Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜகண்ணப்பனுக்கு எதிராக கச்சைகட்டும் அ.தி.மு.கவினர்!

" தேர்தல் நேரத்தில் .தி.மு.கவினருக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மற்றும் சமுதாயத்தினரைப் பணியாற்ற சொன்ன கண்ணப்பனை கட்சிக்குள் எப்படி அனுமதிக்கலாம்” என்று அ.தி.மு.க தலைமைக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள் அ.தி.மு.கவினர்.

ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பதவி வகித்த 1991-95 ம் ஆண்டு காலத்தில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை ஆகிய முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு அ.தி.மு.கவின் வலுவான அதிகார மையமாக வலம் வந்தவர் கண்ணப்பன். 96 ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்த பிறகு, 'தோல்விக்கு காரணம் நீங்கள்தான்'  என்று ஜெயலலிதாவிடம் நேரடியாகவே சீறியவர். அதன்பின்னர், அ.தி.மு.க விலிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களுடன், 'மக்கள் தமிழ் தேசம்' என்ற  புதிய கட்சியைத் துவக்கி,  தனது பெயரை ராஜகண்ணப்பன் என்று மாற்றிக் கொண்டார்.

2001 ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில், தி.மு.கவுடன்  கூட்டணி வைத்தார். அந்தத் தேர்தலில், இளையான்குடியில் போட்டியிட்ட கண்ணப்பன் உள்பட, அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். அதன்பின்னர் சில மாதங்களிலேயே தனது கட்சியைக் கலைத்துவிட்டு, தி.மு.கவில் ஐக்கியமானார் ராஜகண்ணப்பன். தி.மு.கவின் அதிகார சக்தியாக அப்போது இருந்த அழகிரியிடம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் 2006 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இளையான்குடி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். அழகிரியிடம் தனக்கு அமைச்சர் பதவிவேண்டி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  ஆனால் மாவட்டச் செயலாளர் பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், இவருக்கு அமைச்சர் பதவி வழங்க தி.மு.க தலைமை மறுத்துவிட்டது.

சிவகங்கை மாவட்ட தி.மு.க,  பெரியகருப்பன் அணி, கண்ணப்பன் அணி என இரண்டாகப்  பிரிந்து செயல்பட்டது. பெரியகருப்பனும், கண்ணப்பனும் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தலைமையும் இரண்டு அணியாக இருப்பதை, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.  அமைச்சர் பதவிக்காக மூன்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், அதில்  கண்ணப்பனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

தி.மு.க வில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து சேர்ந்த கண்ணப்பனுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், மீண்டும் அ.தி.மு.க முகாமுக்கு தூது விட, அ.தி.மு.க வில் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்கள், பெயர் சொல்லும்படி இல்லை என்பதால், இவரை இழுத்துக் கொள்ள ஓ.கே.சொன்னார்கள். அதன்பின், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.கவில் இணைந்தவருக்கு அடுத்த மூன்று மாதத்திலே அதிர்ஷ்டம் அடித்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அ.தி.மு.கவில் இவர் இணைந்ததும், இவரால் பயன் அடைந்த அ.தி.மு.கவினரும் உற்சாகம் அடைந்தனர். ஆனால், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார் கண்ணப்பன். அதன் பின் சிவகங்கை மாவட்டம் பக்கம் எப்போதாவது எட்டிப் பார்த்தவருக்கு, இரண்டாவது முறையாக, 2011 சட்டமன்ற தேர்தலில், திருப்பத்துார் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க தலைமை வாய்ப்பு அளித்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பெரியகருப்பனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதன்பின் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சில முறை மட்டுமே சிவகங்கை மாவட்டத்தில் தலைகாட்டியதால், நொந்து போன இவருடைய விசுவாசிகள் அணிமாறினார்கள். மாவட்டத்தில் இவருடைய செல்வாக்கும் குறையத் துவங்கியது. சசிகலா குடும்பத்தினரிடம் மட்டும் தொடர்பு வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். சசிகலா தரப்பிடமும் தனது எண்ணத்தைத் தெரியப்படுத்தினார். ஆனால் மாவட்ட அ.தி.மு.கவில் இவருக்கு செல்வாக்கு இல்லாமல் இருப்பதை உணர்ந்த தலைமை,  வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டது. மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இவர் பெரிதாக வேலை பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை தலைமையிடம் பதியவைத்தனர் எதிர்கோஷ்டியினர். இதனால் அவர் மிகவும் எதிர்பார்த்த திருப்பத்தூர் தொகுதி,  மாவட்ட பேரவைச் செயலாளர் அசோகனுக்கு வழங்கப்பட்டது.

தனக்கு வாய்ப்பு வழங்காததால், கண்ணப்பன் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் திருப்பத்துாரில் உள்ள தனது ஆதரவாளர்களையும் அ.தி.மு.கவினருக்கு வேலை செய்ய வேண்டாம் என்று கூறியாதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் மாநிலம் முழுவதும் இருக்கும் தனது ஆதரவாளர்கள், மற்றும் யாதவ சங்க பிரமுகர்களை கண்ணப்பன் மதுரையில் சந்தித்துப் பேசி, 'அ.தி.மு.கவினருக்கு யாரும் வேலை செய்ய வேண்டாம்' என்று கூறியதாக செய்தி பரவியது. அ.தி.மு.கவில் இருந்து விலகி, வேறு கட்சியில் இணையும் 'மூடில்'  கண்ணப்பன் இருக்கிறார் என்ற செய்தி அ.தி.மு.க தலைமைக்கும் எட்டியது. ஆனால் அதை தலைமை கண்டு கொள்ளவில்லை என்று அ.தி.மு.கவினரே கூறினார்கள். தேர்தல் முடிந்து அ.தி.மு.கவே மீண்டும் ஆட்சி அமைத்தால் கண்ணப்பன் கொஞ்சம் அமைதி காத்தார். அ.தி.மு.கவில் பெரிய அளவில் செயல்படாமல், தனது தொழிலில்  கவனம் செலுத்தி வந்தவர், அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமான நபர்களை வைத்துப் பேசி, தனக்கு மாநில அளவில் பொறுப்பினை எதிர்பார்த்தார்.

ஆனால், இவர் மீது எழுந்த விமர்சனங்களால், இவரை கொஞ்சம் ஓரம் கட்டி வைக்கவே, அ.தி.மு.க தலைமை விரும்பியது. இந்நிலையில் அ.தி.மு.க வின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம்,  திருப்பத்துாரில் நடைபெற உள்ள பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு  ராஜ கண்ணப்பனை சிறப்பு அழைப்பாளராக தலைமை அறிவித்துள்ளது. இது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த மூன்று நாட்களாக இது குறித்த புகார்கள், ஃபேக்ஸில் கார்டனுக்கு பறந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “ 'சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஜெயிக்க கூடாது' என்று தனது ஆதரவாளர்களை தி.மு.க வினருக்கு வேலை பார்க்கச் சொன்னவர் கண்ணப்பன். தனக்கு 'சீட்' கிடைக்காத விரக்தியில் கட்சி மாறவே தூதுவிட்டவர். மாவட்ட கட்சியில் இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் என்ன செய்துள்ளார் என்பது அவருக்கே தெரியும். கட்சிக்கே துரோகம் செய்ய நினைத்த அவரை, கட்சி பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எப்படி போடலாம்.

தலைமையிடம் நாங்கள் கேட்டபோது, 'அவர் எப்படி உள்ளே வந்தார்' என்கிறார்கள். தனக்கு இருக்கும் பழைய நட்பை பயன்படுத்தி, இவர் தந்திரமாக பொதுக்கூட்ட அறிவிப்பில் தனது பெயரை இடம் பெற செய்துள்ளார். இவர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டால் அந்த கூட்டத்தில் நாங்கள் யாரும் கலந்து கொள்ளப்போவது இல்லை. நாங்கள் இதைப் புகாராக அம்மாவிற்கு அனுப்பிவிட்டோம்” என்கிறார்.

கண்ணப்பன் ஆதரவாளர்களோ, “கண்ணப்பனை பற்றி அம்மாவுக்கு தெரியும். அதனால்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.

- அ.சையது அபுதாஹிர்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ