக்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டும் வங்கி நிர்வாகங்கள், கல்விக்கடன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
இப்படி இருந்தும் கல்விக்கடன் பெற வங்கிகளை அணுகுகின்ற மாணவர்களுக்கு எவ்வித வாஞ்சையும் காட்டுவது கூட கிடையாது. ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 20 சதம் மாத்திரமே மானியமாகக்  கொடுத்துள்ளது. மீதி 80 சதம் வட்டியும் கடன் வாங்கிய மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வட்டி மீதான மானியத்தை முழுவதும் கொடுக்க தவறிய நிலையில் இந்தக்  கல்விக்கடன்கள் வாராக்கடன்களாகக்  (NPA) கருதப்பட்டது. மத்திய அரசு கல்விக்கடன் மீதான வட்டிக்கு 100 சதம் மானியம் என்று அறிவித்துள்ளது.இவ்வாறு அரசின் தவறிழைப்பினால் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

அவைத்தலைவர் அவர்களே, கல்விக்கடன் வசூலிப்பதில் வெட்கக்கேடான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தற்போது ஸ்டேட் பேங்க் தனது கல்விக்கடனை வராக்கடனாக அறிவித்து அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளிடம் விற்று விடுகிறது.

இதனால் இந்த அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகள் கடனை வசூலிப்பதில் வன்முறையை பயன்படுத்துகின்றன. இக்கம்பெனிகள் ஷேக்ஸ்பியர் எழுதிய வெனிஸ் நகர வியாபாரி என்ற நாடகத்தில் கடன் வசூலிக்கும் ஷைலக் போல் பணம் அல்லது உயிர் என்பது போல் நடவடிக்கையில் இறங்குகின்றனர். தமிழகத்தில் இவ்வாறு அவதிக்குள்ளான மாணவர் ஒருவர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கல்விக்கடன் நமது பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறிட கல்விக்கடன் மிகவும் அவசியமானதாகும். ஆகவே,
1. அரசு, வங்கிக்கடன் வசூலிப்பதை அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளிடம் விற்பதை தடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
2. வங்கிகள் கொடுத்த கடன் மீது மறு நிதி அளிக்க தனியாக கடன் உத்தரவாதம் நிறுவனம் தொடங்கப்பட வேண்டும்.
3. கல்விக்கடன் மீது அரசு உறுதி அளித்த 100 சத மானியத்தை வங்கிகளுக்கு எந்த குறைவும் இல்லாமல் முழுவதும் அளித்திடுவதை உறுதி செய்ய வேண்டும்.
4. கல்விக்கடன் மீதான வட்டி அல்லது அசல் திரும்பப்பெறுவதில் உள்ள கால தாமதத்தினால் அதை வாராக்கடன் என்ற பட்டியலில் சேர்க்கக் கூடாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ