Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்களுக்கு தண்டனை உண்டு!'' - கருணாநிதி

தி.மு.க சார்பில், 'தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் நேற்று (22-8-16)  சென்னையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அபுபக்கர் உட்பட கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

''வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படுகிறவன் அல்ல!''

தி.மு.க தலைவர் கருணாநிதி, ''தி.மு.க-வைப் பொறுத்தவரை, அது ஒரு வெளிப்படையான இயக்கம். இதில், கருத்துக்களை எடுத்துச்சொன்னால் அதை அந்தக் கட்சியிலே உள்ளவர்கள் மாத்திரம்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இல்லாமல், தி.மு.க-வை வளர்த்து வருகிற, திராவிடச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகிய நீங்கள் எல்லோருமே அதற்குக் கடமைப்பட்டவர்கள். எனவே, நான் உங்களை அழைக்க உரிமை படைத்தவன். அந்த உரிமையைப் பயன்படுத்தி உங்களையெல்லாம் எதற்கு அழைக்கிறேன் என்றால், எங்களோடு சேர்ந்து, வருகிற மாநகராட்சித் தேர்தலிலோ... வேறு பல தேர்தல்களிலோ உங்களுடைய ஆதரவைத் தரவேண்டும் என்று கேட்பதற்காக வரவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் தேர்தலில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படுகிறவன் அல்ல. எத்தனையோ தேர்தல்களில் தி.மு.க தோற்று இருக்கிறது. பேரறிஞர் அண்ணா, ஒரு காலத்தில் ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்றும்கூட வெற்றி பெறாமல் போய் இருக்கிறார். அதற்காக, அண்ணாவை இந்த உலகம் மறந்துவிடவில்லை. தி.மு.க தொண்டர்களுடைய கூட்டம், எந்த நேரத்திலும் சலசலப்புக்கு அஞ்சியது அல்ல. காவல் துறையின் கண்டிப்புக்கும் ஆளும் கட்சியின் அறைகூவலுக்கும் என்றும் பயந்தது இல்லை. இதையெல்லாம் மீறித்தான் இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது... இன்னும் வளர இருக்கிறது. யாரும் சந்தேகப்படத் தேவை இல்லை... அஞ்சத் தேவையில்லை. இந்தக் கழகம் வெற்றிகளைக் குவிப்பதற்காக இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் இயக்கத்தை வழிநடத்திச் செல்கிறார்கள். இதைவிடப் பெரிய தியாகத்துக்குத் தங்களை அவர்கள் தயார் செய்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

''தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்களுக்கு தண்டனை உண்டு!''

நாம் மக்களுக்கு விளக்கவேண்டிய கருத்துக்களுக்கு இந்த ஒரு கூட்டம் போதாது. விளக்கவேண்டியது ஏராளம் இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் பலனை நாம் பெற்றுத் தீரவேண்டும். வெற்றிபெற்றவர்களிடம் பதவி அதிகாரம் இருக்கிறது. அவர்கள் என்னென்ன மாயஜாலங்கள் செய்கிறார்கள் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்று அதிக அளவில் கூட்டத்தை நடத்திக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். விரைவில், தி.மு.க-வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்துகொண்டு நமது திட்டத்தை ஆழமாக மக்களிடம் எடுத்துச் செல்ல முற்படுவோம். அதையும் உண்ணாவிரதம் போன்ற வகையில் எடுத்துச் சொல்லலாம். சட்டமன்றத்தில் முதல்வரால் ஏற்படும் இடர்பாடுகளை எடுத்துச் சொல்லி, இதற்குத் தீர்வு என்ன என்ற கேள்வியை மக்களிடம் கேட்கும் வகையில் அந்தச் செயல்பாடு அமைய வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு இடையில் ஏற்பட்டுள்ள சோகத்தை நீக்கி, தமிழ்நாட்டை வளமிகுந்த மாநிலமாக ஆக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம்.  எப்படியோ, நாம் கவிழ்க்கப்பட்டோம். அதற்குக் காரணம், நடந்த தேர்தலின்போது வாக்கு எண்ணும்போதே, ‘நாம்தான் ஜெயிக்கப்போகிறோம்... உங்கள் நடவடிக்கையைச் செய்யுங்கள்' என்று செய்தி வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தகவல் போகிறது. தி.மு.க-வை வீழ்த்தும் சூழ்ச்சி அங்கு நடத்தப்படுகிறது. 'தி.மு.க-தான் வெற்றி பெறும்' என்று தமிழகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ஏன் இந்தியாவே எதிர்பார்த்திருந்த நிலையில் எப்படி நாம் புறந்தள்ளப்பட்டோம்? உண்மையில், நாம் தோற்கடிக்கப்பட்டோம். இதற்கு யார் யார் எல்லாம் துணையாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். எதிர்காலத்தில் அதற்குப் பதில் சொல்லும் நேரம் வரும். தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்களுக்கு எதிர்காலத்தில் தக்க தண்டனை உண்டு. அதற்குத் தீர்வாக, தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, 'தமிழகத்தைத் தமிழன் ஆளுவான்' என்ற நம்பிக்கையோடு நாம் வெற்றி பெறுவோம்'' என்று பேசினார்.

ஸ்டாலின் பேசுகையில், ''நடைபெற்று வருகிற ஜெயலலிதாவின் ஆட்சியின் நிர்வாகத்தில் சுதந்தரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. அதேபோன்று நீதித்துறையும் ஒத்துழைப்புத் தராத சூழ்நிலையில் இருக்கிறது. சட்டமன்றம், பேச்சுரிமையைப் பெறமுடியாத வகையில் நடந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்கள் நடந்துள்ளன. எத்தனையோ சபாநாயகர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்கள். சபாநாயகர் என்பவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அண்ணாவின் மரபைப் பின்பற்றி வந்தவர்கள்!

அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, சி.பா.ஆதித்தன் அவைத்தலைவராகவும், புலவர் கோவிந்தன் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அவைத்தலைவரான சி.பா.ஆதித்தனின் கரங்களை, முதல்வராக இருந்த அண்ணாவும், அன்றைய எதிர்க் கட்சித் தலைவரும் ஒருசேரப் பிடித்துச்சென்ற இருக்கையில் உட்காரவைத்த மரபு அன்று நடைபெற்றது. எல்லாக் கட்சித் தலைவர்களும் வாழ்த்தி உரையாற்றி முடித்தனர். அப்போது அண்ணா, 'ஆர்வத்தின் காரணமாக நாங்களே சாய நேரிட்டாலும், அதைத் தடுத்து நிறுத்தி எங்களை நல்வழிபடுத்தம் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

சபாநாயகர், வயலின் கம்பியைப் போன்றவர்!

அண்ணாவின் வழியில்தான் நடந்துவருகிறோம். சபாநாயகர், வயலின் கம்பியைப் போன்று இருக்கவேண்டும். இரண்டு பக்கம் இழுத்தாலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எதிரிக் கட்சியாக அல்ல... எதிர்க் கட்சியாகச் செயல்படுவோம் என்று சபாநாயகரிடம் கூறினோம். சென்னை உயர் நீதிமன்றம் பெயர் மாற்றம் தொடர்பாக நாங்கள் பேசவில்லையா... அந்தத் தீர்மானத்தைப் பற்றி வாழ்த்தி வரவேற்றுப் பேசவில்லையா... ஆரோக்கியமான விஷயங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கி இருக்கோமா? அவையில் நடக்கும் விஷயங்கள் வெளியில் போய்விடுகின்றன என்கிற ஆத்திரம். வெளிநடப்புச் செய்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறோமா? பத்திரிகையாளர்களாகிய உங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தும், உங்களையே வெளியேற்றிவிட்டார்கள். நீங்கள் என் பேச மறுக்கிறீர்கள்? தனிப்பட்ட நபர்களைப் பற்றி விமர்சிக்கும் வார்த்தைகளை நீக்குமாறுதான் கேட்டோம். அதற்கு சபாநாயகர், 'முடியாது' என்று கூறுகிறார். காவல் துறையின் மானியக்கோரிக்கை நடைபெறும்போது தி.மு.க-வினர் கேள்விகளைக் கேட்பார்கள். அவ்வாறு கேள்விகளைக் கேட்டால் ஜெயலலிதாவுக்கு எரிச்சல் வரும்... ஆத்திரம் வரும் என்று திட்டமிட்டே தி.மு.க-வினரை இடைநீக்கம் செய்துள்ளார் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன். இது திட்டமிட்ட சதி. இதே காவல் துறை மானியக் கோரிக்கையில் பேசுவதற்காகக் குறிப்புளை எடுத்துவந்தேன். ஆனால், பேச முடியாமல் போயிற்று. எனக்குத்தான் மிகுந்த ஏமாற்றம்'' என்றார்.

- கே.புவனேஸ்வரி
படங்கள்: தி.குமரகுருபரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ