Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க-வுக்கு 'தண்ணி' காட்டும் திருநாவுக்கரசர்

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்றதுமே பல்வேறு மாற்றங்களைக் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்டு வருகிறார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அதிரடி நடவடிகை எடுத்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்குச் சென்று, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் திருநாவுக்கரசர்.  திராவிட பாரம்பரியத்தில் இருந்து, தனிக்கட்சி தொடங்கி, பின்னர் பல கட்சிகளுக்குச் சென்று, கடைசியாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானதாலோ என்னவோ, திராவிடக் கட்சிகளைப் போன்றே காங்கிரஸ் கட்சியையும் அவர் வழிநடத்தத் தொடங்கி விட்டாரோ என்ற ஐயம் எழாமல் இல்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே மாநில அரசியலில் மிகப்பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், அப்போலோ சென்று, முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு வந்த பின்னர், நிலைமை மாறியது. முதல்வர் ஜெயலலிதா, நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ அளித்த அறிக்கையால், தமிழகத்தில் நிர்வாகப் பணிகள் தேங்காமல் நடைபெற ஏதுவாக, தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும் அல்லது முதல்வர் வகிக்கும் இலாகாக்களை மூத்த அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், தமிழகத்தில் தற்காலிக முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று, தி.மு.க-வின் கருத்துக்கு மாறான கருத்தை திருநாவுக்கரசர் வெளிப்படுத்தினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி என காங்கிரஸ் கட்சியை தி.மு.க இணைபிரியா கூட்டணியாகக் கொண்டுள்ளது. என்றாலும், தி.மு.க-வின் நிலைப்பாட்டுக்கு எதிர்மறையான கருத்துகளை திருநாவுக்கரசர் அண்மைக்காலமாக கூறிவருகிறார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்தமுறை  காங்கிரசை ஓரங்கட்டும் முயற்சியை தி.மு.க பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கையிலெடுத்தார். த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனை கூட்டணியில் கொண்டு வந்து, காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுக்க ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சி புஸ்வானமாகியது. இந்த சூழலில்தான், யாரும் எதிர்பார்க்காத வகையில், அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அப்போலோ வந்து, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், ஜெயலலிதா பூரண நலம் பெற தனது ஆதரவையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவையும் தெரிவித்துச் சென்றார். ராகுல்காந்தியின் அப்போலோ விசிட், தி.மு.க-வை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தங்களுக்குப் போதிய இடங்களைத் தி.மு.க ஒதுக்கவில்லை என்ற அங்கலாய்ப்பிலேயே காங்கிரஸ் கட்சியினர் உள்ளனராம். அதன் எதிரொலியாகவே, சத்தியமூர்த்தி பவனில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர் என்ற தகவல் வெளியானது. எனினும், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும் என்று திருநாவுக்கரசர்  அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்த தே.மு.தி.க, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம்பெறும் என கடைசிவரை காத்திருந்த தி.மு.க, மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க இணைந்ததும் கடும் கோபம் அடைந்தது. 


இந்த சூழலில், திருநாவுக்கரசர்  திடீரென்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சென்னையில் சந்திக்க திட்டமிட்டிருப்பது தி.மு.க-வுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், விஜயகாந்த்-ஐ மரியாதை நிமித்தமாக சந்திக்க இருப்பதாக, இந்த சந்திப்பை கூறிக் கொண்டாலும், இதன்மூலம் தி.மு.க-வுக்கு மேலும் ஒரு ஷாக் கொடுக்க திருநாவுக்கரசர் திட்டமிட்டிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.  உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் விரும்பிய கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெறுவதற்கான ஒரு யுத்தியாகவும் திருநாவுக்கரசர் - விஜயகாந்த் சந்திப்பை எடுத்துக்கொள்ளலாம். அல்லது  தி.மு.க கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறி தே.மு.தி.க -வுடன் புதிய கூட்டணி உருவாவதற்கான சாத்தியங்களும்  திருநாவுக்கரசர் - விஜயகாந்த் சந்திப்பின்மூலம் ஏற்படலாம் என்பதையும் மறுத்து விட முடியாது.

- சி.வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ