Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவருக்கு சீட்டா.... கட்சிக்கே வேட்டு! (வீடியோ)


அ.தி.மு.கவில் மாவட்ட நிர்வாகிகளுக்கு விருப்பமானவர்களுக்கே உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறி தலைமை அலுவலகத்தை கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை ராயபேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியானதும் கட்சிக்குகள் களேபரம் தொடங்கி விட்டது. கட்சிக்காக உழைத்த எங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற குரல் அ.தி.மு.கவில் மேலோங்கி நிற்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீட் கிடைக்காதவர்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு இன்று காலையிலேயே குவிந்தனர். தென்சென்னை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிரணியினர் மற்றும் நிர்வாகிகள் ராயபேட்டைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னையிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். இதனால் ராயபேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகம் பரபரப்பானது.
இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், " தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் 127வது வார்டு கவுன்சிலராக மலைராஜன் இருக்கிறார். இவருக்கு இந்த முறையும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை விட சொற்ப எண்ணிக்கையிலான ஓட்டுக்களிலேயே மலைராஜன் வெற்றி பெற்றார்.
128வது வார்டில் சீட் கொடுக்கப்பட்டுள்ள ரீட்டாவுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. இந்த வார்டு கவுன்சிலரான ஜெயந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த வார்டில் அதிக ஓட்டுக்கள் அ.தி.மு.கவுக்கு கிடைத்தும், ஜெயந்திக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
129வது வார்டில் மாவட்டச் செயலாளர் ரவியின் உறவினரான வட்டச் செயலாளர் மூர்த்தியின் மனைவிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
131வது வார்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் கவுன்சிலர் குணசேகரனுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
137 வது வார்டில் மாவட்டச் செயலாளருக்கு உறவினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 138வது வார்டிலும் இதே கூத்துதான்"என்றனர்.

மனைவிக்கு வார்டை தாரை வார்த்த எம்.எல்.ஏ

அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகுள் உள்ளன. தற்போது 10 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.கவில் 4 கவுன்சிலர்கள், ஒரு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர். இதில் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் இரண்டு பேர் இறந்து விட்டனர். மெஜாரிட்டி அ.தி.மு.க கவுன்சிலர்கள் இருந்தும் மண்டல சேர்மன் பதவி தி.மு.க வசம் சென்று விட்டது. இதனால் மண்டல சேர்மனுக்கு போட்டியிட்டு வாய்ப்பை இழந்த அலெக்ஸாண்டருக்கு நகர செயலாளர் பதவி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில பதவி என தேடி வந்தது. இப்போது எம்.எல்.ஏ மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
சீட் கிடைக்காதவர்கள் கூறுகையில் "அம்பத்தூர் மண்டலத்தில் 8 அ.தி.மு.க கவுன்சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2 பேரின் மனைவிக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஜே.சி.டி. பிரபாகர், 80வது வார்டில் போட்டியிடுகிறார். அம்பத்துர் நகரச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்த வேதாச்சலம், தன்னுடைய மருமகளுக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுத்தார். அதுபோல அலெக்ஸாண்டர், தன்னுடைய மனைவி வளர்மதிக்கு தன்னுடைய 89வது வார்டிலேயே போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரை வெற்றி பெறச் செய்து மண்டல சேர்மன் பதவியை பெற வேண்டும் என்று காயை நகர்த்தி வருகிறார்.  அடுத்து அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்"என்றனர்.

தி.மு.க ஆதரவாளருக்கு அ.தி.மு.கவில் சீட்

தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் 170வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு கிண்டியில் நடந்த தி.மு.க கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது வட்டச் செயலாளராக இருந்த சீனிவாசன், நீதிமன்றத்தில் தி.மு.கவுக்கு சாதகமாக தகவலைச் சொன்னார். இதன்பிறகு அவரது வட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத அவருக்கு எப்படி கவுன்சிலர் சீட் கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளனர் அந்த வார்டு அ.தி.மு.கவினர். அவர்கள் தலைமைக்கு அனுப்பிய மனுவில் சீனிவாசனைத் தவிர்த்து யாரை வேண்டும் என்றாலும் நிறுத்துங்கள். அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் நிச்சயம் 170வது வார்டில் உள்ளடி வேலை நடக்க வாய்ப்புள்ளது.


 

 

 

41 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 171 வார்டுகள் அ.தி.மு.க வசம் இருந்தது. இதில் 2 கவுன்சிலர்கள் படுகொலை, மூன்று பேருக்கு எம்.எல்.ஏ வாய்ப்பு, ஒருவருக்கு டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் பதவி போக 165 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 115 கவுன்சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 41 கவுன்சிலருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.கவினர் தெரிவித்தனர்.

கட்சியினர் தெரிவித்த புகார்களுக்கு பதிலளித்த நிர்வாகிகள், "கவுன்சிலர் சீட் கேட்டு எல்லோரும் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். அதில் ஒருவார்டுக்கு மூன்று பேர் என்ற வீதத்தில் தலைமைக்கு பட்டியல் அனுப்பினோம். அவர்களது கடந்தகால கட்சியின் செயல்பாடுகளை வைத்து சீட் கொடுக்கப்பட்டுள்ளது. சீட் கிடைக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளை சொல்வார்கள். பணம் வாங்கியதாக சொல்லப்படும் புகார்களை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஜெயலலிதா எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்"என்றனர்.

 அ.தி.மு.கவில் தேர்தல் ஜூரம் இப்போதே சூடுப்பிடிக்கத் தொடங்கி விட்டது.

 எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ