Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளங்கோவனுக்கு ராகுல் எச்சரிக்கை..! டெல்லியில் நடந்த பஞ்சாயத்து...!

மிழக காங்கிரஸ் தலைவராக 2014-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி நியமிக்கபட்ட ஈ.வி. கே.எஸ். இளங்கோவன், கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகளை வாங்கினார்.  இந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்ய 27 பேர் கொண்ட குழு அமைத்து வேட்பாளர்களை தேர்வு செய்தார். இதில்  எட்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால், இளங்கோவன் மீது  டெல்லி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.

 தேர்தல் முடிந்தவுடன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்திக்க முயன்ற இளங்கோவன், அவர்களைச் சந்திக்க அனுமதி கிடைக்காததால்,  ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். ராஜினமா கடிதத்தை, ராகுல் காந்தியிடம் இளங்கோவன் கொடுத்து விட்டார் என்ற தகவல் வெளியான நிலையில், முதலில் அதை மறுத்த இளங்கோவன், பின்னர் தனது ராஜினாமாவை வெளிப்படையாக அறிவித்தார். இவர் ராஜினாமாவால் மாநில தலைமை பதவி காலியானது.

தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமிக்கலாம் என டெல்லி மேலிடம் ஆலோசனையில் ஈடுபட்டது. இதில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், சுதர்ஸன நாச்சியப்பன், எச். வசந்தகுமார், டாக்டர் செல்லகுமார், பீட்டர் அல்போன்ஸ்,ஜே.எம்.ஹாரூண், மாணிக் தாகூர், ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. கடைசியாக திருநாவுக்கரசர் பெயரும், சுதர்ஸன நாச்சியப்பன் பெயரும் மாநில தலைவருக்கான சாய்சில் இறுதிப் பட்டியலில் கொண்டுவரப்பட்டது. சுதர்ஸன நாச்சியப்பன் பெயரை இளங்கோவன் ஆதரித்தார்.  திருநாவுக்கரசரை, சிதம்பரம் தரப்பு ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தது. இறுதியாக ராகுல் காந்தி தனக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் தமிழக அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து, திருநாவுக்கரசரை நியமித்தால், திராவிடக் கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியும் என்று முடிவு செய்து, இளங்கோவன் ராஜினாமா செய்து மூன்று மாத காலத்திற்கு பிறகு திருநாவுக்கரசரை தமிழக தலைவராக அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி, கட்சி வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்படுவதாக ராகுல் காந்திக்கு தகவல் போய் உள்ளது. ஏன் என்றால், தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்ககூடிய 61 மாவட்ட தலைவர்களில் 40 பேர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். இவர்களை வைத்துக் கொண்டு கட்சியை நடத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக திருநாவுக்கரசர் தரப்பிலும் டெல்லிக்கு புகார் கடிதங்கள் பறந்தன.

சமீபத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திருநாவுக்கரசர் தலைமை வகித்தார் . இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள் உள்ள கோஷ்டி மோதல்களை மறந்து, திருநாவுக்கரசருக்கு ஆதரவு என்பதை விடவும், காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பங்கேற்றனர். ஆனால் இந்தப் போராட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பு மட்டும் கலந்துகொள்ளவில்லை.

தி.மு.க வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உரசல் ஆரம்பித்துள்ள நிலையில், டெல்லி காங்கிரஸ் மேலிடம் திருநாவுக்கரசரையும், இளங்கோவனையும் டெல்லிக்கு அழைத்தது. அக்டோபர் பதினாறாம் தேதி ராகுல் காந்தியை திருநாவுக்கரசர் பார்த்துள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்துள்ளார். அப்போது இளங்கோவன் கோஷ்டியினரின் ஒத்துழையாமை குறித்து ராகுலிடம் திருநாவுக்கரசர் புகார் கூறியதாக தெரிகிறது.

அதை தொடர்ந்து மறுதினம் இளங்கோவனை  சந்தித்துள்ளார் ராகுல். அப்போது இளங்கோவன் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி கடும் அதிருப்தி தெரிவித்தார். "மாநில தலைமையை அனுசரித்து போங்கள்"  என்று அப்போது அறிவுறுத்தினார். இளங்கோவனும் அதற்கு ஓ.கே. சொல்லிவிட்டார். திருநாவுக்கரசரையும், இளங்கோவனையும் டெல்லிக்கு அழைத்து ராகுல் செய்து வைத்த பஞ்சாயத்துதான், இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே ஹாட் டாப்பிக்காக உள்ளது. 

- எஸ்.முத்துகிருஷ்ணன். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ