Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ம.ந.கூ.வுக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்க வேண்டும்!’ ஜி.ராமகிருஷ்ணனின் லாஜிக்

 

திருப்பூர் : "2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு 6 சதவிகிதம். ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருந்தால் 6 சதவிகித வாக்குக்கு 15 எம்.எல்.ஏ, இடங்கள் கிடைத்திருக்கும்,' என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
"இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம்" குறித்த சிறப்புக் கருத்தரங்கம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 31 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. அதே சமயம் 69 சதவிகிதம் அக்கட்சிக்கு எதிரான வாக்குகளாகும். எனவே பாரதிய ஜனதா கட்சி வெற்றியின் ஜனநாயக உள்ளடக்கத்தை ஏற்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தல்களிலும் இதுதான் நிலை. 2011 ஆம் ஆண்டு அதிமுக பெற்ற வாக்கு 38.4 சதவிகிதம். ஆனால் பெற்ற எம்எல்ஏ இடங்கள் 150. திமுக 22.4 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 23 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்தனர்.

அதேசமயம் 7.9 சதவிகித வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். அதாவது அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளுக்கும், அவர்களுக்கு கிடைக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., இடங்களுக்கும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு 6 சதவிகிதம். ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இருந்தால் 6 சதவிகித வாக்குக்கு 15 எம்.எல்.ஏ, இடங்கள் கிடைத்திருக்கும்.

அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளுக்கு ஏற்ப சதவிகித அடிப்படையில் எம்.பி., இடம் வழங்கினால் பொருத்தமான பிரதிநிதித்துவம் கிடைக்கும். வேறு பல வெளிநாடுகளிலும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது.

எனவே இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இதற்காக ஏற்கனவே இந்திரஜித் குப்தா குழு பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பித்தும் 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுதர்சன நாச்சியப்பன் குழுவிடமும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.

தேர்தல் சீர்திருத்தத்தில் விகிதாசார பிரநிதித்துவம் மட்டுமின்றி, வேறு சில மாற்றங்களும் செய்ய வேண்டும். 2006, 2011 ஆம் ஆண்டுகளில் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதற்கு அடுத்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. முந்தைய திமுக ஆட்சியிலும், அடுத்து அதிமுக ஆட்சியிலும் உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக விரோதமாக மோசடியில் ஈடுபட்டனர். இதில், இரு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தடுக்கப்பட வேண்டும், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்பதன் மூலம் பெருவாரியாக வெள்ளமென பணம் செலவிடுவதை தடுக்க முடியும். அரசியல் கட்சிகளுக்கு இடையே சமமாகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு சுதந்திரமாக செயல்பட, விதிமீறல்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அரசமைப்புப் பதவி வகிப்போர், உயர் பதவி வகிக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வரக்கூடாது. தேர்தல் தொடர்பான வழக்குகள், ஒருவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும், விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிவகங்கை தொகுதியில் 2009 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் பெற்ற வெற்றி குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் அந்த ஐந்தாண்டு காலப் பதவியை முடித்து, அடுத்ததாக, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவும் வந்துவிட்டார். தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம்தான் மக்கள் அளிக்கும் தீர்ப்பின் உண்மையான ஜனநாயக உள்ளடக்கத்தை சரியாக பிரதிபலிக்க முடியும். எல்லா அடிப்படைப் பிரச்சனைகளிலும் மாற்றுக் கொள்கைகளுடன் செயல்படும் இடதுசாரிகள் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா? என நினைக்கலாம். வெற்றி, தோல்வி மாறி, மாறி வரும். ஆனால் இடதுசாரிகள் முன்வைக்கும் மாற்றுக் கொள்கைகளில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது, பிரச்சனைகளுக்கான தீர்வும் உள்ளது. எனவே இக்கொள்கைகள் நிச்சயம் வெற்றி பெறும். பணம் கொடுத்து மக்களை நிரந்தரமாக விலைக்கு வாங்கிவிட முடியாது. நிச்சயம் மாற்றம் ஏற்படும். 
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

- ச.ஜெ.ரவி
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ