Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''அம்மா' வர்றதுக்கும் சில அறிகுறிகள் இருக்கு மக்களே!

யார் சொன்னது காதல், காய்ச்சல் போன்றவற்றை மட்டும்தான் வருவதற்கு முன்பே அறிகுறிகள் வைத்துத் தெரிந்துகொள்ளலாம் என்று? மாண்புமிகு இதயத்தெய்வம் புரட்சித்தலைவி அம்மா சென்னை நகரத்திற்குள் உலா வரப் போகிறார் என்பதையும் சில பல அறிகுறிகள் வைத்து தெரிந்துகொள்ளலாம். இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுகிட்டாதான் அடுத்த தடவை ஆபீஸுக்கு சீக்கிரமே போய்ச் சேர முடியும். ஸோ, வாங்க பாஸ்!

* முதல் அறிகுறி - இதுநாள்வரை சிக்னல் திருப்பங்களிலும், வீக்கெண்ட் நேரங்களிலும் மட்டுமே தென்பட்ட போலீஸ் வாகனங்கள் மெயின் ரோடு முழுக்க வரிசைகட்டி நின்றிருக்கும். வேர்ல்டு கப் ஃபைனலில் விளையாடும் பெளலர்கள் போல பதற்றமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள். சட்டென உங்கள் வண்டி ஆஃப் ஆகிவிட்டால்கூட ஓடிவந்து தள்ளிவிட்டு 'போ போ போய்கினே இரு' எனக் கிளப்பிவிடுவார்கள்.

* வழக்கமாகப் போகும் பாதைகள் எல்லாம் அடைபட்டு 'டேக் டைவர்ஷன்' போர்டு மாட்டிக்கொண்டு பரிதாபமாகக் காட்சி அளிக்கும். 'லெப்ட்ல வழியில்லை, இடதுபக்கம் போ' என ஏகத்துக்கும் குழப்பி மண்டை காய வைப்பார்கள். மெயின் ரோடுகள் எல்லாம் காலியாகக் கிடக்க, சந்து பொந்துகளில் புகுந்து புகுந்து போவார்கள் வாகன ஓட்டிகள். இப்படியே டேக் டைவர்ஷன் ஆகி ஆகிக் கடைசியில் கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்திருப்பீர்கள்.

* அதுநாள்வரை பேரீச்சை வியாபாரிகளுக்கு ஆசை காட்டிக்கொண்டிருந்த பேரிகேட்கள் அம்மாவைக் கண்ட மினிஸ்டர்கள் போல வரிசையாக அணிவகுத்து நிற்கும். அதுவும் சும்மா இல்லை. சீனப் பெருஞ்சுவருக்கே சவால் விடும் அளவிற்கு ரோட்டின் இரண்டு பக்கமும் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு. இது எப்படி இன்னும் பச்சை கலருக்கு மாறாமால் தப்பிப் பிழைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.

* ர.ரக்களின் அக்மார்க் வரவேற்பு கலாசாரமான பிரமாண்ட பேனர்கள் ஊரெங்கும் தொங்கிக்கொண்டிருக்கும். 'வைர வைடூர தாரகையே', 'பூவின் புன்னகையே', 'சரித்திரத்தின் உயிரே' என ரணகள அதகள வார்த்தைகளால் சென்னையை அலங்கரித்திருப்பார்கள். பேனர் வைக்கக் கூடாது எனத் தலைமை அறிவித்திருப்பதால் இப்போதெல்லாம் பேரிகேட்களில் எழுதித் தொங்கவிடுகிறார்கள். அபார ஐடியா ஐயா!

* சென்னை முழுக்கவே அ.தி.மு.க. கட்சிக்காரர்களின் பார்க்கிங் ஏரியாவாக இருக்கும். ஆங்காங்கே பஸ்கள், வேன்களை நிறுத்திவைத்து கூட்டமாக கெத்து காட்டிக்கொண்டிருப்பார்கள். 'அதான் அந்தப் பக்கம் மூணு அடி இடம் இருக்குல, அதுல போ' என எம்.டி.சி பஸ்சை விரட்டிக்கொண்டிருப்பார்கள். கருப்பு - வெள்ளை - சிவப்புதான் சென்னையின் 'தேசியக்கொடி' போல என வெள்ளைக்காரர்கள் நினைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு.

* ஜியோ சிம் வாங்கக்கூட இவ்வளவு கூட்டம் சேர்ந்திருக்காது. பேரிகேட்களுக்கு பின்னால் கூட்டம் கூட்டமாக காத்துக்கொண்டிருப்பார்கள் வாக்காளப் பெருமக்கள். காத்திருந்து காத்திருந்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகி காத்திருந்து...ஸ்ஸப்பா! ரொம்பக் கஷ்டம்.

* இது எல்லாவற்றையும் விட சிம்பிள் அறிகுறி ஒன்று இருக்கிறது. ஜம்மென ஆபிஸுக்கு ரெடியாகி வெளியே எட்டிப்பாருங்கள். உங்கள் தெருமுனையிலேயே வரலாறு காணாத ட்ராஃபிக் ஜாம் இருக்கிறதா? கண்டிப்பா அம்மா இன் ஆக்‌ஷன் ப்ரோ! சாப்பிட்டு சாயங்காலமா ஆபீஸ் போங்க. ஏவ்வ்வ்!

-நித்திஷ்

படங்கள் - ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ