Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழைக்கு முன்னர் அடையாறு தூர்வாரப்படுமா? முடிச்சூர் மக்கள் கவலை!


2015-ம் ஆண்டு வட கிழக்குப் பருவமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியது. நாம் அனைவரும் அறிந்தததே. அப்போது, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று தாம்பரத்தை அடுத்த முடிச்சூர். வண்டலூரில் தொடங்கி முடிச்சூர் வழியாக வரும் அடையாற்றின் ஒரு பகுதி, செம்பரம்பாக்கத்திலிருந்து வரும் மற்றொரு பகுதியுடன், அனகாபுத்தூரில் சேர்ந்து, முதன்மையான அடையாற்றில் கலக்கின்றது. முடிச்சூர் பகுதியில் ஓடும் அடையாற்றிலிருந்து தான் கடந்த வருடம் பெருவெள்ளம் அந்த பகுதியை தாக்கியது. ஆனால் இதுவரை இந்த ஆண்டு பெய்யவிருக்கும் வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு தூர்வாரப்படவில்லை.

இதைக் கண்டிக்கும் வகையில் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் நலச் சங்கங்கள் இணைந்து, முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் இணை நடவடிக்கை கமிட்டி என்ற பெயரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை ஐந்து மணி வரை நடைப்பெற்றது. முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளை சேர்ந்த பல நலச்சங்க தலைவர்கள் இதில் பேசினர்.

இதைப் பற்றி பேசிய கமிட்டி செயலாளர் வெங்கட் பிரசாத், "கடந்த ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். வெள்ளத்திலிருந்து மீண்டு வரவே எங்கள் வாழ்க்கையில் பலவற்றை இழந்தோம். சென்னை முழுவதுமே 500 நபர்கள் தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வரதராஜபுரம் பி.டி.சி காலணியில் மட்டும் மரண எண்ணிக்கை 300.

பச்சிளங்குழந்தைகளின் சடலங்கள் மிதந்து கொண்டு வீடுகளுக்குள் வந்தன. சொல்ல முடியாத அளவிற்கு அவலங்களை சந்தித்தோம். பெரிய அளவிற்கு இந்த பகுதி பாதிக்கப்பட்டதற்கு காரணங்கள் இரண்டு. முதல் காரணம், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் வேகம் அதிகம். அதனால் வண்டலூரிலிருந்து வந்த நீர் பின் வாங்கி எங்கள் பகுதிக்குள் வந்தது. மற்றொரு காரணம் இங்கு இருக்கும் நீர்நிலைகள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை.

இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை இப்போது தொடங்கவிருக்கின்றது. இங்கு செல்லும் அடையாற்றின் ஒரு பகுதி 30 அடி ஆழமும் 120 அடி அகலமும் இருந்தால் தான் அது சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு  எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால் இப்போது பத்து அடி ஆழமும் முப்பது அடி அகலமும் தான் இருக்கின்றது. அதனால் நீர் பெருக்கெடுத்து வீடுகளுள் வருகின்றது. எனவே சரியான ஆழத்திற்கும் அகலத்திற்கும் தூர் வாரப்பட வேண்டும். இங்கு இருக்கும் வீடுகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்று கட்டப்பட்டுள்ளன. பதினைந்து வருடங்களாக அரசு அங்கீகாரம் கொடுத்து தான் வந்தது. ஆனால் ஆற்றை ஒட்டியிருக்கும் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அரசு அங்கீகாரம் பெறாதவை.

ஜனவரி மாதம் முதல் நாங்கள் மனு கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்கள் அரசியல் பலம் கொண்டவர்கள். எனவே அவர்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு பக்கம் கரையை கட்டிய அரசு மற்றொரு பக்கம் கட்டாததற்கு காரணம் இது தான். ஏன் பாதியில் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டதற்கு வர வேண்டிய தொகை வந்து சேரவில்லை என்றுக் கூறினார்கள். மேலும், மத்திய அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற தான் முதல் தொகையை கொடுத்தது.

ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்குதான் வெள்ள நிவாரண தொகை சரியாக சென்றது. மேலும் இதைப் பற்றி இணையதளத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் எங்களில் ஒருவர் மனு செய்த போது இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர் வாரப்பட்டதாக பதில் அனுப்பினர். ஆனால், இது மிகப் பெரிய ஊழல். மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை, கண்காணிப்புத்துறை என்று அனைவருக்கும் நேரில் மனு கொடுத்தோம். எந்த வித பதிலும் இல்லை. எங்களுக்கு இன்னும் பத்து நாட்களில் பதில் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் உண்ணாவிரதம் நடத்துவோம்" என்றார்.

இதைப் பற்றி பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, "அடுத்த தொகுதியை காங்கிரஸ்ஸுக்கு ஒதுக்கிவிட்டு தாம்பரம் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கியதன் காரணம் நாங்கள் பார்த்து பார்த்து இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக தான். கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் வரை அரசிடம் போராடுவோம்", என்றார்.

- ம. சக்கர ராஜன்
படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின்
மாணவர் பத்திரிகையாளர்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ