Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வரை சந்திக்க விடாமல் ஆளுநரைத் தடுக்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது? #ApolloUpdates

மிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஓடிவிட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தவிர்த்து, அவரை இதுவரை யாரும் நேரில் பார்க்கவில்லை. மாநில அமைச்சர்கள் அப்போலோவின் முதல் தளத்துக்கே போகமுடியவில்லை. மத்திய அமைச்சர்கள் இரண்டாவது தளத்தோடு திரும்பிவிடுகின்றனர். இரண்டுமுறை மருத்துவமனைக்கு வந்த தமிழக கவர்னர்  வித்யாசாகர் ராவ், முதலமைச்சரின் நிலையை நேரில் பார்த்ததாக சொல்லவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்து வெளிவரும் அறிக்கைகளில், மேதகு ஆளுநர், முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம், முதலமைச்சர் உடல்நிலை பற்றி விசாரித்தார்” என்றுதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு, பிரதமர் மோடியே வந்தாலும், ஜெயலலிதாவைப் பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மாதக்கணக்கில் இதுபோல் ரகசியமாக இருக்க முடியுமா? ஒரு மாநில முதலமைச்சரை சந்திக்கவிடாமல் கவர்னரை யாராவது தடுக்க முடியுமா? நிலைமை இப்படியே தொடரும் நிலையில், சட்டம் அதற்கு என்ன தீர்வை முன்மொழிகிறது? என்பது பற்றி, மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமியிடம் பேசினோம். 

சட்டவிரோதம்!

பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரிக்க வந்தால், அவர் நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், கவர்னர் நேரில் பார்த்த பிறகே, அறிக்கை அளிக்க முடியும். ஒரு முதலமைச்சரைப் பார்க்க வரும்போது, கவர்னரை யாரும் தடுக்க முடியாது. அப்படித் தடுத்தால், அது சட்ட விரோதம்.

ஒரு பொது ஊழியர், அரசாங்க ஊதியம் பெறுகிறார். அப்படி அரசாங்கத்தில் இருந்து ஊதியம் பெறுபவர், ஒருபோதும் ரகசியமாக இருக்க முடியாது; மாதக்கணக்கில் மறைந்து இருக்க முடியாது. ஆனால், அரசாங்க ஊதியம் பெறும், முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது அந்த நிலையில் இருக்கிறார். அவரை கவர்னரே போய்ப் பார்க்க முடியவில்லை. சாதரணமாக ஒரு அரசாங்க ஊழியர் மாதக்கணக்கில் மருத்துவ விடுப்பில் இருந்தால், அந்த ஊழியரை ‘மெடிக்கல் போர்டு’க்கு அனுப்புவார்கள். அவர் நேரில் ஆஜராகமுடியவில்லை என்றால், அவருக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றிய அறிக்கையை மெடிக்கல் போர்டுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பி, “மருத்துவவிடுப்பில் இருக்கும் அரசு ஊழியர், அவருடைய பணியைத் தொடர தகுதி உள்ளவரா?” என்று விளக்கம் கேட்கப்படும். அதை பரிசீலிக்கும் மெடிக்கல் போர்டு, மேற்கொண்டு பணியைத் தொடர தகுதி உள்ளவர் என்று சான்று அளித்தால், அதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். மாறாக, அந்த ஊழியரால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று அறிக்கை கொடுத்தால், அந்த ஊழியரை ‘டிஸ்மிஸ்’ செய்வார்கள். 

மெடிக்கல் போர்டு’ ரிப்போர்ட்!

மாநில முதலமைச்சருக்கும் இதே நடைமுறை பொருந்தும். ஆனால், இந்த நடைமுறைகள் இப்போது மீறப்படுகிறது. கவர்னர் வித்யாசாகர் இரண்டுமுறை அப்போலோ மருத்துவமனைக்குப் போனபோதும், அவரால், முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை. இது சட்டவிரோதம். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, மெடிக்கல் போர்டு ரிப்போர்ட்டை இன்னும் கவர்னர் ஏன் வாங்காமல் இருக்கிறார்? இப்போதும் ஜெயலலிதா அரசாங்க ஊதியம் பெறும் பொது ஊழியர். அதனால், உடனடியாக கவர்னர் ‘மெடிக்கல் போர்டு’ ரிப்போர்ட் வாங்க வேண்டும். அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனிமேல் ஜெயலலிதாவால் அவருடைய பணியைத் தொடர முடியாது என்று மெடிக்கல் போர்டு அறிக்கை கொடுத்தால் உடனடியாக அவரை கவர்னர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமி தெரிவித்தார்.

இந்த விவகாரம்பற்றி அ.தி.மு.க மூத்த தலைவர்கள் தரப்பில் பேசினோம். முதலமைச்சர் சுயநினைவுடன் இருக்கும்போதுதான், புரோட்டோகால் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலமைச்சரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும்போது, அவருடைய மருத்துவர்கள் சொல்லும் அறிவுரைப்படிதான் கவர்னரோ, பிரதமரோ நடந்து கொள்ள வேண்டும். சட்ட நடைமுறைகளைத் தாண்டி இது அடிப்படையான மனிதாபிமான விஷயம். அதன் அடிப்படையில்தான், கவர்னர் செயல்படுகிறார். மேலும், இங்கு முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமறைவாகவோ ரகசியமாகவோ இல்லை. அவர் உடல்நிலை பற்றி வெளிப்படையாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை கொடுக்கிறது. கவர்னரிடம், அம்மாவுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் வெளிப்படையாக எல்லா விபரங்களையும் தெரிவிக்கின்றனர். அதனால், இதில் எந்தச் சிக்கலும் இல்லை. மத்திய அரசும் அதைப் புரிந்து கொண்டுதான் செயல்படுகிறது. விளம்பரத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், இதுபோல் அர்த்தமற்று பேசிக் கொண்டிருக்கின்றனர். 

- ஜோ.ஸ்டாலின்.

எடிட்டர் சாய்ஸ்