Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கிரண்பேடியுடன் பிரச்னையா..?!’ புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்!

        
புதுச்சேரி: கவர்னருடனான உறவு சுமூகமாகவே இருக்கின்றது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று(21.08.2014) காலை ஜிப்மர் கல்லூரியின் மாரத்தான் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் கிரண்பேடி, ”புதுச்சேரியில் நான் மேற்கொண்டுள்ள தூய்மைப் பணிக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவதில்லை. நான்கு வாரத்திற்குள் நான் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் புதுச்சேரியை விட்டு திரும்ப சென்றுவிடுவேன்” என்று ஆவேசமாக பேசியது புதுச்சேரி அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் அமைச்சர் நாராயணசாமியிடம் கவர்னரின் பேச்சு குறித்து கேட்டபோது, “கவர்னருடனான உறவு சுமூகமாக இருக்கின்றது. மேலும் அவர் அமைச்சர்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறவில்லை. எங்களுக்குள் சிறு பிரச்னைகள், வேறுபாடுகள் எழுந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம்.

புதுச்சேரி தூய்மையான நகரமாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. வளமான புதுச்சேரி உருவாகத்தான் அவர் பாடுபடுகிறார். நாங்கள் முன்னேற்றமடைந்த புதுச்சேரி உருவாகப்  பாடுபடுகிறோம். புதுச்சேரிக்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற இருதரப்பினரும் இணைந்து செயல்படுவோம்.

அமைச்சரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள், துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதித்துள்ளோம்.

வருகின்ற வரும் 24-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றையதினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்றுவார். பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முதல்வர் பதிலுரைக்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை தந்து வருகிறது. தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, வேலையில்லா திண்டாடத்தை போக்குவது,  புதிய தொழிற்சாலைகள், தரமான சுகாதாரம், கல்வி போன்றவை கிடைக்க பாடுபடுகிறோம்.

முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளை கடந்த இரண்டரை மாத காலத்தில் ஒரளவு சரி செய்திருக்கிறோம். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கும், சுற்றுலா ஊக்குவிப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

புதுச்சேரி வளர்ச்சி பெறுகின்ற மாநிலமாகவும் சட்டம் ஒழுங்கு சீராகவும், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் கணிணி சம்மந்தமான தொழிற்சாலைகள்,வேலைவாய்ப்பை உருவாக்க, என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற உள்ளோம். பேரவை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏக்கள் எழுப்பும் எந்த பிரச்னைக்கும் பதில் கூற தயாராக உள்ளோம்.

பட்ஜெட் கூட்டத்தொடர் சம்மந்தமாக துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசினோம்.  எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி  தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

-ஜெ.முருகன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ