Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஏ தில் ஹே முஷ்கில்' - ராஜ் தாக்கரேவின் மிரட்டலுக்கு பணிந்த மஹாராஷ்ட்ரா அரசு

ஹிந்தியில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ள 'ஏ தில் ஹே முஷ்கில்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வர இருந்தது. இத்திரைப்படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாவத் கான் என்னும் நடிகர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செப்டம்பர் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் உரி ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய-பாகிஸ்தானிடையே ஒரு போர் சூழ்நிலை நிலவியது. இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் சிறப்பு பிரிவினர் எல்லை தாண்டி சென்று தீவிரவாதிகள் இருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர், அதில் சுமார் 35 தீவிரவாதிகள் இறந்ததாக கூறப்பட்டது .

தேசிய அரசியலை பொறுத்தவரையில் இந்திய-பாகிஸ்தான் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் சிவசேனா எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது. இருநாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை  நடத்திய போதுகூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் கரண் ஜோஹரின் இயக்கத்தில் வெளிவர இருந்த 'ஏ தில் ஹே முஷ்கில்' திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என்று மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா அறிவித்தது, இப்படம் வெளிவரும் திரையரங்குகள்  மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்தனர்.  

நேற்று மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைக்கும் தயாரிப்பாளர்கள் 'அபராதமாக'  ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடைபெற்று முடிந்த பேச்சுவார்த்தையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இனி தனது படங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று உறுதிபட கூறியதன் பின்பு ராஜ் தாக்கரே இத்திரைப்படத்தை வெளியிட இனி எதிர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

288 உறுப்பினர்கள் கொண்ட மஹாராஷ்ட்ரா சட்டசபையில் மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவிலிருந்து ஒரே ஒரு உறுப்பினர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில சட்டசபையில் ஒரு உறுப்பினரை வைத்திருக்கும் ஒரு கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிப்பது சரியா அல்லது இந்திய அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து சுதந்திரத்தை காப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

ஒரு திரைப்படத்தை வெளியிடலாமா வேணாமா? எந்த வயதுக்கு உட்பட்டவர் பார்க்க அனுமதிக்க வேண்டும்? என்று முடிவு செய்வது மத்திய தணிக்கைத் துறை தான், அது சட்டப்படி அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. அதனைத் தவிர வேறு எந்த ஒரு நபரோ, அமைப்போ ஒரு திரைப்படத்தின் வெளியிட முடிவு செய்ய வேண்டியது அதன் கடமை. அதனை மீறி எந்த ஒரு தரப்பிலிருந்தும் ஒரு திரைப்படத்தை வெளியிட தடைசெய்ய மிரட்டல் வரும்போது ஒரு அரசாங்கத்தின் கடமை திரைபடத்தை வெளிவரச் செய்ய வைப்பதுதான், அது கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் ஒரு செயலாகும்.

இச்சம்பவம் 2013-ம் ஆண்டு கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு ஏற்பட்ட அதே பிரச்னையை நினைவூட்டுகிறது. கமல் இயக்கி நடித்த 'விஸ்வருபம்' வெளிவர இருந்த சில தினங்களுக்கு முன் திரையரங்கங்களுக்கு விடப்பட்ட மிரட்டல் காரணமாகவும், இஸ்லாமிய சமுதாயத்தினரை தவறாக சித்தரிக்கின்றது என்று தமிழ்நாடு தவுஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததின் காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் 'விஸ்வரூபம்' வெளிந்த் தடை செய்யப்பட்டது.

பொதுவாக செய்தியாளர்களை சந்திக்காத தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு செய்தியாளர் சந்திப்பை கூட்டி 'விஸ்வரூபம்' படம் வெளிவர ஏன் தடை செய்யப்பட்டது என்று விளக்கமளித்தார். பின்னர் தமிழக உள்துறை செயலாளரின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட காட்சிகளை நீக்க சம்மதித்தபின் 'விஸ்வரூபம்' வெளியிடப்பட்டது. தமிழக அரசு 'விஸ்வரூபம்' பிரச்னையை கையாண்ட விதம் பல கேள்விகளை எழுப்பியது.

சில தினங்களுக்கு முன்  'ஏ தில் ஹே முஷ்கில்' படத்தின் இயக்குநர் கரண் ஜோஹர் வீடியோ மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து மன்னிப்பும் கேட்டார். அதில் அவர் கூறியதாவது, "இப்படத்தை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கினோம், அப்போது இந்தியா-பாகிஸ்தான் அரசுகளுக்கிடையே அமைதியான ஒரு சூழல் நிலவியது மேலும் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் இருந்தது, இதனை மனதில் வைத்துதான் பாவத் கான் இப்படத்தில் ஒப்பந்தம்  செய்யப்பட்டார். அனால் இப்போது நிலவும் சூழ்நிலை மிகவும் மாறானது. இத்திரைப்படத்துக்காக 300 தொழில்நுட்ப கலைஞர்கள் வியர்வை சிந்தி உழைத்துள்ளனர், அவர்கள் உழைப்பு வீணாகக்கூடாது. யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறினார். அவர் பேசியது ஒரு பணயக்கைதி தன்னை விடுதலை செய்ய மன்றாடுவது போல் இருந்ததாக பலர் கருத்து கூறியிருந்தினர்.

ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரான அவரையே மன்றாட வைத்துள்ளனர். அவர் என்ன குற்றம் செய்தார்? பாகிஸ்தான் தற்போது நிலவும் சூழலில் எதிரி நாடாக பார்க்கப்படுகிறது. ஆனால் நிலைமை அப்படியே இருக்கப்போவதில்லை, கார்கில் போருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இங்கு கிரிக்கெட் விளையாடவில்லையா? 2014-ல் பாஜக வென்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைக்கப்படவில்லையா? நவாஸ் ஷெரீபின் பிறந்த நாளன்று மோடி இஸ்லாமாபாத்  சென்று அவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லையா?

அண்டை நாட்டுடன் இப்படிப்பட்ட உறவுதான் வைத்துக்கொள்ளவேண்டும் என்று எப்படி ஒரு மாநில கட்சி முடிவு செய்யமுடியும்? ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அரசாங்கத்தால் தான் முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர ஒரு சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.

அரசியல், சமுதாய மற்றும் மத அமைப்பினரின் அழுத்தம் காரணமாக இந்தியாவில் பல திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்திரா நெருக்கடி கால நிலையில் நடந்த சம்பவங்களை வைத்து எடுத்த 'கிஸ்ஸா குர்ஸி கா' என்னும் ஹிந்தி திரைப்படம் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 'டா வின்சி கோடு' என்ற ஆங்கில திரைப்படம் கிறித்துவ அமைப்பினரின் எதிர்ப்பினால் தடை செய்யப்பட்டது. 'ஆரக்ஷன்' என்னும் திரைப்படம் உத்தரப்பிரதேசத்தில் தடை செய்யப்பட்டபோது 'தணிக்கைத் துறையால் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை வெளியிடத் தடை செய்ய முடியாது' என்று திட்டவட்டமாக கூறியது உச்ச நீதிமன்றம். இடஒதுக்கீட்டை விமர்சனம் செய்யும் அத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு வந்ததால் அம்மாநில அரசாங்கம் அதனை தடை செய்தது. மேலும் அவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் "சான்றிதழ் அளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும் மாநில  அரசுக்கு உள்ளது" என்று கூறியிருந்தது.
 
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்தியது அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தான். தணிக்கைத் துறையால்  சான்றிதழ் அளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்துக்கு எதிர்ப்பு வரும்போது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்காமல், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய அம்மாநில முதல்வரே ராஜ் தாக்கரேவின் மிரட்டலுக்கு பணிந்தது போல் நடந்ததுகொண்டது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பெருபான்மையாக இருக்கும் 'மராட்டிய' சமூகத்தினர் 'அமைதி ஊர்வலம்' மேற்கொண்டு வருகின்றனர். தங்களுக்கென இடஒதுக்கீடு வேண்டி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் மாநிலம் எங்கும் பரவி வருகிறது. எந்த ஒரு தலைமையும் இல்லாமல் நடந்து கொண்டு வரும் இந்த ஊர்வலம் வலுவடைய ஆரம்பித்துள்ளது, இதில் பங்கு கொள்ளும் 'மராட்டிய' சமூகத்தினர் பாஜக, காங்கிரஸ், சிவாசேனா என அனைத்துக் காட்சிகள் மீதும் கோபத்தில் உள்ளார். அனைத்து கட்சிகளும் தங்களுக்கு இடஒதுக்கீடு தரவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை திசைதிருப்பும் விதமாக இந்த திரைப்படத்தின் மூலம் சர்ச்சை எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக பார்க்கப்பட்ட ராஜ் தாக்கரே தனிக் கட்சி ஆரம்பித்தபின் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை, அதனால் அவர் இது மாதிரியான சர்ச்சைகள் மூலம் ஆதாயம் தேடுவதாகவும்  குரல்கள் எழுந்துள்ளது.

அரசியல் ஒருபுறமிருக்க எக்காரணத்தை கொண்டும் எந்த ஒரு கலைஞனோ அல்லது ஒரு படைப்போ இதுபோல் தேவையற்ற பிரச்சனையால் சிக்கி தவிக்கக் கூடாது, கலை எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.

- க.ராஜவேலு
மாணவ பத்திரிக்கையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close