Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.பி.எஸ் சம்பந்திக்கு செக் வைத்த சசிகலா!

திமுகவின் அசைக்க முடியாத நம்பிக்கை நாயகனான பன்னீர் செல்வத்தின் செல்வாக்குகளை சரிக்கும் வேலையில் சசிகலா டீம் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கு கட்சியில் 'செக்' வைக்கப்பட்டது. இப்பொழுது, பன்னீரின் சம்பந்தியான செல்லப்பாண்டியன் வகித்து வந்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அடிசனல் அட்வகேட் ஜெனரல் பதவியை பறித்து இருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்று கார்டன் வட்டாரத்தில் விசாரித்தபோது, "செல்லப்பாண்டியனுடன் சேர்த்து ஜி.பி மூர்த்தி, பி.பி சண்முக வேலாயுதம், ஏ.ஏ.ஜி கோமதி நாயகம், சுகுமார், அரவிந்த பாண்டியன் ஆகியோரிடமும் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது, அதிமுக தலைமை. இவர்கள் மீது கார்டனுக்கு கடுமையான புகார்கள் வந்ததால், அதிருப்தியான மேலிடம் இவர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை வாங்கியிருக்கிறது" என்றார்கள்.

உண்மையில் என்ன நடந்தது என்று அதிமுகவின் வழக்கறிஞர்களிடம் கேட்டோம்.

"கடந்த ஐந்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில், பன்னீரின் பார்வையில் பட்டவர்கள் சைரன் வச்ச காரில் வலம் வந்தார்கள். அமைச்சரவை தொடங்கி உள்ளாட்சி அமைப்பு, பொதுப்பணி டெண்டர்கள், நெடுஞ்சாலை டெண்டர்கள் என்று என்ன வேலையானலும் பன்னீரின் ஆதரவாளர்களே கோலோச்சி வந்தனர்.

அரசியல் வட்டாரம் தொடங்கி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டாளம் என்று பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகப் பெருக,  பெரும் அதிகாரப் படை சூழ வலம் வந்தார் பன்னீர் செல்வம். இதுபோதாது என்று நினைத்த பன்னீர் செல்வம், நீதித்துறையின் நியாயத் தராசுகள், தன் பக்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைத்து, கூடுதல் கவனத்தை நீதித்துறை வல்லுநர்களிடம் செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக அரசு வழக்கறிஞர்கள் தொடங்கி, அட்வகேட் ஜெனரல் வரை மிக உயர்ந்த பதவிகளில் தனக்கு வேண்டியவர்களை நியமனம் செய்ய ஆரம்பித்தார். இந்த வேலைகளை கன கச்சிதமாக செய்ய, தனது சொந்த மகளின் மாமனாராகிய கோவில்பட்டி செல்லப்பாண்டியனை,  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அடிசனல் அட்வகேட் ஜெனரலாக பதவி நியமனம் செய்தார். 'கோவில்பட்டியில் பிரபலமான கிரிமினல் வழக்கறிஞரான செல்லப்பாண்டியன், தீவிர திமுக அனுதாபி' என அதிமுகவின் வழக்கறிஞர்கள், கார்டனுக்கு புகார்களை தட்டிவிட, புகார் அனுப்பிய பல சீனியர் அட்வகேட்கள் கட்சியிலும், அவர்கள் வகித்து வந்த பதவிகளிலும் இருந்து கட்டம் கட்டப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு அதிகாரம்,  தமிழக அரசு  அட்வகேட் ஜெனரலாக நியமிக்கும் வழக்கறிஞருக்கு வருவாய்துறை, காவல் துறை என்று அனைத்து துறைகளிலும் கொடி கட்டிப் பறக்கும். இவர்கள் சொல்வதைத்தான் அரசு ஊழியர்கள் கேட்க வேண்டும். கிட்டத்தட்ட அரசின் சட்ட ஆலோசகர்கள் போல் செயல்படுவார்கள். பொது நல வழக்கு, சட்டம் ஒழுங்கு வழக்கு ஆரம்பித்து பலவகையான வழக்குகளில் அரசின் சார்பில் ஆஜர் ஆகும் பிரதிநிதிகள் இவர்கள்.

சென்னையில் பன்னீர் செல்வம் இருப்பதால், தென் மாவட்டத்தில் செல்லப்பாண்டியன்தான் ஆல் இன் ஆல். உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அடிசனல் அட்வகேட் ஜெனரலாக இருந்த செல்லப்பாண்டியன், பல்வேறு அரசு வழக்குகளில் கோட்டை விட்டவர். பலமுறை நீதிபதிகளின் கண்டனத்துக்கு ஆளானவர். ஆனாலும், இவரின் செல்வாக்கு தென் மாவட்டத்தில் உச்சத்தில் இருந்தது. இவர்களை மீறி எதுவும் நடக்காது என்ற நிலையில், ஏகப்பட்ட பஞ்சாயத்துகள், நிழல் பேரங்கள் நடந்தன. அளவிற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவிக்கவும், அதற்கு தடையாக இருக்கும் அதிகாரிகளை வழிக்கு கொண்டு வரவும் செய்தார்கள். இதெல்லாம் கார்டனுக்கு புகாராக வந்தாலும், அம்மாவின் பார்வைக்கு செல்லவில்லை. இப்பொழுது, சசிகலா மூலம் இந்த விவகாரங்கள் அம்மாவின் பார்வைக்கு சென்றதால்,  நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

எப்பொழுதோ நடக்கவேண்டியவை, இப்பொழுது நடந்திருக்கிறது. இவர்கள் கோட்டை விட்ட பல்வேறு வழக்குகளின் பட்டியலில் திமுக முக்கிய புள்ளிகளின் வழக்குகள் ஏராளம். அதனால் மேலிடம் பயங்கர டென்சன் ஆகிவிட்டது. உடனடியாக நடவடிக்கை பாய்ந்தது" என்றார்கள்.

அடுத்த புதிய அரசு வழக்கறிஞர்கள் லிஸ்ட் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- சண்.சரவணக்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ