Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக பா.ஜ.க. உடைந்தது? சேலத்தில் உதயமானது ம.பா.ஜ.க.!

     

மிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு வாங்கி அல்லது மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையிலும், மத்தியில் ஆட்சியில் இருப்பதால் மாநில அளவில் உயிர்ப்போடு இயங்கி வரும் கட்சியாக உள்ள பாஜக, பல்வேறு உட்கட்சி சிக்கல்களால் தவிப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலத்தில் நேற்று(திங்கள்) மறுமலர்ச்சி பாஜக உதயமாகியுள்ளதன் மூலம் தமிழக பாஜகவில் நிகழும் அழுத்தங்கள்,நெருக்கடிகள்,கோஷ்டி பூசல்கள் வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.மோடி அலை நெருங்காத தமிழகத்தில்,'தாமரை ' தடாகத்தில் என்னதான் நடக்கிறது, குளத்தைக் குழப்பிய கரங்கள் யாருடையவை என்பதுதான் பாஜக தொண்டனின் அடிமனதில் ஓடும் பதில் தேடும் கேள்வி.   
              
திமுக,அதிமுக என்னும் பெரும் திராவிட கட்சிகள் இயங்கும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது அல்லது அவற்றுக்கு மாற்றாகத் திகழ்வது என்பதை முன்வைத்து தமிழக பாஜக தலைவர்கள் ஒருபக்கம் விறுவிறுப்பாக செயல்பட்டாலும்,இது போன்று நிகழ்வது தலைவர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்சி தொடங்கியுள்ள ஜெயகுமார்,தமிழக பாஜகவில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தவர். மறுமலர்ச்சி பாஜக தொடங்கியது குறித்து அவர் கூறுகையில்,

"தமிழகம் முழுவதும் பாஜகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைக்கவுள்ளோம். பாஜகவில் முக்கிய பதவி வகிக்கும் நிர்வாகிகள் சிலர் விரைவில் புதிய அணியில் இணையவுள்ளனர். தமிழக பாஜக மற்றும் தேசிய அளவில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. தமிழக மீனவர் பிரச்சனைகளுக்காக மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்.

தமிழக பாஜக நிர்வாகிகள் இதுவரை மீனவர் பிரச்சனைக்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி, பாலாறு மற்றும் சிறுவாணி ஆகிய தமிழக நீர் உரிமைகளுக்கு தீர்வு தேடி தராததால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது. இது போன்ற காரணங்களால் நாங்கள் பாஜகவில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கியுள்ளோம். நாங்கள் தமிழக மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவோம்"  என்று தெரிவித்துள்ளார்.

புதிய கட்சித் தொடங்கியது குறித்து ஜெயகுமாரிடம் விசாரித்தோம். அவர் கூறியதாவது;

"தமிழக மக்களின் உணர்வுக்குத் தகுந்த மாதிரி தமிழக பாஜக செயல்படவில்லை.தமிழகத்தை வழிநடத்தும் செயல்பாடுகள் இல்லை. நம்பி வந்த 50 லட்சம் உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. இதனால் பாஜக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாகவே இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளோம். பாஜகவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எப்போதும் இல்லாத பலம் கிடைத்தது. அதைத் தமிழக தலைமை தக்கவைத்துக்கொள்ளவில்லை.

காவிரி உள்ளிட்ட தமிழக நீர் பங்கீடு விவகாரத்தில் அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு சார்பில் அழுத்தமான நடவடிக்கைகள்  எடுக்கப்படவில்லை. இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதே நேரத்தில் உள்ளூர் பகுதிகளில் வீரியமாகச் செயல்படும் வட்டார அளவிலான தலைவர்களை  தமிழக பாஜக தலைமை அரவணைத்துச் செயல்படவில்லை.அவர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மாநில  தலைவர்களுக்கு மனநிலை இல்லை.

    

இதனால் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக தலைமை அதிருப்தியாளர்களை  ஒருங்கிணைத்துள்ளோம். 12 மாவட்டங்களில் உள்ளவர்கள் எங்களுடன் தற்போது இணைந்துள்ளனர். வரும் நாட்களில் தென் மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்க சுற்றுப் பயணம் செய்யவுள்ளோம். இது தொடர்பாக சேலம் அரியானூரில் கடந்த 17.08.2016ம் தேதி உயர்மட்ட பொறுப்பாளர்கள் 12 பேர் கூடி புதிய இயக்கம் தொடங்க முடிவு செய்தோம். அன்றுதான் கொள்கை,கொடி, பெயர் ஆகியவற்றை  முடிவு செய்தோம்.இலவசமாகக் கல்வி வேண்டும்,தீர்க்கப்படாமல் உள்ள தமிழக மீனவர் பிரச்னை,காவிரி நீர்ப் பங்கீடு  உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி கொள்கைகளை வடிவமைத்துள்ளோம்.  

தமிழகத்தின் தேவைகள் குறித்து தமிழக மற்றும் அகில இந்திய பாஜக தலைமைக்குத் தெரிவித்துள்ளோம். ஆனால் உரிய பலன் இல்லை.ஒரு அளவுக்கு மேல் எங்களால் தலைமையோடு பேசமுடியவில்லை. ஆனாலும் தலைமை கொடுத்த முடிவுகளின்படியே  கடந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தோம்.தொண்டர்களின் மன நிலையை தமிழக தலைமைப் பொருட்படுத்தவில்லை." என்றார்.

பாஜகவின் இந்தத் திடீர் பிளவு குறித்து அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனிடம் கேட்டோம். அவர் கூறுகையில்," முதலில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். பாஜகவில் உள்ள குறிப்பிடத் தகுந்த நபர் இதுபோல செய்து இருந்தால் பதில் சொல்லலாம். அவர் அடையாளம் தெரியாத நபர். இன்னொன்று, ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டார் என்று தர்மபுரி மாவட்ட தலைவரை நீக்கியுள்ளோம். அவருடன் இருந்த அரசியல் குரூப் இது.கட்சியில் இருந்துகொண்டு முன்னாள் அமைச்சர் பழனியப்பனோடு இணைந்துகொண்டு  அரசியல் செய்தார் அப்போதைய தருமபுரி மாவட்ட தலைவர். அதனால்தான் அவர் அளித்த வேட்புமனு கூட   தள்ளுபடி செய்யப்பட்டது.

அவர் ஏற்கெனவே கடந்த 2008 வரை தனியரசு கட்சியில் இருந்தவர்.அந்தக் கட்சியில் இருந்து வந்து பாஜகவில் இணைந்து வேலை செய்துள்ளார். இப்போது விளம்பரத்திற்காக அவர் ஏதோ செய்கிறார். பாஜகவோடு தொடர்பில்லாத நபர்.  அவர் பாஜக பெயரைப் பயன்படுத்தினால் அது எப்படி சரியாக இருக்கும். இன்றும் சொல்கிறேன்.பாஜக கட்டுக்கோப்பான கட்சி. யாரும் வெளியே போகமாட்டார்கள்.அவர் குறித்துக் கருத்துச் சொல்ல கூட எனக்கு தார்மீக உரிமை இல்லை. அவர்கள் கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர். பாஜக நடவடிக்கை தெரியாதவர். நேர்மையாக மக்களோடு,தொண்டர்களோடு இணைந்து பாஜக பயணிக்கிறது." என்றார் அழுத்தமாக.

- சி.தேவராஜன்                                                   

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ