Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சண்முகநாதன் சரிந்த கதை..!

திமுக அரசியலில் ஹாட் டாப்பிக் சசிகலா புஷ்பா என்றால், தூத்துக்குடி அதிமுகவில் ஹாட் டாப்பிக் அமைச்சர் சண்முகநாதனின் அமைச்சர் பதவி பறிபோனது என்பதுதான். ஆனால், சசிகலா புஷ்பாவிற்கும் அமைச்சர் பதவிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்றால் நிறையவே இருக்கிறது என்றுதான் பொருள்.

ADMK Minster Shanmuganathan with O Panneerselvam

 

அதிமுக ஆட்சியில் சண்முகநாதன் அமைச்சர் பதவியை கோஷ்டி பூசலால் இழந்ததை விட, பெண்கள் பிரச்சினைகளால் பிரச்சினையாகி பதவி காலியானதுதான் அதிகம். சாத்தான்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவருடன் சண்முகநாதன் நெருக்கம் காட்டியதால் அவர் மீது தலைமைக்கு மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது. ’’தன் மனைவியை அமைச்சர் அபகரித்துக் கொண்டார், என்னை கொன்றுவிடுவதாக அமைச்சர் மிரட்டுகிறார், என் மனைவியை மீட்டுத்தாருங்கள்’’ என மதுரை கிளையில் அந்தப் பள்ளி ஆசிரியையின் கணவர் வழக்கு தொடர்ந்தார். தவிர நாசரேத் பகுதியில் உள்ள சில பெண்களுடன் காட்டிய நெருக்கமும் அமைச்சர் சண்முக நாதனுக்கு தலைமையில் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதுதவிர, கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அமைச்சர் சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ் ராஜா மூலம் சண்முகநாதனைத் தொடர்பு கொண்டு, ’’வரும் தேர்தலில் உறுதியாக சீட் வாங்கித்தருவதாகவும், சீட் வாங்கித்தர நானே முழுப் பொறுப்பு என்றும், அமைச்சரின் மகனைப் பார்த்து பேசிவிடுவோம்’’ என மதுரையைச் சேர்ந்த சீனுகந்தசாமி, அவரது ஆதரவாளர் மற்றும் சீட் கேட்பவர் ஆகிய மூன்று பேரும் சுமார் 5 நிமிடம் 24 நொடி வரை பேசும் வீடியோ வாட்ஸ் அப் மூலம் வெளியாகி அதீத வைரலாக வேகமாகப் பரவி வந்தததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த வாட்ஸ் அப் வீடியோவை ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பார்த்த பிறகுதான் சண்முகநாதன் கரும்புள்ளி குத்தப்பட்டு ஓரம்கட்டப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக புவனேஸ்வரன் என்ற வழக்கறிஞருக்குத்தான் முதலில் ஜெயலலிதா சீட் வழங்கினார்.

 

சீட் வழங்கியது மட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கூட அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரித்தார். கோவையில் வசித்து வந்த இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம். இத்தொகுதி அதிமுக வேட்பாளராக இவரது பெயரை தலைமை அறிவித்தவுடனேயே தன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் குடும்பத்துடன் குடியேறினார். ஆனால், கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலையத்தில் புவனேஸ்வரன் மீது கரூர் மாவட்டம் கோடாந்தூர் ஊராட்சித் தலைவர் ரவிசெல்வனை கொலை செய்ய முயற்ச்சித்ததாக வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக அதிமுக தலைமைக்கு புகார் அனுப்பப்பட்டதால் வழக்கறிஞர் புவனேஸ்வரனுக்கு பதிலாக மீண்டும் சண்முகநாதனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சண்முகநாதனுக்கு மீண்டும் சீட் கிடைக்க ஏற்பாடு செய்ததும் சசிகலா புஷ்பா எம்.பி தான் என்கிறார்கள் அதிமுகவினர்.

 

ஆனால், புவனேஸ்வரன் மீது போலியாக அறிவிக்கப்பட்ட புகார் என்பது சைபர் கிரைம் விசாரணையில் தற்போது தெளிவாகியுள்ளது. புவனேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிந்த போது, அவர் மீது புகார் கூறி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ரவிசெல்வன் பெயரில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2012ம் ஆண்டு புவனேஸ்வரன் உட்பட தன்னை 5 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அந்த வழக்கை தென்னிலை காவல்நிலையப் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்றும், வழக்கை விரைவில் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 

புவனேஸ்வரன் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ராஜகோபால், ’’இந்த மனுவை ரவிசெல்வம் தாக்கல் செய்யவில்லை. புவனேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரன் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கியதும் வழக்கை வாபஸ் பெறுவதாக ரவிசெல்வத்தின் வழக்கறிஞர் தீனதயாளன் கூறியுள்ளார். புவனேஸ்வரன் மீது சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் அவதூறு பரப்பியுள்ளார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’ என்று கூறினார். ஆனால், ’’இந்த வழக்கை ரவிசெல்வம் தாக்கல் செய்யவில்லை’’ என்று ரவிசெல்வத்தின் வழக்கறிஞர் தீனதயாளன் சொன்னார்.

 

அதற்கு அடுத்த வாரத்திலேயே ரவிசெல்வம் கோர்ட்டில் ஆஜராகி ’’வக்காலத்து மனுவில் இருப்பது என் கையெழுத்துதான். நீதிமன்றத்தில் வேறொரு வழக்குதான் நான் தொடர்ந்திருக்கிறேன். ஆனால், இந்த வழக்கை நான் தொடரவில்லை’’ என்று நீதிபதியிடம் கூறிவிட்டார். ஒருவர் மீது குற்றம் சுமத்த நீதிமன்றத்தையே கருவியாக பயன்படுத்தியுள்ளார்கள். மதுரை மாநகர சைபர் கிரைம் உதவி ஆணையர் (பொறுப்பு) ஜெயபாலிடம் ’’இந்த வழக்கை தானே முன் வந்து எடுத்துக் கொள்ளும் வழக்காக எடுத்துக் கொண்டு பதிவு செய்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் நீதிபதி.

 

நீதிமன்றத்தின் உத்தரவின் படி தீவிரமாக களம் இறங்கி புவனேஸ்வரன் மீது பொய் புகாரை தலைமைக்கு அனுப்பியது யார் என்பதை சைபர் கிரைம் கண்டுபிடித்தது. அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது. தவிர, கார்டனின் உளவுத்துறையும் மறைமுகமாக நடத்திய விசாரணையில் அமைச்சர் சண்முகநாதன் தலையீடு முழுமையாக உள்ளது எனக் கண்டுபிடித்து இதற்க்கான உறுதியான ஆதாரங்களையும் இணைத்து கார்டனுக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

 

’’பட்ட காலிலே படும்’’ என்பது போல, தனக்கு சீட் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக சண்முகநாதன் தலையீட்டில் நடந்த செயல்தான் இது என்று அதிமுக தலைமைக்கு உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் கிடைத்த சில நாளிலேயே, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து திருச்சி சிவாவை போதையில் கன்னத்தில் அறைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எம்.பி பதவியை ராஜினாமா செய்யாமல் ஜெயலலிதாவையே எதிர்த்து பேசிய சசிகலா மீது ஜெயலலிதா கோபத்தில் கொந்தளித்தார். அந்த நேரத்தில்தான் சசிகலா எம்.பி வீட்டில் வேலை செய்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகிலுள்ள ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகிய இரு சகோதரிகள். தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் மீது பாலியல் தொடர்பான புகார் மனு கொடுத்தனர். இந்த இரண்டு பெண்களையும் சசிகலா புஷ்பா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியதே அமைச்சர் சண்முகநாதன் என்றும், அதை மறைப்பதற்க்காக நல்ல பிள்ளை போல ‘’ அம்மாவை தவறாகப் பேசிய சசிகலா புஷ்பாவின் உருவபொம்மையை எரிக்கட்டுமா..?’’ என்று கார்டனில் அனுமதி கேட்டதையும் கண்டுபிடித்தார் ஜெ.

 

சசிகலா புஷ்பாவால் கட்சியில் முன்னேறியவர்கள், அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் பற்றிய லிஸ்ட் எடுக்கும் போது அதிலும் முதலிடம் அமைச்சர் சண்முகநாதனுக்குத்தான். கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஜெயலலிதா, தூத்துக்குடி அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் சி..செல்லப்பாண்டியன் மா.செ-வாக நியமிக்கப்பட்டார். இன்று அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

சண்முகநாதனுக்கு பெண்களால் கட்சியில் தொடர்ந்து இறங்கு முகம்தான்.

 

- .கார்த்திகேயன்

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ