Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுவாணி விவகாரத்தில் தமிழகம் மீது தவறில்லை... நதிநீர் பிரச்னையில் தமிழக அரசை பாராட்டும் வைகோ!

திருச்சி : "சிறுவாணி நதிநீர் பிரச்னையில் கேரள அரசும், மத்திய அரசும் தமிழக அரசுக்கு பல முறை கடிதம் அனுப்பியிருக்கிறோம். தமிழக அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை' என்று கூறுவது பொய்யாகும். நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது," என திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அண்ணா பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் நடத்தப்படும் மாநாடு, இந்தாண்டு திருச்சியில் நடக்கவிருக்கிறது. மாநாடு நடக்கும்  தென்னூர் உழவர்சந்தை மைதானத்தை வைகோ தனது கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது. 
சிறுவாணி அணை விவகாரம் இரு மாநில அரசுகளுக்கான பிரச்னை. சிறுவாணியின் குறுக்கே கேரள அரசு கட்ட இருக்கும் புதிய அணையை மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளா சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அணையை 450 மீட்டர் நீளத்தில் 51.50 அடி உயரத்தில் ரூ.797 கோடி செலவில் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு மத்திய நிதி மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது பச்சை துரோகம்.


 இது தொடர்பாக கேரள அரசும், மத்திய அரசும் தமிழக அரசுக்கு பல முறை கடிதம் அனுப்பியிருக்கிறோம். தமிழக அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்று கூறுவது பொய்யாகும். சிறுவாணி அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசின் நிதி மதிப்பீட்டு நிபுணர் குழு கடந்த 11, 12ம் தேதி நடந்த கூட்டத்தில் திடீரென முடிவு எடுத்திருக்கிறார்கள்.  கூட்டம் தொடங்கப்பட்ட போது இது பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்காமல் திடீரென முடிவு எடுத்துள்ளார்கள். மேகதாது அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அணை கட்டுவதால் கொங்கு மண்டலம் பாதிக்கும்.
 எனவே தமிழக அரசின் கருத்தை அறியாமல் அட்டப்பாடி அணை கட்டக்கூடாது. அதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இது தொடர்பாக ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும். இலங்கையில் முன்னாள் விடுதலை புலிகள் 105 பேர் வி‌ஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்கள் குடியிருக்கும் பகுதியில் 2 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
நதிநீர் பிரச்னைகளை மத்திய அரசு ஓரவஞ்சணையாக செயல்படுகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர் ஹென்றி டிபேன் மீது தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெறவேண்டும். ஜெர்மனி அதிபரிடம் விருது பெற்ற ஹென்றிடிபேன் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து நாளை மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்.
இலங்கையில் இனவாத பிரச்னைகள் இன்றுவரை தொடர்கிறது. இந்த பிரச்னைக்காக தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு மதுவே காரணம்.  தமிழக முதல்வர் வெறும் 500 கடைகளை மூடி இருப்பது தீர்வாகாது என்றும், பூரண மதுவிலக்கே தங்களது கொள்கை.  நேற்று கரூர் கல்லூரியில் மாணவியை கொன்ற முன்னாள் மாணவர் போதையில் இருந்துள்ளார். எனவே தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
சட்டசபையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை. இந்நிலை மாற வேண்டும்.  தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது தவறு. பாராளுமன்றத்தில் கூட இப்படி நடந்தது கிடையாது. இருப்பினும் காவல்துறை மானிய கோரிக்கையின் போது சஸ்பெண்டு செய்யப்படாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்றிருக்கலாம். எதிர்க்கட்சிகளை நசுக்குவது, மனித உரிமை மீறல் பிரச்சினை போன்றவற்றில் கடந்த கால நிலைதான் உள்ளது.
 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு ஒன்றிணைந்து போராடாமல் விட்டால் தமிழகத்திற்க்கு விவசாயம், குடிநீர் உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படும். உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி-பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறை, குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். தமிழக அரசின் 100 நாள் ஆட்சிக்கு இப்போது மதிப்பீடு கொடுக்க முடியாது. நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ