Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க எம்.பி. மீதே வெடிகுண்டு வழக்கு போட்ட 'தில்' போலீஸ்...!

திருத்தணியில் அ.தி.மு.க கவுன்சிலர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த அரி எம்.பி உள்பட 17 பேர் மீது வெடிபொருள் வைத்திருந்ததாக வழக்கை  தில்லாக பதிவு செய்துள்ளது திருத்தணி போலீஸ்.

திருத்தணியில் அ.தி.மு.க கவுன்சிலர் ஆப்பிள் ஆறுமுகம்  கடந்த 9-ம் தேதி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ராஜேஷ்,  ஜாகீர்உசேன், பிரேம்குமார், சின்னசாமி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு தி.மு.க பிரமுகர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆறுமுகம் கொலையை கண்டித்து அ.தி.மு.கவினர் திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், அ.தி.மு.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதன்பிறகு திருவள்ளூர் டி.எஸ்.பி ஈஸ்வரனை அ.தி.மு.கவினர் உருட்டுகட்டையால் தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
 இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த போலீஸ்காரர் முருகன், திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரக்கோணம் தொகுதியின் அ.தி.மு.க எம்.பியான கோ.அரி, அவரது டிரைவர் வெங்கடேஷ், வேலஞ்சேரி காமேஷ், கவுன்சிலர்கள் கருணாநிதி, குமார், முனுசாமி, சுரேஷ், ஏழுமலை மற்றும் விஜயபாஸ்கர், தாயுமானவன், பிரகாஷ், ராமமூர்த்தி உள்ளிட்ட அ.தி.மு.வைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது கலகம் விளைவித்தல், வெடிபொருள் வைத்திருத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை கடமை செய்வதிலிருந்து தடைசெய்வதற்காக தாக்குதல் அல்லது குற்றவன்முறையில் ஈடுபடுதல், வெடிபொருள் தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்தல் அரசு சொத்து சேதம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அ.தி.மு.க முக்கிய பிரமுகர் ஒருவர் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் திருவள்ளூர் மப்பேடு பகுதியில் ஒருவரும், திருத்தணியில் கவுன்சிலர் ஆறுமுகம், பூந்தமல்லி வெள்ளவேடு போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் ஆகிய மூன்று கொலைகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் போலீஸாரின் அஜாக்கிரதையே காரணம். திருத்தணியில் எங்கள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஆறுமுகம், கொலை நடந்தவுடன் கட்சியினர் திரண்டனர். இதனால் போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் டி.எஸ்.பி. ஈஸ்வரன் தாக்கப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக அரி எம்.பி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் மீது வெடி பொருள் வைத்திருந்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நியாயமற்றது. வெடிபொருள் எங்கு வைத்திருந்தார்கள், எந்த இடத்திலிருந்து போலீஸார் அதை கைப்பற்றினார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

ஆறுமுகம் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அவரைக் கொலை செய்ய முயற்சித்த 4 பேர் கும்பலில் ஒருவரை பிடித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதியிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில் அவரது பெயர் சதீஷ்குமார், திருவள்ளூர் புதுசத்திரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் சதீஷ்குமார் மீது சாதாரண வழக்கை போலீஸார் பதிவு செய்தனர். சதீஷ்குமாரிடம்  போலீஸார் முறையாக விசாரித்து இருந்தால் ஆறுமுகம் கொலையை தடுத்து இருக்கலாம். திருத்தணியில் கள்ளச்சாரயம்  விற்பனை மற்றும் பாலியல் தொழில் படுஜோராக நடக்கிறது. அதை தடுக்காமல் திருத்தணி போலீஸார் வேடிக்கைப் பார்க்கின்றனர். ஆறுமுகம் கொலை நடந்தபோது கட்சியினரை சமரசப்படுத்தவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றனர். ஆனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்  மீதே வழக்கு போடப்பட்டுள்ளது என்றால் என்ன நியாயம் இருக்கிறது. திருத்தணி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாம்சன், தி.மு.கவினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். தி.மு.கவினர் கள்ளமார்க்கெட்டில் மது விற்பதைத் தடுக்காமல் இன்ஸ்பெக்டர் சாரதி அமைதியாக இருக்கிறார். ஆறுமுகம் கொலையில் குற்றவாளியாக தேடப்படும் தி.மு.க பிரமுகர் கிரனை ஏன்  போலீஸார் கைது செய்யாமல் இருக்கின்றனர். அதற்கு மு.க.ஸ்டாலின் எஸ்.பியிடம் போனில் பேசியிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. போலீஸாரின் மெத்தனப்போக்கால் திருத்தணி நகரம் கொலை நகரமாக மாறிவிட்டது" என்றார்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆறுமுகம் கொலை நடந்தவுடன் அ.தி.மு.கவினர் திருத்தணியில் கடையை அடைக்கச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்டனர். அதை டி.எஸ்.பி. ஈஸ்வரன் தடுத்தபோது அவரையும், சில போலீஸாரையும் அ.தி.மு.கவினர் உருட்டுக்கட்டையால் தாக்கினர். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் பாரபட்சமின்றி அரி எம்.பி உள்பட 17 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்"என்றார்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சாம்சனிடம் போனில் பேச முயன்றோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

- எஸ். மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close