Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

100-க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபக்‌ஷே வாரிசுகள் மீது பாலியல் புகார்...!

  

லங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் போரில் இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை உலக நாடுகள் பலவும் கண்டித்த நிலையில், ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கும், ராஜபக்‌ஷே மூளையாக செயல்பட்டார் என்பது வெளிப்படையாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்ரி பால சிறிசேன இலங்கை அதிபராக பொறுப்பேற்றார். அதன் தொடர்ச்சியாக, இலங்கை அதிபராக ராஜபக்‌ஷே பதவி வகித்தபோது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிகழ்த்திய மோசடிகள் மற்றும் ஊழல் சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. ராஜபக்‌ஷே-வின் செயல்பாடுகள் குறித்து, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். பொன்சேகாவின் குற்றச்சாட்டு ராஜபக்‌ஷே-க்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், ராஜபக்‌ஷே அமைச்சரவையில் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அவரது சகோதரர் பசில் ராஜபக்‌ஷே, பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருந்த கோத்தபய ராஜபக்‌ஷே ஆகிய இருவர் மீதும் ஊழல் வழக்குகள் பாய்ந்தன. இலங்கை அரசின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ராஜபக்‌ஷே-வின் மகன்களான யோஷிதா பக்‌ஷே, நமல் பக்‌ஷே, ரோஹிதா பக்‌ஷே ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து  நமல் பக்‌ஷே, யோஷிதா பக்‌ஷே ஆகிய இருவரும் கடந்த ஜுலை மாதம் கைது செய்யப்பட்டனர்.

 நிதி மோசடி புகாரில்  ராஜபக்‌ஷே  மகன்கள் கைது!

இந்தியாவைச் சேர்ந்த கிரிஷ் குரூப் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 2013-ல் இலங்கை அரசுடன் சுமார் 650 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான ஒப்பந்தம் செய்துகொண்டது. இலங்கையின் முக்கிய இடங்களில் உள்ள நிலங்களை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்காக, அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்‌ஷேவின் குடும்பத்தினருக்கு பெருமளவு லஞ்சப் பணம் கைமாறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த இலங்கையின் நிதி குற்றவியல் பிரிவு போலீசார், 450 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கைமாறியுள்ளதாக தெரிவித்து, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நமல் பக்‌ஷே-வைக்  கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ராஜபக்‌ஷே அதிபராக இருந்தபோது நமல் பக்‌ஷே எல்லை மீறி ஆட்டம் போட்டதாக, அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் நமலின் சகோதரர் யோஷிதா பக்‌ஷே, தொலைக்காட்சி சேனல் தொடர்பான நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

நீலப்படையா ? பாலியல் அமைப்பா ?

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நமல் பக்‌ஷே, நீலப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பை ராஜபக்‌ஷே அதிபராக இருந்த தைரியத்தில், தனி அரசாங்கம் போல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நமல் பக்‌ஷே மற்றும் அவரது சகோதரர்கள் யோஷிதா பக்‌ஷே, ரோஹிதா பக்‌ஷே ஆகிய மூவரும், தந்தை அதிபராக இருந்தபோது, ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரை மறைக்க, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீலப்படையில் வேலை கொடுத்துள்ளனர். பல பெண்களைக் கடத்திச் சென்றும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராஜபக்‌ஷே மகன்கள் மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உருமயா என்ற சிங்கள அமைப்பு  ஏற்கெனவே புகார் கூறியிருந்தது.

ஆனால், ராஜபக்‌ஷே-வின் செல்வாக்கு மற்றும் அரவது மகன்களின் மிரட்டலால் எந்த பெண்ணும் புகார் கொடுக்க முன்வராத காரணத்தால் அந்த அமைப்பினர் செய்வதறியாது திகைத்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று நமல் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது  நமல் மீது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள தமிழர்களிடம் விசாரித்தபோது, கண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். அந்த புகாரில் பிரபல தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். புகாரை அடிப்படையாக வைத்து போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலில் விசாரணை நடத்தியதில் வாரத்துக்கு ஒருமுறை நமல் பல பெண்களுடன் வந்து தங்கிச் சென்றதாக கூறினர். மேலும் இந்தப் புகாரில் ராஜபக்‌ஷே-வின் மற்ற இரு மகன்களுக்கு தொடர்பு  இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார்கள். அதேநேரத்தில் அவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளதாகவும் கூறுகிறார்கள். காரணம் நமல், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அமைதிகாத்து வருவதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அங்குள்ள தமிழ் எம்பி-க்களை தொடர்பு கொண்டபோது, "முழுமையான தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை கிடைத்ததும் பேசுகிறோம்" என்கிறார்கள்.

சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்  ! 

ராஜபக்‌ஷே மகன்கள் மீதான பாலியல் புகார் குறித்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பேசினோம். "நீலப்படை அமைப்பை நடத்தி வருகிறார் நமல், தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலத்தை அபகரிக்கும் வேலைகளை முன்னின்று செய்தவர். ராஜபக்‌ஷே மீது மட்டுமல்ல, அவருடைய மகன்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். ராஜபக்‌ஷே மீது புகார் கூறி பாரபட்சமின்றி நடப்பதாக அதிபர் சிறிசேன காட்டிக் கொள்கிறாரே தவிர, அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அந்த அரசு எடுக்காது. அங்குள்ள பெண்களுக்கான நீதி என்பது உள்நாட்டு அரசால் கிடைக்காது. இதனை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும். அதேபோன்று தமிழ் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? தமிழக அரசும் இங்கிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பி ஐ.நா.வில் ராஜபக்‌ஷே-வின் மகன்கள் மீதான புகாரை பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

தமிழர்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் ராஜபக்‌ஷேவின் மகன்களை கட்டாயம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

 - கே. புவனேஸ்வரி 

படம் : மு.நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ