Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியல் தலைவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி எப்படி?!..

ஞானத்தின் பிதாமகனாய் இருப்பவர் குருபாகவன். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்களைக் காட்டிலும், குருபகவான் நல்ல நிலையில் அமைந்திருந்தால், எதையும் சாதிக்கும் சக்தி அந்த ஜாதகருக்கு இயல்பாய் அமைந்துவிடும்.

கடந்த ஓராண்டு காலமாக சிம்ம ராசியில் அமர்ந்து அரசியலில் பல திருவிளையாடல்களை நிகழ்த்திய குருபகவான், 2.8.16  முதல் 1.9.17 வரை கன்னி ராசியில் அமர்ந்து... தன் அரசியல் திருவிளையாடல்களை நிகழ்த்தக் காத்திருக்கிறார்.

இதனால், தமிழக அரசியல் தலைவர்களான முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேசிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கும், அவர்கள் ராசியில், குரு பகவான் எப்படியான சித்து விளையாட்டுகளை நிகழ்த்தக் காத்திருக்கிறார் என்பதை, அரசியல் தலைவர்களின் ஜாதகத்தை வைத்து, கணித்து கோசார நிலைப்படி பொதுப் பலன்களை விவரிக்கிறார் ஜோதிடர் எஸ்.ராமேஷ் ஸ்வாமி.

முதலமைச்சர் ஜெயலலிதா

சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், மிதுன லக்னத்தில் பிறந்த இவரின் ஜாதகத்தில் வரும் குருப்பெயர்ச்சி 2-ம் இடத்தில் வந்தாலும், குருபகவான் இவர் பிறந்தபோது 7-ம் இடத்தில் வக்கிரத்தில் இருந்ததால், அரசியலில் தனக்கு எதிரான சதியாட்டங்களை முறியடிக்க இவர் போராடவேண்டி இருக்கும். தன் சுய பலம் மட்டும் இல்லாமல், தன் கூட்டணிக்காரர்களின் உதவி, இந்த நேரத்தில் இவருக்குத் தேவைப்படுகிறது. ஆகையால் தமிழக மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டுமானால், ஆளும் மத்திய அரசின் உதவியுடன் தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்க, இந்த குருப்பெயர்ச்சி இவருக்கு உதவியாக இருக்கும். அரசியலில் கூட்டு சேர்ந்தால், இவரின் பலம் இன்னும் கூடும். வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவார். இந்த குருப் பெயர்ச்சி இவரைக் காட்டிலும், இவரால் தமிழக மக்களுக்கே அதிக நன்மையை ஏற்படுத்தும்.

கருணாநிதி (திமுக தலைவர்)

ரிஷப ராசி, கடக லக்னம், மிருக சீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த இவரின் ஜாதகப்படி, வரும் குருப் பெயர்ச்சி அரசியலில் ஆதாய பலன்கள் கூடும். புத்திர கிரகமாகிய குருபகவான், ரிஷப ராசியைச் சேர்ந்த இவருக்கு புத்திரஸ்தானமாகிய  5-ல்  வருகிறார். இதனால் வரும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து புதிய வியூகத்தை அமைத்துச் செயலாற்றினால், அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும். புத்திர கிரகமாகிய குருபகவான், ரிஷப ராசியில் வருவதால், கருணாநிதிக்கு நல்லதே நடக்கும். உழைப்பால் உயரும் தருணம் இது.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறந்த இவருக்கு, இந்த குருப்பெயர்ச்சி சுமாராகத்தான் இருக்கும். ஆனால், இவருக்குப் பிறக்கும்போது குரு ஜாதகத்தில் மறைந்து இருந்ததால், நல்லவர்களின் ஆலோசனையை இவர் தட்டாமல் இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் பட்சத்தில், இவருடைய கட்சியான தேமுதிகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில், இவர் கட்சி தனித்துப் போட்டியிடுவது இவருக்கும், இவர் கட்சிக்கும் நன்மையையே ஏற்படுத்தும். இந்தத் தனித்துவ முடிவு, பின் வரும் காலங்களில் நிச்சயம் நன்மையை ஏற்படுத்தும். அயராது அதிகம் உழைத்தாலும், இந்த குருப்பெயர்ச்சி சிறிதளவே நன்மையை ஏற்படுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடி (பாஜக)

விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம், விருச்சிக லக்னத்தில் பிறந்த இவரின் ஜாதகப்படி, இந்த குருப்பெயர்ச்சி 11-ம் இடமாகிய லாப ஸ்தானத்தில் வருவதால், இந்திய மக்களுக்கு அடுத்த 12-ஆண்டு காலம் நன்மையை ஏற்படுத்தும். இந்திய அரசியலில் வரும் குருப் பெயர்ச்சி, பெரும் திருப்பு முனையாக இருக்கும். இவரால், வருங்கால சந்ததியினருக்கு இந்த குரு பெயர்ச்சி அதிக அளவு நன்மையை ஏற்படுத்தும். அதனால், இந்திய திருநாடு உலக அளவில், அதிக அளவில் சாதனைகளைச் செய்யும். முக்கியமாக ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை வரும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி புதிய தெம்புடன் மீண்டும் களம் கண்டு முன்னேற்றப்பாதையில் செல்லும். இந்த குருப்பெயர்ச்சி மொத்தத்தில் இவருக்கு வெற்றியை மட்டுமே தரும்.

சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்)

ரிஷப ராசி, மிருகசீரிடம் நட்சத்திரம், கடக லக்னத்தில் பிறந்த இவருக்கு, வரும் குருப் பெயர்ச்சி, 5-ம் இடத்தில் புத்திரஸ்தானத்தில் வருகிறார். இதனால் இவர் ஜாதகத்தில் புத்திர கிரகமாகிய குரு வலுவாக உள்ளதால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் களம் இறங்கினால், தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான நிலையை ஏற்படுத்த முயலலாம். இதனால், பின்னாளில் ராகுல் காந்தி பிரதமராவதற்கு இந்த குருப்பெயர்ச்சியின் செயல்பாடு உறுதுணையாக இருக்கும். கடினமான உழைப்பு இருந்தாலும், அதிக நன்மையைத் தராது. அதனால், புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.

- ரா.வளன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ