Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தேர்தல் மன்னன்’ இந்த தேர்தலுக்கு என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

 

நாம் எளிதாக தோல்வியில் இருந்து சாதனை புரிந்தவர்கள் என்று பலரை அடையாளம் காண முடியும் ஆனால் தோல்வியையே  சாதனையாக மாற்ற தெரிந்தவர்கள் சிலரை தான் அடையாளப்படுத்த முடியும் அந்த  வகையில் ஒருவரை சந்தித்தோம். பத்மராஜன் என்று கேட்டால் இவர் ஊரிலே பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் தேர்தல் மன்னன் பத்மராஜன் என்றால் இந்தியாவிற்கே தெரியும் அளவிற்கு புகழ்பெற்றவர்.  உள்ளாட்சி தேர்தல் முதல் குடியரசு தலைவர் தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தே சாதனைகள் பல படைத்தவர். அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், மோடி, விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா என இவர் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யாத தலைவரே இல்லை எனலாம். இந்த  உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தொடங்கிய முதல் நாளிலேயே 176 வது  முறையாக மேட்டூர் அருகே உள்ள  வீரக்கல்புதூர் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அவரை  சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்

தேர்தலில் போட்டியிடும் ஆசை எப்படி வந்தது?

எப்போதும் போல நண்பர்களுடன் பேசி கொண்டு இருக்கும் ஒருநாள்  தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசும் போது தேர்தலில் போட்டியிடுவது பற்றிய  ஐடியா வந்தது. 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மேட்டூர் சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் கட்சியை சேர்ந்த சீரங்கனை எதிர்த்து போட்டியிட்டேன், அது தான் எனக்கு முதல் தேர்தல். என்னை பொது வாழ்விற்கு கொண்டு வந்ததில் தராசு ஆசிரியர் சியாம்க்கு பெரும் பங்கு உண்டு.

ஒரு வெற்றியாவது உண்டா?

நான் எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்று வேட்புமனு தாக்கல் செய்வது இல்லை. நான் எப்போதுமே வெற்றியை எதிர்பார்ப்பவன் இல்லை. இதை நிஜமாக்கும் வகையில் தேர்தல் மன்னன் தோல்வி கட்சி என்று ஒரு கட்சியே ஆரம்பித்து உள்ளேன். அந்த கட்சியின் நிறுவன தலைவரே நான் தான்.  1996 ஆம் ஆண்டு பர்கூரில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்றேன். அந்த தேர்தலில் அவரும் தோற்றார்., நானும் தோற்றேன். இதுவும் ஒரு சாதனை தான். (யானைக்கும் அடி சறுக்கும்னு சொல்ல வர்றாப்ல)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி சொல்லுங்கள்?

எப்படியும் தோல்வி தான். சொந்த ஊர் என்பதால் கணிசமான வாக்குகள் கிடைக்கும். தேர்தல் மன்னன் பத்மராஜன் என்றெல்லாம் பேரை பார்த்து வாக்களிக்க யாரும் தயாராக இல்லை. மற்ற இடங்களை போல் இங்கும் பணம் ஜாதி கட்சி தான் ஜெயிக்கும் (தோல்வி முக்கியம் அமைச்சரே)

தேர்தல் போட்டியால் நீங்கள் சாதித்தது என்ன?

தன்னம்பிக்கை, அனுபவம், இது மட்டுமின்றி நான் ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் எட்டு தொகுதியில் போட்டியிட்டதை பார்த்து தேர்தல் ஆணையம் ஒருவர் இரண்டு தொகுதிக்கு மேல் போட்டியிட கூடாது என்றெல்லாம் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. டெபாசிட் தொகையை அதிகரித்தது என நிறைய சொல்லலாம். இதனால் ஊடகங்கள் மூலம் பிரபலம் ஆனது. என்னைப்பற்றி எழுதாத ஊடகங்களே இல்லை என்றே சொல்லலாம். நான் இறந்த பிறகும் தேர்தல் மன்னன் பற்றி வரலாறு பேசும். இதைதான் சாதனையாக நினைக்கிறேன்.

தேர்தல் செலவுகள் எப்படி சமாளிக்கிறீர்கள்?

வேட்புமனு தாக்கல் செய்யும் போது டெபாசிட் தொகை மட்டும் தான் என்னுடைய தேர்தல் செலவு மற்றபடி நான் எந்த செலவும் செய்வதில்லை. இதற்கெல்லாம் பஞ்சர் கடை தொழில் மூலம் வரும் வருமானத்தில் தான் பெரும்பாலும் டெபாசிட் கட்டுறேன், அப்பப்போ  நண்பர்களிடமும் கடன் வாங்கியும் டெபாசிட் செய்து இருக்கேன்.

அரசியல் தலைவர்களை எதிர்த்து போட்டியிடும் போது என்ன மாதிரியான நெருக்கடிகள் வரும்?

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் உள்ளா நந்தியால் தொகுதியில்   நரசிம்மாராவை எதிர்த்து போட்டியிட்ட போது நான் கடத்தப்பட்டேன். ஒரு வாரம் கடத்தல்காரர்களின் கஷ்டடில் இருந்தேன்.அப்போது நானே தப்பித்து தான் இங்கே வந்தேன். அந்த ஒரு வாரத்தில் சரியான சாப்பாடோ தண்ணியோ கிடைக்கலை. இது போன்று பல்வேறு சவால்களை தாண்டி தான் தேர்தல் மன்னனாக தற்போது உள்ளேன். நான் இதுவரை ஓட்டு கேட்கவோ பிரச்சாரம் செய்யவோ போவதில்லை இதனால் எனக்கு எந்தவொரு நெருக்கடியும் வரவில்லை.

தேர்தலில் போட்டியிட்டால் மட்டும் போதுமா?

நான் தேர்தலில் வேட்புமனு செய்வதை மட்டுமே சாதனையாக நினைக்கிறேன். போட்டியிடவோ பிரச்சாரம் செய்யவோ ஆசை இல்லை. மக்களிடையே தேர்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே வேட்புமனு தாக்கல் செய்கிறேன். ஒரு சில தேர்தல்களில் பல்வேறு  காரணங்களை காட்டி எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்து விடுவார்கள், நான் அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.1994 ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எனது மூன்று  வயது மகன் பெயரில்  வேட்புமனு தாக்கல் செய்தேன்.  தேர்தலில் சாதாரண மக்களும் போட்டியிடலாம் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

ஏதாவது தேர்தலில் வெற்றி பெற்றால்?

இது நடக்காத ஒன்று, அதையும் மீறி நீங்கள் சொல்வது போல் நடந்தால் என் இதயமே நின்று போய் விடும். நான் தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். எல்லா தேர்தலிலும் அதையே எதிர்பார்க்கிறேன். வெற்றி பெற்றால் அதுதான் கடைசி தேர்தலாக இருக்கும்.

உங்கள் பூர்வீகம் மற்றும் குடும்பத்தைப் பற்றி?

என்னுடைய பூர்வீகம் கேரளா. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலத்தில் உள்ள ஆத்தூரில் தான் இப்போ மேட்டூர் பக்கத்தில் உள்ள குஞ்சான்டியூரில் வசிக்கிறேன். பஞ்சர் டயர் சம்பந்தமான தொழில் செய்து வருகிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஹிஸ்டரி படிச்சு இருக்கேன். மனைவி பேரு ஶ்ரீஜா நம்பியார். ஒரே மகன் ஶ்ரீ ஜேஷ் பத்மராஜன். ஒவ்வொரு முறையும் தேர்தலில் வேட்புமனு செய்யும் போதெல்லாம் அப்பா தைரியம் தருவார். திருமணம் ஆன புதிதில் மனைவி கொஞ்சம் பயப்படுவாங்க, ஆன இப்போ அவங்களும் எனக்கு பக்க பலமா இருக்காங்க. என் மகன் இப்போ ஐஏஎஸ் பிரிப்பேர் பண்றான். அவனுக்கு தேர்தலில் போட்டியிடுவது போன்ற ஆசை எல்லாம் எதுவும் இல்லை.

- லோ.பிரபுகுமார்,
மா.விஜய்சூர்யா
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

படங்கள்: க.தனசேகரன்

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ