Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"வேட்டி கட்டியும் உங்ககிட்ட மானமில்ல...!" அமைச்சர் கருப்பண்ணனுக்கு ஒரு மடல்

'அம்மா'வை கண்ணு முன்னால பார்த்தாலும் சரி, அவங்க ஹெலிகாப்டர்ல பறந்துகிட்டிருந்தாலும் சரி, சட்டுபுட்டுனு கால்ல விழறீங்க. இல்ல, மேடை கிடைச்சா போதும் கண்டதையும் வாந்தி எடுக்கிறீங்க. இது ரெண்டை மட்டும்தான் இந்த அ.தி.மு.க. மந்திரிங்க சரியா செய்துகிட்டு இருக்கீங்க. இப்படித்தான் முதல் நாள் ராத்திரி எங்க, என்னத்தை தின்னு தொலைச்சாரோ... நம்ம தங்கத் தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி, கே.சி. கருப்பண்ணன்... மேடை கிடைச்சதும் வாந்தி எடுத்திருக்காரு. இந்த ஆளைச் சொல்லிக் குத்தமில்ல... இவரெல்லாம் ஒரு ஜென்மம்னு சொல்லி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த நம்மளத்தான் சொல்லிக்கணும்.


விவசாயிகளை நோக்கி வார்த்தைகளை கொட்டியிருக்கிறாரு!


ஏதோ ஒரு குடிகாரன் உளறினானா... விட்டுத் தொலைச்சுரலாம். ஆனா, அரசாங்க பணத்துல... ஏசி காருல தேசியக்கொடியை பறக்கவிட்டுக்கிட்டு, ஓசியில சர்புர்ருனு வலம் வர்ற ஒரு மந்திரி; தமிழ்நாட்டுல இருக்கிற ஏழெட்டு கோடி பேருக்குமான பிரதிநிதியா இருக்க வேண்டிய ஒருத்தரு; இது எல்லாத்தையும் மறந்துட்டு, ஏதோ பக்கத்து வயல்காரன்கிட்ட வரப்புத் தகராறு வந்தா தாறுமாறா பேசுற மாதிரி, விவசாயிங்கள நோக்கி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியிருக்காரு, அதுவும் அரசாங்க மேடையில ஏறி நின்னுக்கிட்டு! 
ரெண்டு, மூணு நாளைக்கு முன்ன, ஈரோட்டுல கூட்டுறவுக் கடன் மேளா துவக்கவிழா மேடையில ஏறின இந்த மந்திரி கருப்பண்ணன், தமிழ்நாட்டு விவசாயிங்க எல்லாம் கோடியில கொழிக்கிறாங்க...அவங்களுக்கு என்ன கஷ்டம்னு கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம உளறியிருக்காரு.

"இன்னிக்கு கோடிக்கணக்குல விவசாயிங்ககிட்ட பணமிருக்கு. கூட்டுறவு பேங்க்ல கோடிக் கணக்குல பணம் போட்டிருக்காங்க. வட்டி வாங்கறாங்க, ஃபைனான்ஸ் பண்றாங்க, லாரி வெச்சுருக்காங்க, பல தொழில் பண்றாங்க. லட்சக்கணக்கான விவசாயிங்க கோடீஸ்வரனாதான் இருக்காங்க. இதையெல்லாம் விட்டுட்டு கோவணத்தைக் கட்டிக்கிட்டு ரோட்டுல படுத்துக்கிட்டு தண்ணியில்ல... தண்ணிவிட மாட்டேங்கறீங்கனு போராட்டம் நடத்துறாங்க. ஒரு சென்ட் நிலம் இல்லாதவனெல்லாம் விவசாயினு சொல்லிக்கிட்டு போராடுறான்"

விவசாயிங்க கோடீஸ்வரன்களா இருக்கக்கூடாதுன்னு யாரு சொன்னா?
அட மண்டூக மந்திரியே... விவசாயிங்க கோடீஸ்வரன்களா இருக்கக்கூடாதுனு உங்களுக்கு யாரு சொன்னா? அப்படி தமிழ்நாட்டுல சட்டம் ஏதும் போட்டு வெச்சுருக்கீங்களா? இல்ல, தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை விவசாயியும் உங்க 'அம்மா' மாதிரி ஐதராபாத்துல திராட்சை தோட்டத்தை வெச்சு, கோடிகோடியா விளைவிக்கிறாங்களா? இல்ல, உங்கள மாதிரி தாளவாடி மலையையே வளைச்சு வளைச்சு வாங்கிப்போட்டு பணத்தை வெளைய வைக்கிறாங்களா? இல்ல, கால்ல விழுந்து விழுந்து, ஊரை இடிச்சு உலையில போட்டு, கோடிக்கணக்குல சொத்து சேர்த்து வெச்சுருக்காங்களா?

ஊருக்கு ஒண்ணு ரெண்டு கோடீஸ்வர விவசாயிங்களும் இருக்கத்தான் செய்வாங்க. அவங்க பரம்பரை பரம்பரையா சேர்த்து வெச்ச சொத்துக்களை வெச்சு பண்ணயம் பார்த்துட்டுதான் இருப்பாங்க. ஆனா, ஊரை ஏமாத்துறதுக்காகவே, பண்ணையம் பார்க்கறதா சொல்லிக்கிட்டு, கருப்புப் பணத்தை பதுக்கியா வெச்சுருக்காங்க.
இன்னிக்கு உங்க சொத்து மதிப்பு... பதினாலு கோடி ரூபாய். உங்களுக்கும் விவசாயம் ஒரு தொழில். இதெல்லாம் எப்படி வந்துச்சு?
 

2006ல உங்க சொத்து மதிப்பு 2 கோடி, 2016ல 14 கோடி ரூபாய்!
2006-ம் வருஷம் இதே பவானி தொகுதியில போட்டியிட்டப்ப நீங்க கொடுத்த மொத்த சொத்துக்களோட மதிப்பு சுமார் ரெண்டு கோடி ரூபாய் (2,06,07,831). அந்த சமயத்துல மொத்த வாங்கிப் போட்டிருந்த நிலம் நீச்சோட மதிப்பு, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் (1,44,89,000). அடுத்த பத்து வருஷத்துக்குள்ள இதெல்லாம் பல மடங்கு எகிறியிருக்கு பாருங்க... சாமி, இந்த சாமர்த்தியம் எந்த விவசாயிக்கும் வராதுங்க.

இப்ப, 2016-ம் வருஷம் இதே பவானி தொகுதியில போட்டியிட்ட உங்களோட மொத்த சொத்தோட மதிப்பு கிட்டத்தட்ட 14 கோடி (13,76,60,972). விவசாய நிலத்தோட மதிப்பு அஞ்சரை கோடி ரூபாய்க்கு மேல (5.67 கோடி). வெறும் நிலம் (விவசாய பயன்பாடு இல்லாதது) மூணே முக்கால் கோடிக்கும் மேல (3,78,09,330). ஆகக்கூடி பத்து வருஷத்துல சொத்து மதிப்பு 600 சதவிகிதம் பெருகியிருக்கு. தாளவாடி மலையைச் சுத்தி சுத்தி நிலத்தை வளைச்சுப்போட்டு கொழிச்சிக்கிட்டிருக்கீங்க.
சும்மா சொல்லக்கூடாது.... நிஜமாலுமே நீங்க சூப்பர் விவசாயிதான். ரெண்டு கோடி ரூபாயை பத்து வருஷத்துல, இத்தனை கோடி ரூபாயா பெருக்கத் தெரிஞ்ச வித்தையை மத்த விவசாயிங்களுக்கும் கத்துக் கொடுத்தா... நீங்க சொல்றபடி தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை விவசாயிங்களுமே கோடீஸ்வரன்களா மாறிடுவாங்க. ஆனா, அவங்களுக்கெல்லாம சூடு சொரணை இருக்கே....  கூஜா தூக்கி, யார் கால்லயும் விழுந்து வாழணும் அவங்க நினைக்கறதே இல்லையே.

'ஒரு சென்ட் நிலம் கூட இல்லாதவன் விவசாயி'னு சொல்லி போராடுறதுல தப்பில்ல... ஆனா, ஏக்கரா... ஏக்கராவா வெச்சுக்கிட்டு, விவசாயமே பண்ணாம கோடீஸ்வரன் ஆகறதுதான் தப்பு. எங்க ஆளுங்களும் தலைகீழ நின்னு விளைவிச்சு பாக்கறாங்க... நூறு வருஷமா அதே ஒண்ரையணா நிலம்தான் இருக்கு. ஆனா, பத்தே வருஷத்துல சும்மா விளைவிச்சு குவிச்சிருக்கீங்களே. நாங்க புடலங்காய் போட்டா, புடலங்காய்தான் விளையுது. ஆனா, நீங்க புடலங்காய் போட்டா, தங்கம்ல விளைஞ்சு தொங்குது. உங்கம்மா ஐதராபாத்துல திராட்சை போட்டா, வைரம்ல்ல விளைஞ்சு தொங்கிக்கிட்டிருக்கு. இல்லனா, பத்து வருஷத்துல இத்தனை கோடியா சொத்து பெருகியிருக்குமா? உங்க நாத்தம், ஊர் பூரா நாறுது. இந்த லட்சணத்துல விவசாயிங்கள பார்த்து கேள்வியா கேக்கறீங்க, கேள்வி?

'எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, -முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா'னு கம்பரைப் பார்த்து ஔவையார் சுடச்சுட கேட்ட மாதிரிதான் உங்ககிட்ட கேக்க தோணுது (நாங்களும் எடுத்து விடுவோம்ல)!

விவசாயி, கோடீஸ்வரனோ... ஏழையோ... தன்னோட ஜீவனை நடத்துறதுக்காக.... இந்த நாட்டுல இருக்கிற ஏகப்பட்ட ஜீவனங்களும் உயிர்வாழ... ஏன், உங்களை மாதிரி பகாசுரன்களும் நாட்டுல உயிரோட நடமாட... தன்னோட வயல்ல பயிர் வைக்கணுமேனு கோவணத்தைக் கட்டிக்கிட்டு ரோட்டுல உருளுறான். தான் நிஜமாவே கோவணத்தோட நாளைக்கு ரோட்டுக்கு வந்துடக்கூடாதுங்கறதுக்காவும்... ஏற்கெனவே கோவணம் மட்டும்தான் வாழ்க்கைனு இருக்கிற ஏழைப்பட்ட சிறுகுறு விவசாயிங்க அந்த கோவணத்தையும் இழந்துடக்கூடாதுனுதான் ரோட்டுக்கு வந்து உக்கார்ந்துகிட்டிருக்கான். ஆனா, நீங்களெல்லாம் பளப்பளானு கஞ்சிபோட்டு அயர்ன் பண்ணின வேட்டியைக் கட்டியிருந்தும், பெரிய பெரிய சபை, கவர்னர் மாளிகை, லட்சக்கணக்குல மக்கள் கூடியிருக்கிற மேடைனு கண்ட இடத்துலயும் கால்ல விழுந்து மானத்தை உதிர்த்துட்டு நிக்கறீங்க. ஆனா, உங்களுக்கு விவசாயிங்க கோவணத்தோட ரோட்டுக்கு வந்தா, கோபம் பொத்துக்கிட்டு வருது.

 

அவன் அப்படி என்ன  கேட்டு வீதிக்கு வந்தான்... ஆந்திரா, கர்நாடகா, கேரளானு சுத்தியிருக்கிற மூணு மாநிலங்களும் வளைச்சி வளைச்சி அணையைக் கட்டிக்கிட்டிருக்காங்க. ஆனா, தி.மு.க அய்யா... அ.தி.மு.க அம்மானு மாறி மாறி ஆட்சியைப் புடிச்சும் ஒரு வெங்காயத்தையும் உறிக்க முடியல இந்த அரை நூற்றாண்டுல. ஒண்ணு டெல்லியில உக்கார்ந்துகிட்டிருக்கிற எஜமானருங்களுக்கு கடுதாசி எழுதி போடறீங்க... இல்ல கோர்ட்டுல போய் வழக்கு தாக்கல் பண்ணிட்டு உக்காந்துடறீங்க. கேவலம் இந்த கடுதாசியை எழுத... கோட்டுக்கு போக... நீங்களாவே என்னிக்காச்சும் முடிவெடுத்திருக்கீங்களா? இதையும்கூட கோவணத்தைக் கட்டிக்கிட்டு வீதிக்கு வந்தாதானே, உங்க பேனாவையும் பேப்பரையும் கையில எடுக்கறீங்க.

விவசாயிங்க வீதிக்கு வந்து போராடுன பிறகு அரசாங்க காசுல கேஸை போட்டு கொஞ்சம் போல ஏதாச்சும் அசைஞ்சா போதும்... உடனே காவிரி கண்ட சோழனே... காவிரித்தாயேனு போஸ்டர் போட்டுக்கறீங்க.  இதையெல்லாம் பார்த்துட்டு நாங்கதான் உங்கள நார் நாரா உரிக்கணும். ஆனா, மேடை கிடைச்சுதேனு கூப்பாடா போடறீங்க... கூப்பாடு. பார்த்துக்கிட்டே இருங்க, கூடிய சீக்கிரமே அந்தக் காவிரித்தாயே உங்களப் பார்த்து காரித்தான் துப்பப்போறா... நான் சொன்னது நிஜமான காவிரித்தாயை!


-ஜூனியர் கோவணாண்டி
ஓவியம்: ஹரன்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ