Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் அன்புமணியை எதிர்த்தது யார்?

 

 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மண்டல் குழு அறிக்கை செயலாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பினர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், ஐக்கிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ், அன்புமணி ராமதாஸ், மண்டல் குழு அறிக்கையைச் செயல்படுத்திய அரசு செயலர் பி.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அன்புமணியின் வருகைக்கு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒன்பது தமிழக மாணவர்களும், பீர்ஸா அம்பேத்கர் பூலே மாணவர் என்ற தலித் அமைப்பும் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்தது. போராட்டம், உருவ பொம்மை எரிப்பு என மாணவர்களின் எழுச்சியால் பல்கலைக்கழக வளாகமே அதிர்ந்தது. அன்புமணி பல்கலைக்கழகத்துக்கு வந்தவுடன் மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ‘அன்புமணி டவுன்... டவுன்’ என்ற கோஷத்தையும் மாணவர்கள் எழுப்பினர்.

அன்புமணிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தமிழக மாணவர் அருண்குமாரிடம் பேசினோம், ‘‘ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பும், பீர்ஸா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பும் நட்பு அமைப்புகள்தான். அன்புமணி விஷயத்தில் மட்டும் எங்கள் அமைப்பும், ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பும் எதிரெதிராக இருக்கிறோம். இதற்கு முக்கியக் காரணம், ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே உள்ளனர். தமிழக மாணவர்கள் யாரும் இல்லாததால், அன்புமணியின் தலித் எதிர்ப்பு அரசியல் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. முற்போக்கு எண்ணம்கொண்ட இந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குச் சாதிய வன்ம எண்ணம் கொண்ட அன்புமணி வரக் கூடாது என OBC கூட்டமைப்பினரிடம் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அதையும் மீறி அவர்கள் அன்புமணியை அழைத்தார்கள். ‘அன்புமணி எங்கள் கூட்டத்தில் பேசப் போகிறார். உங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் போராட்டம் நடத்துங்கள்’ என ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பினர் சகோதர எண்ணத்துடன் கூறினார்கள். முன்பே முடிவு செய்தபடி தமிழக மாணவர்களான நாங்கள் தனியாகவும், பீர்ஸா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பு தனியாகவும் போராட்டம் நடத்தினோம்’’ என்றார்.


  

 

‘‘ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த முறை OBC பிரிவு மாணவர்கள் ஓர் அணியில் திரண்டுள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத, சமூகநீதிக்கு எதிரான கும்பல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கும்பல், மண்டல் குழு விழாவைத் தடுக்க முயன்ற அன்புமணி ராமதாஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், எதிரிகளின் சதி முறியடிக்கப்பட்டது’’ என பா.ம.க-வைச் சேர்ந்த பசுமை தாயகம் அருள் தெரிவித்துள்ளார்.


- ஆ.நந்தகுமார்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ